இரண்டு மாதங்களில் தங்கம் சவரனுக்கு ரூ.4,736 உயர்வு இரண்டு மாதங்களில் தங்கம் சவரனுக்கு ரூ.4,736 உயர்வு ...  ஆரோக்கிய சஞ்சீவனி காப்பீடு திட்டம் ஆரோக்கிய சஞ்சீவனி காப்பீடு திட்டம் ...
பெருங்காய டப்பா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 மே
2020
23:45

கொரோனா, கொள்ளை நோயால் பாதிக்கப்பட்ட பல குரல்கள் தொடர்ந்து ஒலித்தபடி இருக்கின்றன. ஏழை எளியவர்கள் முதல், மத்திமர்கள், குறு, சிறு, தொழில் முதலாளிகள் வரை பலரும் அரசின் நேரடி உதவியையே நாடுகின்றனர்.


கொரோனா பாதிப்பு மோசமானது தான், ஆனால், நம் சேமிப்புகளுக்கு என்ன ஆச்சு? சொந்தக் காலில் நிற்கும் தன்மைக்கு பாதிப்பு ஏன் ஏற்பட்டது?பொருளாதார தேக்க காலமான 2008ல், உலகமே துவண்டிருந்த நிலையில், இந்தியா கொஞ்சம் தெம்போடு தான் இருந்தது. வேலை இழப்புகள், பணப்பற்றாக்குறை ஏற்பட்டபோதும், நாம் சமாளித்தோம். அதற்குக் காரணம், நம் சேமிப்புகள். உலகமே வியப்போடு பார்த்தது. ஆனால், இன்று நிலைமை முற்றிலும் வேறாக இருக்கிறது.

என்ன ஆச்சு என்று தேடத் தொடங்கிய போது கிடைத்த தகவல்கள் ஆச்சரியம் அளிக்கின்றன.மொத்த உள்நாட்டு உற்பத்தி என்று எப்படி ஒரு மதிப்பீடு இருக்கிறதோ, அதுபோல், ‘மொத்த உள்நாட்டுச் சேமிப்பு’ என்றொரு அளவீடு இருக்கிறது.இதில் குடும்பங்களில் நடைபெறும் சேமிப்பு, தனியார் துறை மற்றும் பொதுத் துறையினர் செய்யும் சேமிப்புகள் ஆகியவை அடங்கும். இதை மொத்த உள்நாட்டு உற்பத்தியோடு ஒப்பிட்டு பேசுவது வழக்கம்.

கடந்த, 2007 நிதியாண்டில், பொருளாதாரத் தேக்கம் ஏற்படுவதற்கு முன்பு வரை நம் நாட்டின், மொத்த உள்நாட்டு சேமிப்பு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 36.8 சதவீதமாக இருந்தது. அது, 2012 நிதியாண்டில், 34.6 சதவீதமாகவும், 2019 நிதி ஆண்டில், 30.1 சதவீதமாகவும் சரிந்துபோனது.இதற்கு முன் இதேபோல் மிகப்பெரிய சரிவைக் கண்டது, 2003 நிதியாண்டில் தான்.இதில் மிக அதிகமானசரிவைச் சந்தித்தது, குடும்பச் சேமிப்புகள் தான்.


அதாவது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 2012 நிதியாண்டில், 22.5 சதவீதமாக இருந்த குடும்பச் சேமிப்புகள், 2019 நிதியாண்டில், 17.2 சதவீதமாகக் குறைந்துபோனது.இந்தப் புள்ளி விவரங்கள் ஒரு விஷயத்தைத் தான் சொல்கின்றன. 2008க்கு பிறகு நம் குடும்பங்களும் சரி, தனியார் துறை, பொதுத் துறை நிறுவனங்களும் சரி, சேமிப்புகளில் பெரும் ஆர்வம் காட்டவில்லை என்பதுதான்.அப்படியானால், சேமிக்கத்தக்க பணம் எங்கே போச்சு?

குடும்பச் சேமிப்புகளிலேயே இரண்டு கூறுகள் உண்டு. ஒன்று, நிதி முதலீடுகள். இரண்டு, சொத்துகளில் முதலீடு.கடந்த, 2009 முதல் தொடங்கிய சொத்துகளில் முதலீடு என்ற அம்சம், பெருமளவிலான கடன் கலாசாரத்தை ஏற்படுத்தியது. நம் ஆதிபழக்கமான சேமிப்பைக் கலைத்துப் போட்டது. கடந்த, 2008 பொருளாதாரத் தேக்கத்துக்குப் பின், பொதுத் துறை வங்கிகளின் கதவுகளைத் திறந்துவிட்டது, தேசிய முற்போக்குக் கூட்டணி அரசில் நிதியமைச்சராக இருந்த, ப.சிதம்பரம் தான்.


