பதிவு செய்த நாள்
01 நவ2017
04:50
புதுடில்லி : ‘பெடரல் ரிசர்வ்’ என்றழைக்கப்படும், அமெரிக்க மத்திய வங்கியின் தலைமை பொறுப்புக்கு, இந்திய ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர், ரகுராம் ராஜன் பொருத்தமானவர் என, பிரபல பாரன்ஸ் இதழ் தெரிவித்துள்ளது.அமெரிக்க மத்திய வங்கியின் தலைமை பொறுப்பில் இருக்கும், ஜேனட் ஏலன் பதவிக்காலம், அடுத்த ஆண்டுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து, அப்பதவியை அடுத்து ஏற்க இருக்கும் நபர் யார் என்பதை, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப், விரைவில் அறிவிக்க கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.இந்நிலையில், பாரன்ஸ் இதழ், ‘ரகுராம் ராஜனை, ஏன் தேர்ந்தெடுக்கக் கூடாது?’ என, கேட்டுள்ளது. ‘விளையாட்டுகளுக்கான அணியை அமைக்கும் போது, உலகளவிலான, விளையாட்டு வீரர்களை தேர்ந்தெடுப்பது போல, மத்திய வங்கியும், ஏன் அது போல செய்யக்கூடாது?’ என, கட்டுரை மூலம், கேள்வி எழுப்பி இருக்கிறது. கூடவே, ரகுராம் ராஜனின் சாதனைகள் குறித்தும், விரிவாக பட்டியலிட்டு உள்ளது. ‘நோபல் பரிசு கிடைக்கும் என, எதிர்பார்க்கப்பட்டவர்’ என்றும் தெரிவித்துள்ளது.‘அமெரிக்காவில் பிறந்தவராக இல்லாவிட்டாலும், தாராளமாக, அவரை தலைவராக நியமிக்கலாம்’ என்றும், அக்கட்டுரை தெரிவித்துள்ளது. அதற்கு உதாரணமாக, கனடாவில் பிறந்த, மார்க் கார்னி, பேங்க் ஆப் இங்கிலாந்து தலைமை பொறுப்பேற்றது பற்றியும் எடுத்துக்காட்டி உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|