கேம்ஸ் நிறுவனம் ரூ.666 கோடி திரட்டியது கேம்ஸ் நிறுவனம் ரூ.666 கோடி திரட்டியது ...  முதலீட்டாளர்கள் இழப்பு ரூ.4.23 லட்சம் கோடி முதலீட்டாளர்கள் இழப்பு ரூ.4.23 லட்சம் கோடி ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
மியூச்சுவல் பண்டு துறையில் என்ன குழப்பம்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 செப்
2020
20:58

மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்பவர்களின் துாக்கத்தைக் குலைக்கும் இரண்டு, மூன்று அறிவிப்புகள் கடந்த வாரத்தில் வெளியாகியுள்ளன. என்ன மாற்றங்கள் நிகழும்? மத்தியமர்களான நாம் எவ்விதமான முடிவுகளை எடுக்க வேண்டும்?

கடந்த சில ஆண்டுகளாக, மத்தியமர்களின் மிகப்பெரிய முதலீட்டு வாய்ப்பாக, மியூச்சுவல் பண்டுகள் உருவெடுத்து உள்ளன. அதிலும், வங்கிச் சேமிப்புகளோ, இதர சிறுசேமிப்புகளோ போதிய வருவாய் ஈட்டித் தராத நிலையில், கொஞ்சம் ரிஸ்க் எடுக்கத் துணிந்தவர்கள், மியூச்சுவல் பண்டுகள் பக்கம் கரை ஒதுங்கியுள்ளனர்.


இவர்களில் பெரும்பாலோருக்கு அறிமுகமானது, பங்குச் சந்தை சார்ந்த ஈக்குவிட்டி பண்டுகள் தான். கடன் பத்திரங்கள், அரசாங்க பத்திரங்கள் சார்ந்த டெப்டு பண்டுகளில், பெரிய அளவில் ஈர்ப்பு ஏற்படவில்லை.

‘லார்ஜ் கேப் பங்குகள்’

பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களிலும், ஒரு சில திட்டங்கள் தான் அனைவரது விருப்பமாக இருக்கும். அதில், மல்ட்டி கேப் மியூச்சுவல் பண்டுகளுக்கு தனி இடம் உண்டு. இப்போது இதில் தான் பிரச்னை முளைத்திருக்கிறது.முதலில், மல்டி கேப் பண்டுகளை புரிந்து கொண்டால் தான், அதில் என்ன குழப்பம் என்பது தெளிவாகும்.

பங்குச் சந்தையில், பல நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதில், ஒவ்வொரு நிறுவனத்தின், ‘மார்க்கெட் கேப்’ எனப்படும், ‘சந்தை மதிப்பு’ கணக்கிடப்படும். அப்படி, முன்னணியில் இருக்கும் முதல், 100 பங்குகள், அதிகபட்ச சந்தை மதிப்பை கொண்டிருக்கும். இவற்றுக்கு, ‘லார்ஜ் கேப் பங்குகள்’ என்று பெயர். அடுத்து, 101 முதல் 250 இடங்கள் வரை, அடுத்த நிலையில் சந்தை மதிப்பைக் கொண்டிருப்பவற்றை, ‘மிட்கேப் பங்குகள்’ என்று அழைப்போம்.

இதற்கும் கீழே சந்தை மதிப்பைக் கொண்டிருப்பவற்றை, அதாவது, 250வது நிலைக்கும் கீழே இருக்கக் கூடிய நிறுவனங்களின் பங்குகளை, ‘ஸ்மால் கேப்’ என்று சொல்வோம். இன்றைக்கு இந்தியப்பங்குச் சந்தையில், லார்ஜ் கேப் பங்குகள் தான் கோலோச்சுகின்றன. அவை தான், பங்குச் சந்தை குறியீட்டு எண்ணையே கிடுகிடுவென உயர்த்திக்கொண்டு போகின்றன.

