பதிவு செய்த நாள்
18 ஜூன்2018
06:57
ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கும் உலக கோப்பை கால்பந்து விளையாட்டு போட்டி முதலீட்டு நோக்கிலும் முக்கிய பாடங்களை கற்றுத்தருவதாக வல்லுனர்கள் கருதுகின்றனர்.
நிதி திட்டமிடல் என்பது எண்ணிக்கைகளை மட்டுமே கொண்டது அல்ல. முதலீடு தரும் பலன்களுக்கான கணக்கு முக்கியம் என்றாலும், நீண்ட கால நோக்கில் செல்வ வளத்தை உருவாக்க, வலுவான நிதிக்கொள்கைகளையும், கோட்பாடுகளையும் கடைப்பிடிக்க வேண்டும். நிதி விஷயத்தில் அடிப்படை அம்சங்களை தவறாமல் பின்பற்றுவதன் மூலம் இலக்குகளை அடையலாம்.
முதலீட்டிற்கான அடிப்படை பாடங்களை நிதித்துறையில் இருந்து மட்டும் அல்ல, மற்ற துறைகளில் இருந்தும் கற்றுக்கொள்ளலாம். அந்த வகையில், உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்திழுத்திருக்கும், உலக கோப்பை கால்பந்து விளையாட்டில் இருந்து முக்கிய முதலீட்டு பாடங்களை கற்றுக்கொள்ளலாம் என வல்லுனர்கள் கருதுகின்றனர்.
எளிமையான விதிகள் :
கால் பந்து சர்வதேச அளவில் புகழ் பெற்ற விளையாட்டாக இருக்கிறது. கோடிக்கணக்கான ரசிகர்களை கவரும் வகையில் இருந்தாலும் கால்பந்து விளையாட்டு அடிப்படையில் எளிமையானது. ஒரு பந்து அதற்கு இலக்கு (கோல்)- அவ்வளவு தான் கால்பந்து விளையாட்டு. இதே போலவே முதலீட்டிற்கான விதிகளும் இலக்கு மற்றும் அதற்கான பாதையுடன் இருந்தால் போதுமானது. வேறு எந்த ஆடம்பரமான அல்லது சிக்கலான உத்திகளோ, வழிகளோ தேவை இல்லை.
அதே போல கால் பந்து போட்டியில் அணிகளின் வெற்றிக்கு நிர்வாகம் முக்கியம். சிறந்த மேலாளர்களும், நல்ல பயிற்சியாளர்களும் வெற்றிகரமான அணியை உருவாக்குகின்றனர். முதலீட்டிலும் நிர்வாகம் முக்கியம். பல வகையான முதலீடுகளை பொருத்தமான அளவில் தேர்வு செய்ய நிர்வாகம் உதவும். முதலீட்டை பொருத்தவரை நீண்ட கால நோக்கம் முக்கியம் என்கின்றனர். கால்பந்து விளையாட்டு இதற்கு ஊக்கமாக அமையும். கால்பந்து விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜமானது.
ஆனால் சிறந்த அணி தோல்வியில் துவண்டுவிடாமல் தனது அடிப்படையில் நம்பிக்கை கொண்டு விடாமல் முயற்சிக்கும். அதே போலவே பங்குச்சந்தையில் ஏற்றம் இறக்கமும் சகஜமானது. ஆனால் பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கம் பற்றி கவலைப்படாமல், இலக்கை அடிப்படையாக கொண்டு முதலீட்டை தொடர்வதன் மூலமே உரிய பலனை பெற முடியும். கால்பந்தில், கோல் அடிக்க முற்படும் வீரர்கள் போலவே, தற்காப்பு அரண் அமைக்கும் வீரர்கள் மற்றும் கோல்கீப்பர் முக்கியமானவர்கள். முதலீட்டை பொருத்தவரை, சமபங்கு போன்றவை ஸ்டிரக்கராக அமையும் என்றால், கடன் சார் முதலீடு, வைப்பு நிதி போன்றவை தற்காப்பு அளிக்கும்.
ரிஸ்க் பாதுகாப்பு :
அதே போல நட்சத்திர வீரர்களை கொண்டிருப்பதாலேயே ஒரு அணி கோப்பையை வெல்வதில்லை. 2014ல் கோப்பையை வென்ற ஜெர்மனி அணி சரியான கலவையில் வீரர்களை பெற்றிருந்தது. முதலீட்டிலும், நிதி இலக்கிற்கு ஏற்ப பொருத்தமான முதலீடுகளை பெற்றிருக்க வேண்டும். கால் பந்து விளையாட்டில் அதிகம் எதிர்பாக்கும் வீரர் எதிர்பார்த்த பலனை அளிக்காமல் போகலாம். முக்கிய வீரர்கள் சிவப்பு அட்டை பெற்று வெளியேறலாம். அதே போலவே முதலீடுகளிலும் ரிஸ்க் எனப்படும் பலவித இடர்கள் உள்ளன. இவற்றை சமாளிக்க முதலீட்டு பரவலாக்கம் உதவும். அவ்வாறு இருந்தால், எப்படி கால்பந்து விளையாட்டில் ஒரு சில வீரர்கள் சரியாக விளையாடத நிலையிலும், அணியாக வெற்றி பெற முடிகிறதோ அதே போல, முதலீட்டிலும் இலக்கை அடையலாம்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|