கட்டுமான நிறுவனங்களும் கார்ப்பரேட் நிறுவனங்களும் தான், அதன் மொத்த பயனையும் அடைந்தன. விளைவு, ரியல் எஸ்டேட் துறையில், நாடெங்கும் பெரிய பெரிய திட்டங்கள் முளைத்தன. அடிமனை மற்றும் அடுக்ககங்களில் விலைகள் விண்ணை முட்டின. இன்னும் விலை உயரும் என்ற நம்பிக்கையில், அப்பாவி மத்திய தர குடும்பத்தினர், வீட்டுக்கடன் சுழலில் வீழ்ந்தனர்.பணத்தை வங்கிகளில் சேமிப்பதை விடுத்து, அடிமனைகளிலும், அடுக்ககங்களிலும் கொட்டினர்.


சிறுகச் சிறுகச் சேமிப்பதை விட, மாதாந்திர தவணையாக இ.எம்.ஐ., கட்டுவது லாபகர மானது என்றும், அது தொலைநோக்குடைய முதலீடு என்றும் கருதினர். வருமானவரிச் சேமிப்பு கிடைப்பதோடு, இந்தக் கட்டடங்களும் வீட்டுமனைகளும் எதிர்காலத்தில் பலமடங்கு வருவாயை ஏற்படுத்திவிடும் என்று கனவு கண்டனர்.இன்னும் பலர் இதே நினைப்பில் தான் இருக்கின்றனர். அதற்காக இ.எம்.ஐ., செலுத்தி வருகின்றனர்.

ஆனால், 2013ல் நிலைமை தலைகீழ் ஆகி விட்டது. பெருநிறுவனங்களின் கடன்கள் ஒரு பக்கம் மோசமாகி, வாராக்கடன்கள் ஆக, தனிநபர்களும் கடன்பொறியில் சிக்கிய எலிகள் ஆயினர்.பல வீடுகள் இன்னும் கட்டி முடிக்கப்படவில்லை. கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை மறுமுறை விற்பனை செய்ய முடியவில்லை.விற்பனை செய்யப் போனால், அடிமாட்டு விலைக்குக் கூட வாங்க ஆளில்லை. போதிய வாடகை வருவாயையும் அது ஈட்டித் தரவில்லை. உண்மையில், இந்தப் பணம் அத்தனையும் பயனற்று முடங்கிவிட்டது.

ரியல் எஸ்டேட் துறை தரை தட்டி நிற்கிறது. ஆனால், அதற்காக கடன் கட்டிக் கொண்டு இருப்பவர்கள் மட்டும் அதிகமாக இருக்கின்றனர்.இத்தகைய முதலீடுகள் வழக்கமாக ஈட்டித் தந்திருக்க வேண்டிய நியாயமான வட்டி வருவாய் கூட, இப்போது கிடைப்பதில்லை. உண்மையில், குடும்ப சேமிப்புகளில் விழுந்த பெரிய பொத்தல் இது.இதனால், நேரடி நிதி முதலீடுகளின் அளவும் குறைந்துபோனது.


அதாவது, 2011 நிதியாண்டில், குடும்பங்களின் நிதி முதலீடு, மொத்த உள்நாட்டு உற்பத்தி யில், 14.9 சதவீத அளவுக்கு இருந்தது.அது, 2017 நிதியாண்டில், 10.1 சதவீதமாக குறைந்து போனது. கையில் இருந்த பணத்தை கட்டுமானங்களில் போட்டுவிட்டதால், நிதிச் சேமிப்புகளைச் செய்யமுடிவில்லை என்பது தான் இந்தப் புள்ளி விவரம் சொல்லும் செய்தி.இத்தகைய பின்னணியில் இருந்து தான் இன்றைய நிலைமையைப் பார்க்க வேண்டும்.