இப்போது, பண்டுகளுக்கு வருவோம். லார்ஜ் கேப் பங்குகளில் மட்டுமேமுதலீடு செய்யும் பரஸ்பரசகாய நிதித் திட்டங்களுக்கு, ‘லார்ஜ் கேட் பண்டுகள்’ என்று பெயர். இதே போன்றது தான், ‘மிட் கேப் பண்டுகளும், ஸ்மால் கேப் பண்டுகளும்’ அல்லது குறிப்பிட்ட துறை சார்ந்த பங்குகளில் மட்டுமே முதலீடு செய்யும், ‘செக்டோரல் பண்டு’களும் உண்டு. \

இதில் வித்தியாசமானது, ‘மல்டி கேப் பண்டுகள்!’அதாவது, இந்தத் திட்டங்களை நிர்வகிக்கும் பண்டு மேனஜர்கள், லார்ஜ் கேப், மிட் கேப், ஸ்மால் கேப் என்று அனைத்துதரப்பு பங்குகளிலும் முதலீடு செய்து, வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல்லாபத்தை ஈட்டித் தர முயற்சி செய்வார்கள். பல்வேறு சந்தை நிலைகளில், ஒரு சில பங்குகள் சிறப்பாகச் செயல்படும், வேறு சந்தர்ப்பங்களில், அவை வீழ்ச்சி அடையும். அதனால், பண்டு மேனஜர்கள் தொடர்ச்சியாகதாங்கள் வாங்கும் பங்குகளை மாற்றியமைத்துக்கொண்டே இருப்பார்கள்.
இவர்களுக்கு பங்குச்சந்தை மொத்தமுமே சொந்தம்.

முதலீட்டுக்கு நல்ல லாபம்


எதை வேண்டுமானாலும் வாங்கலாம், விற்கலாம். வாடிக்கையாளரது முதலீட்டுக்கு நல்ல லாபம் ஈட்டித் தர வேண்டியதுதான் இவர்களது நோக்கம்.

இப்போது இங்கே தான் பிரச்னை தோன்றியிருக்கிறது. பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் பண்டு நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் அமைப்பான, ‘செபி’ கடந்த வாரம் ஒரு கட்டுப்பாட்டை கொண்டு வந்திருக்கிறது.‘மல்டி கேப் பண்டுகள்என்று சொல்கிறீர்கள், ஆனால், அதன் பெயருக்கேற்ப அந்தத் திட்டங்கள் இல்லையே! அதனால், குறைந்தபட்சம், 25 சதவீதம்லார்ஜ் கேப் பங்குகளிலும்,25 சதவீதம் மிட் கேப் பங்குகளிலும், 25 சதவீதம்ஸ்மால் கேப் பங்குகளிலும் நீங்கள் முதலீடு செய்ய வேண்டும். ‘இந்த மாற்றத்தை வரும் ஜனவரி மாதத்துக்குள் செய்துவிட்டு விபரம் தெரிவியுங்கள்’ என, பண்டுகளை நடத்தும் நிறுவனங்களுக்கு உத்தரவு போட்டுவிட்டது.

இதில் என்ன பிரச்னை? செபி சொல்வது நியாயம் தானே?ஒரு வகையில் நியாயம் தான். ஆனால், அதில் உள்ள யதார்த்தம் வேறாக அல்லவா இருக்கிறது?அனைத்து மியூச்சுவல் பண்டு நிறுவனங்களிலும் உள்ள மல்டி கேப் பண்டுகளின் எண்ணிக்கை மட்டும், 34. இவை நிர்வகிக்கும் மொத்த தொகை, 1.47 லட்சம் கோடி ரூபாய்.


வெறித்தனமான ஓட்டம்

தற்சமயம், இவை தங்கள் சவுகரியத்துக்கு ஏற்ப பல்வேறு பங்குகளில் முதலீடு செய்து வருகின்றன.அதாவது, தோராயமாக இப்படிப் பார்க்கலாம். தற்போதுள்ள முதலீடுகளைப் பார்க்கும்போது, அதில், 75 முதல், 80 சதவீதம் வரை லார்ஜ் கேப் பங்குகளிலும், 15 முதல், 17 சதவீதம் மிட் கேப் பங்குகளிலும், 6 சதவீதம் வரை ஸ்மால் கேப் பங்குகளிலும் முதலீடு செய்யப்பட்டுள்ளன. இப்போது எல்லாவற்றையும் கலைத்துப் போட்டு, ஆட்டத்தையே மாற்ற வேண்டும்.அதாவது, முதலில், லார்ஜ் கேப் பங்குகளில் உள்ள பெருமளவு நிதியை எடுத்து, மிட்கேப் மற்றும் ஸ்மால் கேப் பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும்.


