பதிவு செய்த நாள்
24 ஏப்2018
03:33
மதுரை: நம்மிடம் எந்த குறை இருந்தாலும், மன வலிமையால் அதை எப்படி வெல்லலாம் என்பதை பல்வேறு உதாரணங்கள் மூலம் எடுத்துக் காட்டி அந்த பேச்சாளர் பேசிக்கொண்டிருக்க, அதை கேட்டுக்கொண்டிருந்த மாணவர்களுக்கு, தன்னம்பிக்கை தானாகவே வேரூன்றிக்கொண்டிருந்தது.மதுரை, டி.வி.ஆர்.நகர், ’சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி மற்றும் ஆர்.எல்.இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ்’ கல்வி நிறுவன, 21 வது பட்டமளிப்பு விழாவில் உரையாற்ற வந்திருந்த கண்ணன் கணேஷ் என்பவர்தான் அப்படி பேசிக்கொண்டிருந்தார்.தெற்கு பிரான்சில் உள்ள, பிரபல, சி.எம்.ஏ. சி.ஜி.எம்., கப்பல் நிறுவனத்தின், இந்திய சேவை பிரிவு நிர்வாக இயக்குனராகவும், தலைமை நிதி அலுவலராகவும் பணியாற்றி வருகிறார், கண்ணன் கணேஷ்.தன்னம்பிக்கை இருந்தால் எப்படி முன்னேற்றமடையலாம், நம்மிடம் எத்தகைய திறமை உள்ளது என்பதை எப்படி அறிந்து, அதை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்தெல்லாம் விரிவாக பேசினார்.அத்துடன், அடித்தளம் நன்றாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், செவித்திறன் குன்றியபோதும் பீத்தோவன் இசையிலும், ஆட்டிசம் பாதிப்பு இருந்ததையும் பொருட்படுத்தாமல் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அறிவியலிலும் எப்படி சாதனை படைத்தனர் என்பதை எல்லாம் அவர் சுட்டிக் காட்டினார்.தொழில்நுட்ப புரட்சி நிலவும் இக்காலகட்டத்தில், வாழ்க்கையின் மதிப்பீடுகள், நன்னெறிகளையும் மறந்துவிடக்கூடாது என்பதையும் மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார்.சொல்வதில் மட்டுமின்றி; சொல்வதை செய்து காட்டுவதிலும் சிறப்பானவராக இருக்கிறார், கண்ணன் கணேஷ்.நமது நாட்டுக்கு அந்நிய செலாவணியை பலவகைகளில் திரட்டி தருகிறார்... நம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி வருகிறார்.ஆதரவற்றோர், ஊனமுற்றோர் மற்றும் கிராமப்புற மக்களை அரவணைக்கும் வகையில், திஷா என்ற அறக்கட்டளை மூலம், பல சமூகப் பணிகளை ஆற்றி வருகிறார்.தனது நிறுவனத்தில் கிடைக்கும் லாபத்தின் பெரும் பகுதியை, இந்த அறக்கட்டளைக்காக ஒதுக்கி வருகிறார்.சேலத்தில் பிறந்த கண்ணன் கணேஷ், சி.ஏ., படித்து முடித்ததும், சென்னையில், டி.வி.எஸ்., நிறுவனத்தில் நிதி அதிகாரியாக சேர்ந்து, பின்னர் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு சுகாதார நிறுவனத்தில் பணி புரிந்தார். அடுத்து, ஜெர்மன் கப்பல் நிறுவனம் ஒன்றில் சேர்ந்த இவர், தற்போது பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த, சி.எம்.ஏ. சி.ஜி.எம்., நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|