பதிவு செய்த நாள்
22 ஜூலை2011
00:20

புதுடில்லி: உள்நாடு மற்றும் வெளிநாடுகளில், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து, வரும் 2015ம் ஆண்டில், உள்நாட்டில், இதற்கான சந்தை மதிப்பு 2 லட்சத்து 13 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என அசோசெம் அமைப்பு தெரிவித்துள்ளது. உள்நாட்டில், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்களுக்கான சந்தை மதிப்பு, தற்போது, 1 லட்சத்து 22 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. இத்துறை, ஆண்டுக்கு 15 சதவீதம் என்ற அளவில், நிலையாக வளர்ச்சி கண்டு வருகிறது. உள்நாட்டில், மக்களின் செலவிடும் வருவாய், உயர்ந்து வருகிறது. குறிப்பாக, கிராமப்புற மக்களும், தங்க ஆபரணங்களில் சிறப்பாக முதலீடு செய்து வருகின்றனர். ஏற்றுமதியும் வளர்ச்சி கண்டு வருகிறது. ஆகஸ்ட் மாதம் முதல், பண்டிகை காலங்கள் தொடங்குகின்றன. இது, அக்டோபர் மாதம் வரை நீடிக்கும். இக்காலத்தில், நவரத்தின ஆபரணங்களுக்கான தேவை மேலும் அதிகரிக்கும் என, அசோசெம் அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது. மற்ற முதலீடுகளை விட, தங்க ஆபரணங்களில் மேற்கொள்ளும் முதலீடு மிகவும் பாதுகாப்பானது என்ற அடிப்படையில், இது போன்ற ஆபரணங்களில் மேற்கொள்ளப்படும் முதலீடு கணிசமாக அதிகரித்து வருகிறது. கடைகளில் மட்டுமின்றி, இணையதளம் வாயிலாக, ஆபரணங்கள் வாங்கும் போக்கும் உயர்ந்து வருகிறது. கடந்த 2010-11ம் நிதியாண்டில், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி, 1 லட்சத்து 98 ஆயிரத்து 440 கோடி ரூபாயாக இருந்தது. இது, 2009-10ம் நிதியாண்டில், மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, 46.89 சதவீதம் (1 லட்சத்து 35 ஆயிரத்து 49 கோடி ரூபாய்) அதிகம்.நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி, 16.67 சதவீத பங்களிப்பைக் கொண்டுள்ளது.நாட்டின் மொத்த நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதியில், ஐக்கிய அரபு எமிரேட், அமெரிக்கா, ரஷ்யா , லத்தீன் அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் முன்னிலையில் உள்ளன. இந்நாடுகள், இந்திய நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்களை விரும்பி வாங்குகின்றன. இந்நாடுகளுக்கான ஏற்றுமதியும், தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகிறது.இதையடுத்து, நடப்பு 2011-12ம் நிதியாண்டில், இவற்றின் ஏற்றுமதி 5,000 கோடி டாலராக (2 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய்) அதிகரிக்கும் என அசோசெம் அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.தற்போதைய நிலையில், நாட்டின் மொத்த நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதியில், ஐக்கிய அரபு எமிரேட் பங்களிப்பு 47 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இதைத்தொடர்ந்து, ஹாங்காங் (22 சதவீதம்) மற்றும் அமெரிக்கா (11 சதவீதம்) ஆகிய நாடுகளுக்கும் மிக அதிகளவில் நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.நாட்டின் நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில் மத்திய அரசும், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|