கிட்டத்தட்ட, 45 ஆயிரம்கோடி ரூபாய் வரை, இது போன்று எடுத்து மாற்ற வேண்டி இருக்கலாம் என, ஒரு புள்ளி விபரம் சொல்கிறது. இதனால் என்ன ஆகும்?திடீரென்று மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் பங்குகளுக்கு மவுசு கூடிவிடும். தற்போது பங்குச் சந்தையின் காளை, அதன் அடிப்படைகளோடு எந்த ஒரு சம்பந்தமும் இல்லாமல் வெறித்தனமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.


இதில் சல்லி பைசா பெறாத பங்குகள் கூட, யானை விலை, குதிரை விலை விற்கின்றன. இந்த நிலையில், மிட்கேப் பங்குகளில், 10,500 கோடி ரூபாயும், ஸ்மால் கேப் பங்குகளில், 35,000 கோடி ரூபாயும் போய் போட்டால், அவை என்ன ஆகும்? முதலில் போடுவதற்கு அங்கே வலுவான நிறுவன பங்குகள் உள்ளனவா என்ன? அவை போதுமான அளவு லாபம் ஈட்டுமா? ஏற்கனவே விலையேறிப் போயுள்ள நிலையில், அவற்றை வாங்குவது புத்திசாலித்தனமா?


மேலும், ஸ்மால் கேப் பங்குகளை பெருமளவு அதன் முதலாளிகளே வைத்துக் கொண்டிருப்பார்கள். அந்நிறுவனங்களில், ‘கார்ப்பரேட் கவர்னன்ஸ்’ எனப்படும் நிறுவன ரீதியான நெறிமுறைகள் ஒழுங்காகப் பின்பற்றப்படாது.ஒருவேளை, அவர்கள் தவறு செய்தால், மொத்த பங்கின் மதிப்பும் அதலபாதாளத்துக்குச் சரிந்துவிடும். இப்படிப்பட்ட ரிஸ்க்கான இடத்தில் போய் முதலீடு செய்யத் தான் வேண்டுமா?


லார்ஜ் கேப் பங்குகளில் உள்ள நம்பகத்தன்மை, நிறுவன கட்டுப்பாடுகள், புதிய முயற்சிகளில் ஈடுபடும் அளவிற்கான அதன் முனைப்பு, நிதியாதாரம் போன்றவை, ஸ்மால் கேப் பங்குகளில் இருக்க வாய்ப்பில்லையே. மண் குதிரையை வைத்துக் கொண்டு எப்படி ரேஸ் ஓட முடியும்? ஜனவரிக்கு பின், இந்தப் பங்குகளின் விலை வீழ்ச்சியடைந்தால், பண்டுகளின் மதிப்பு என்னாவது? ஈட்ட வேண்டிய லாபம் என்னாவது? கடைசியில், பணத்தை முதலீடு செய்த வாடிக்கையாளர்களுக்கு என்ன பதில் சொல்வது? ‘பட்டர்பிளை எபெக்ட்’ தான்.


சிக்கல்கள்

செபியின் ஒரு சின்ன நகர்வு, மொத்த மியூச்சுவல்பண்டு உலகத்தையும், வாடிக்கையாளர் களையும் கலகலக்க வைத்துள்ளது.பண்டுகளை நிர்வகிக்கும் நிறுவனங்கள் என்ன சொல்கின்றன? மென்று விழுங்குகின்றன. ‘ஐயா, நீங்கள் சொல்வதில் உள்ள நியாயத்தை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால், உடனடியாக இந்த மாற்றத்தைக் கொண்டு வருவதில் சிக்கல்கள் இருக்கின்றன.


