பதிவு செய்த நாள்
05 ஆக2011
00:15

புதுடில்லி: நாட்டின் உணவுப்பொருள் பணவீக்கம், ஜூலை 23ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 8.04 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதற்கு முந்தைய வாரத்தில், இது, 7.33 சதவீதம் என்றளவில் குறைந்து காணப்பட்டது. கடந்த 2009ம் ஆண்டு, நவம்பர் மாதத்திற்கு பிறகு, உணவுப்பொருள் பணவீக்கம்,இந்தளவிற்கு குறைந்திருந்தது. ஆனால், அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலை அதிகரித்ததையடுத்து, தற்போது மீண்டும் உணவுப் பொருள் பணவீக்கம் அதிகரித்துள்ளது. கணக்கீடு செய்வதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வாரத்தில், வெங்காயம், பழங்கள், பால் உள்ளிட்ட பல பொருள்களின் விலை அதிகரித்திருந்தது. மொத்த விலை குறியீட்டு எண் அடிப்படையில் கணக்கிடப்படும் உணவுப் பொருள் பணவீக்கத்தில், பல அத்தியாவசியப் பொருள்களின் விலை, 16.27 சதவீதம் என்றளவில் உயர்ந்துள்ளது. வெங்காயத்தின் விலை, சென்றாண்டின் இதே வாரத்தை விட, 26.36 சதவீதம் என்றளவிலும், பழங்கள் விலை, 15.97 சதவீதம் என்றளவிலும், பால் விலை, 10.26 சதவீதம் என்றளவிலும் அதிகரித்திருந்தது. காய்கறிகளின் விலையும், ஆண்டுக்கணக்கில், 10.20 சதவீதம் உயர்ந்திருந்தது.இவை தவிர, தானியங்கள் (5.13 சதவீதம்), உருளைக்கிழங்கு (7.85 சதவீதம்),முட்டை, இறைச்சி (6.66 சதவீதம்)ஆகியவற்றின் விலையும் உயர்ந்திருந்தது.இருப்பினும், கணக்கீடு செய்வதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வாரத்தில், பருப்பு வகைகள் விலை, 7 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்திருந்தது. நூலிழை, எண்ணெய் வித்துக்கள், தாதுப் பொருள்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய உணவு சாராத பொருள்களின் விலை, 16.05 சதவீதத்திலிருந்து, 15.60 சதவீதமாக குறைந்திருந்தது. எரிபொருள்கள், மின்சாரம் ஆகியவற்றின் விலை, 12.12 சதவீதம் என்றளவில், கடந்தாண்டின் இதே வாரத்தில் இருந்த அளவிலேயே இருந்தது.மொத்த விலை குறியீட்டு எண் அடிப்படையில் கணக்கிடப்படும், நாட்டின் பொது பணவீக்கம், சென்ற ஜூன் மாதத்தில், 9.44 சதவீதம் என்றளவில், மிகவும் அதிகரித்திருந்தது. இதை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை 0.50 சதவீதம் உயர்த்தியது. கடந்த 2010ம் ஆண்டு மார்ச் மாதம் முதல், இதுவரையிலுமாக ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை 11 முறை உயர்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு, அண்மையில் நாட்டின் பணவீக்கம், வரும் அக்டோபர் மாதம் வரையில், 9 சதவீதம் என்றளவில் உயர்ந்து காணப்படும் என்றும், நடப்பு நிதியாண்டின் இறுதியில் (2012ம் ஆண்டு மார்ச்), இது, 6.5 சதவீதமாக குறையக்கூடும் என்று அறிவித்திருந்தது.இந்நிலையில், நாட்டின் உணவுப் பணவீக்கம் மீண்டும் அதிகரித்துள்ளது. எனவே, ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை மீண்டும் உயர்த்தக் கூடும் என்ற அச்சப்பாடும், சந்தையில் நிலவுகிறது.
மேலும் பொது செய்திகள்




|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|