ஏழை, எளியவர்கள் முதற்கொண்டு பலரும் அரசாங்கமே உதவிசெய்ய வேண்டும் என்று கோரிக்கை வைப்பதற்கு, அவர்களுடைய முதலீட்டுக் கலாசாரம் மாறிப் போனதே முதன்மையான காரணம்.தங்கமாகவோ, வெள்ளியாகவோ, இதரப் பொருட்களாகவோ, வீட்டில் சேமிப்பது நம் பழக்கம். எதிர்பாராத இடரை எதிர்பார்த்து, நம் குடும்பப் பெண்கள் விதவிதமான சேமிப்புகளைச் செய்துவைப்பர்.காப்பீடு, சிறுசேமிப்புகள், சீட்டுக் கட்டுவது என்று சிறுக கட்டிப் பெருக வாழும் பண்பாட்டை வளர்த்தெடுத்தவர்கள் நம் முன்னோர். தாம்துாமென்று செலவு செய்வது நம் மரபல்ல. சிக்கனமே நம் இலக்கணம்.

ஆனால், 2009 முதல் ஏற்பட்ட பொருளாதார சிந்தனைகள், நம்மைக் கடன்காரர்கள் ஆக்கியது தான் மிச்சம்.அமெரிக்கர்கள், கடன் வாங்கிச் செலவழிப்பர். அந்தக் கடனை அடைப்பதற்காக, கூடுதலாக உழைப்பர். இது கடன்சுழற்சிப் பொருளாதாரம். இது தான் உலகத்துக்கே சிறந்த உதாரணம் என்று பேசப்பட்டது.ஆனால், இந்தியாவுக்கு இந்த அணுகுமுறை செல்லுபடியாகாது. நம்முடையது சேமிப்புச் சார்ந்த பொருளாதாரம்.


எந்நேரமும் தலைமீது கடன் என்ற கத்தி தொங்கிக் கொண்டிருப்பதை இந்தியர்கள் விரும்புவதில்லை. உண்மையில், நாம் எதிர்காலச் செலவுகளையும் திட்டமிட்டுச் சேமிக்கக் கூடியவர்கள். ‘தினமலர்’ நிறுவனரான டி.வி.ராமசுப்பையர் வாழ்வைப் பேசும், ‘கடல் தாமரை’ நுாலில், ஒரு முக்கிய சம்பவம் இங்கே நினைவுகூரத்தக்கது.


கடந்த, 1951ல், ‘தினமலர்’ நாளிதழைத் தொடங்க நினைத்தபோது ஏற்பட்ட அனுபவம் இது:“எடுத்த எடுப்பிலேயே ஒரு தமிழ் நாளிதழைத் துவக்கி நடத்த நினைப்பவனை பைத்தியக்காரன் என்றே நினைத்தனர். என் இயற்கை சுபாவப்படி, நஷ்டமே வருவது என்று வைத்துக்கொண்டாலும், எவ்வளவு நஷ்டம் வரும், அந்த நஷ்டத்தை நம்மால் தாங்க முடியுமா, அதற்குள்ள பணபலம் நம்மிடம் உள்ளதா என்று கணக்குப் போட்டேன்.

“மாதம் ஆயிரம் ரூபாய் நஷ்டம் வரலாம் என்று தெரிந்தது. இதன்படி பத்திரிகை, மக்களிடம் வேரூன்றும் வரையான (உத்தேசம் ஐந்து ஆண்டு காலங்களுக்கு) 60 ஆயிரம் ரூபாய் நஷ்டம் வரும். அதை நம்மால் தாங்க முடியுமா என்ற கேள்வி என் உள்ளத்தில் எழுந்தது. அப்போது இருந்த என் பொருளாதார நிலையில் தாங்க முடியும் என்ற நிலைமை இருந்தது.” (ப.107)– இப்படிச் சொல்லி இருக்கிறார், டி.வி.ஆர்.,

கையில் பணத்தை வைத்துக் கொண்டு திட்ட மிடுவதுதான் புத்திசாலித்தனம். எப்பேர்ப் பட்ட இடரையும் எதிர்பார்க்க வேண்டும்.அதற்கேற்ப சேமிக்கவும் துவங்க வேண்டும். கொரோனா அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கைப் பாடத்தைத் தான் நமக்கு மீண்டும் சொல்லிக் கொடுத்திருக்கிறது.எனவே, ‘பெருங்காய டப்பா’வில் சேமிக்கும் பண்டைய கலாசாரத்துக்கு மாறுவோம்!
ஆர்.வெங்கடேஷ்
pattamvenkatesh@gmail.com 9841053881

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)