பெயரில் தானே குழப்பம். வேண்டுமென்றால், ‘மல்டி கேப்’ என்பதற்கு பதில், ‘பிலெக்ஸி கேப்’ (Flexicap) என்று பெயர் மாற்றம் செய்து தரக்கூடாதா? இருக்கும் ஆட்டத்தை ஏன் கலைக்கிறீர்கள்?’ என்று செபியிடம் மன்றாடிக் கேட்டுக்கொண்டிருக்கிறது, மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் அமைப்பான ஆம்பி (AMFI).‘வாடிக்கையாளர்கள் யாரும் அவசரப்பட வேண்டாம். மல்டி கேப் பண்டுகளை விற்றுவிட்டு விலகிவிட வேண்டாம். இன்னும் முடிவெடுப்பதற்கு நான்கு மாதங்கள் உள்ளன. பொறுமை காக்கவும்’ என்றும் ஆம்பி, வாடிக்கையாளர்களைக் கேட்டுக் கொண்டு இருக்கிறது.

சரி, செபி, ஆம்பியின் கோரிக்கையை செவிமடுத்தால் நல்லது. ஒருவேளை கேட்கவில்லை என்றால், என்ன ஆகும்?பண்டு நிறுவனங்கள், பணத்தை வாடிக்கையாளர்களிடமே திருப்பிக் கொடுத்துவிடும். வேறு பண்டு திட்டங்களுக்கு உங்கள் முதலீடுகளை மாற்றிக்கொள்ளுங்கள் என்று வாடிக்கையாளர்களைக் கேட்டுக் கொள்ளும்.பண்டுகளில் உள்ள வெயிட்டேஜுக்கு ஏற்ப, தற்போதுள்ள மல்டிகேப் பண்டுகள், லார்ஜ்கேப் பண்டுகளோடு ஒருங்கிணைக்கப்படும்.

எந்தப் பங்குகளில் அதிகம் முதலீடு செய்யப்பட்டுள்ளனவோ, அதற்கேற்ப செக்டோரல் பண்டாக அவை மாற்றப்படும்.வாடிக்கையாளரான நீங்கள் என்ன செய்யவேண்டும்?நீங்கள் முதலீடு செய்துள்ள மல்டி கேப் பண்டுகளில், ஸ்மால் கேப் பங்குகளின் அளவு எவ்வளவு என்று பாருங்கள். ஒருவேளை, ஏற்கனவே அவற்றில், 10 முதல், 15 சதவீதம் வரை ஸ்மால்கேப் பங்குகளில் முதலீடு இருக்குமேயானால், இதே பண்டில் தொடருங்கள்.

அவசரம் வேண்டாம்


ஒரு சில பண்டுகளில், ஸ்மால் கேப் முதலீடுகள் வெறும், 1.5 சதவீதம், 2 சதவீதம் தான் இருக்கிறது. அந்த மாதிரியான இடங்களில் அவசரப்பட வேண்டாம். உங்கள் பண்டு நிறுவனம் என்ன வாய்ப்பை வழங்குகிறது என்று பொறுத்திருந்து பார்க்கவும். ஒருவேளை அவை லார்ஜ் கேப் பண்டுகளோடோ, செக்டோரல் பண்டுகளோடோ ஒருங்கிணைக்கப்பட்டால், ஒன்றும் பிரச்னை இல்லை.

அதாவது, நீங்களாக பண்டைவிட்டு வெளியே வந்தால், ‘எக்ஸிட் லோடு’ என்று ஒரு குறிப்பிட்ட செலவைச் செலுத்த வேண்டியிருக்கும். அவர்களே வேறு பண்டுகளுக்கு மாற்றிக் கொடுத்தால், இந்தச் செலவு இருக்க வாய்ப்பில்லை.ஒருவேளை, மல்டி கேப்பண்டுகளில் சீரான மாதாந்திர திட்டமான, எஸ்.ஐ. பி.,யின் கீழ் பணம் கட்டிக் கொண்டு வருவீர்கள் என்றால், அதைக் கொஞ்சம் நிறுத்தி வையுங்கள். ஜனவரியில் குழப்பம்தெளிந்த பின்னர், மீண்டும், எஸ்.ஐ.பி.,யை ஆரம்பியுங்கள்.செபியிடமிருந்து இன்னும் ஒரு அறிவிப்பு, ஒரு தகவல் கசிவு நடந்திருக்கிறது. அதையும் சேர்த்துப் பார்த்து விடுவோம்.

மாற்றம்

மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்யும்போது, என்றைக்குக் காசோலைக் கொடுத்து, ஒரு பண்டில் சந்தாதாரர் ஆகிறீர்களோ, அந்தப் பண்டின் அன்றைய விலையே – என்.ஏ.வி., வாடிக்கையாளருக்கு, இதுநாள் வரை வழங்கப்பட்டு வந்தது. ஜனவரி முதல், இதிலும் ஒரு மாற்றம்.காசோலை என்று பணமாக மாறி, பண்டு நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் சேர்கிறதோ, அன்றைய தேதியில் உள்ள, என்.ஏ.வி., தான் உங்களுக்கு வழங்கப்படும் என்று திருத்தத்தை அறிவித்துள்ளது, செபி.

அதாவது, பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்திருக்கிறது அல்லது இன்றைக்கு ஈவுத்தொகை வழங்கும் ரெகார்டு நாள் ஆகியவற்றை வைத்துக் கொண்டு பலரும் கடைசிநேரத்தில், முகவரிடம் காசோலை கொடுத்து வந்தீர்கள் அல்லவா? அதாவது அந்த விலை வீழ்ச்சியின் பலனை அனுபவிக்க வேண்டும் என்று விரும்பினீர்கள் அல்லவா? அது இனிமேல் நடைபெறாது. முறையான முதலீட்டு திட்டத்தைப் பின்பற்றி வருபவர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. அவர்கள் சேமிப்பு உயர்ந்து கொண்டே தான் இருக்கும்.செபி ஒரு நடவடிக்கை மேற்கொள்ளவிருக்கிறது என்று கசிந்துள்ள தகவல் திருப்தி அளிக்கிறது.

‘வெரி ஹை ரிஸ்க்’

அதாவது, ஒவ்வொரு பண்டுக்கும் அதன் அபாய அளவைக் குறிப்பிட, ‘லோ ரிஸ்க்’ முதல், ‘ஹை ரிஸ்க்’ என்பது வரை ஐந்து அலகுகளைக் குறிப்பிடச் சொல்கிறது செபி. தற்போது, ‘வெரி ஹை ரிஸ்க்’ அல்லது ‘எக்ஸ்டிரீம்’ என்றொரு அலகும் சேரப் போகிறதாம். அதாவது, பங்குச்சந்தை சார்ந்த பண்டுகள் என்றால், அவற்றில் ஸ்மால் கேப் பங்குகளின் அளவு அதிகமாக இருக்குமானால், அவை, ‘வெரி ஹை ரிஸ்க்’ வரையறைக்குள் வந்துவிடும்.

கடன் பத்திரங்கள் சார்ந்த பண்டுகளில், கார்ப்பரேட் பத்திரங்களில் அதிகளவு முதலீடு செய்துள்ள பண்டுகளின் அபாய அளவு, ‘எக்ஸ்டிரீம்’ என்று குறிக்கப்படும். மேலும், பண்டு தொடங்கும்போது, அதன் அபாய அளவை அளவிட்டு அறிவிக்கும் முறை தான் தற்போது நடைமுறையில் உள்ளது. இதிலும் மாற்றம் வரலாம் என்கிறார்கள். அதாவது, ஒவ்வொரு மாதமும் பல பண்டுகள், பல்வேறு பங்குகளை வாங்கியும், விற்றும் வருகின்றன. அப்படியிருக்கும் போது, அந்தப் பண்டுகளின் அபாய அளவும் உயர்ந்தும், தாழ்ந்தும் இருக்குமல்லவா?


இந்த விபரத்தை வாடிக்கையாளர்களுக்குத் தொடர்ந்து சொல்ல வேண்டும் என்கிறது, செபி.பலரும் மியூச்சுவல் பண்டுகளில் நம்பி முதலீடுசெய்து வருகின்றனர். பெரிய லாபம் ஈட்டிவிடலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. ஆனால், அதில் ஏற்பட்டு வரும் சிறிய, பெரிய மாற்றங்களையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இது உங்கள் பணம். அதற்கு நீங்கள் தான் அதிகாரி. நாளைக்கு பெரிய வருத்தங்கள் ஏற்படாமல் இருக்க, இன்றே விழிப்புடன் இருங்களேன்.

ஆர்.வெங்கடேஷ்

pattamvenkatesh@gmail.com

9841053881

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
business news
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
business news
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
business news
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
business news
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)