பதிவு செய்த நாள்
01 அக்2011
06:47

புதுடில்லி:மத்திய அரசு கூடுதலாக 53 ஆயிரம் கோடி கடன் பெறுவதால், நாட்டின் நிதிப் பற்றாக்குறையில் எவ்வித தாக்கமும் ஏற்படாது என, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி உறுதிபடத் தெரிவித்துள்ளார். மத்திய அரசு, நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டில், 4 லட்சத்து, 17 ஆயிரத்து, 128 கோடி ரூபாய் கடன் பெற இலக்கு நிர்ணயித்திருந்தது. இந்நிலையில், ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடன் பத்திரங்கள் வாயிலாக, மத்திய அரசு கூடுதலாக 52 ஆயிரத்து, 872 கோடி ரூபாய் கடன் பெற்றுக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நடப்பு நிதியாண்டின் இரண்டாவது அரையாண்டில் (அக்., - மார்ச்) பெற உள்ள கடன் இலக்கு, 2 லட்சத்து, 20 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்கும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசின் நிதி கையிருப்பு குறைந்துள்ளதும், சிறு சேமிப்பு திட்டங்களில் இருந்து அதிக அளவில் பணம் திரும்பப் பெறப்பட்டதாலும், கூடுதலாக கடன் பெற வேண்டியுள்ளதாக, மத்திய பொருளாதார விவகாரங்கள் துறை செயலர் ஆர்.கோபாலன் தெரிவித்தார். இதன்படி மத்திய அரசின் கடன் இலக்கு, மறுமதிப்பீட்டின்படி 4 லட்சத்து, 70 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இது, நடப்பு நிதியாண்டின், முதல் அரையாண்டு காலத்தில் (ஏப்ரல் - செப்.,) 2 லட்சத்து, 50 ஆயிரம் கோடி ரூபாய் என்ற அளவிலும், இரண்டாவது அரையாண்டு காலத்தில் (அக் - மார்ச்) 2 லட்சத்து, 20 ஆயிரம் கோடி ரூபாயாகவும் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கூடுதலாக கடன் பெற்றாலும், நடப்பு நிதியாண்டிற்கான நிதிப் பற்றாக்குறை, மாற்றம் ஏதுமின்றி 4.6 சதவீதமாகவே இருக்கும் என்று கோபாலன் தெரிவித்தார். இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, "தடையற்ற பணப் புழக்கத்திற்காகத்தான் கடன் பெறப்படுகிறது. இது நாட்டின் நிதிப் பற்றாக்குறையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து இப்போதே கருத்துகூற முடியாது' என்று தெரிவித்தார். மத்திய அரசு, கூடுதலாக கடன் பெறுவதால், தனியார் முதலீடு எந்த வகையிலும் பாதிக்கப்படாது என்று, மத்திய நிதியமைச்சக உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். பல்துறை வல்லுனர்களும் இதே கருத்தை தெரிவித்துள்ளனர். நடப்பு நிதியாண்டில், மத்திய அரசின் வருவாய் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாமல் உள்ளது. மத்திய அரசு, பொதுத்துறை நிறுவனங்களில் 5 சதவீத பங்குகளை விற்பனை செய்து, 40 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால், பங்குச் சந்தையின் தொடர் வீழ்ச்சி காரணமாக, இதுவரை, பொதுத்துறையைச் சேர்ந்த பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் மட்டுமே, பங்கு வெளியீட்டை மேற்கொண்டு, 1,100 கோடி ரூபாய் திரட்டிக் கொண்டது. ஓ.என்.ஜி.சி., செயில் போன்ற நிறுவனங்கள், அவற்றின் இரண்டாவது பங்கு வெளியீட்டை ஒத்தி வைத்துள்ளன. இது போன்ற காரணங்களால், நடப்பாண்டில் பங்கு விற்பனை மூலம் இலக்குத் தொகையை எட்ட முடியுமா என்ற ஐயம் எழுந்துள்ளது.மேலும், 3ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டிற்கான உரிமக் கட்டணத்திலும், மத்திய அரசுக்கு பெரிய அளவிலான வருவாய் கிடைக்காத நிலை உள்ளது. இது தவிர, வங்கி டெபாசிட்டுகளுக்கான வட்டி உயர்ந்துள்ளதால், சிறு சேமிப்பு திட்டங்களில் இருந்து அதிக அளவில் பணம் திரும்பப் பெறப்பட்டு, வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. மத்திய அரசு, நடப்பு நிதியாண்டில் சிறுசேமிப்பு திட்டங்கள் வாயிலாக, 24 ஆயிரத்து, 182 கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், இதுவரை இந்த சேமிப்பு திட்டங்களில் இருந்து, 11 ஆயிரம் கோடி ரூபாய் திரும்பப் பெறப்பட்டுள்ளது.நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், சிறுசேமிப்பு பிரிவின் வருவாய் 26 ஆயிரத்து, 562 கோடி ரூபாய் குறைந்துள்ளது. அதேசமயம், சென்ற நிதியாண்டின் இதே காலத்தில், 13 ஆயிரத்து, 250 கோடி ரூபாய் அதிகரித்திருந்தது. மத்திய அரசு, நடப்பு நிதியாண்டின் தொடக்கத்தில், பற்று இருப்பாக 33 ஆயிரம் கோடி ரூபாய் ரொக்கம் இருக்கும் என மதிப்பிட்டிருந்தது. ஆனால், இது 16 ஆயிரம் கோடி ரூபாயாக குறைந்ததை அடுத்து, இரண்டாவது அரையாண்டில் கூடுதலாக கடன் பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சென்ற செப்., 15ம் தேதி வரையிலான நிலவரப்படி, நிறுவனங்கள் செலுத்திய முன்கூட்டிய வரி, எதிர்பார்த்த அளவிற்கு இல்லாமல் உள்ளது. இதன் காரணமாக, நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், நிறுவன வரி மற்றும் உற்பத்தி வரி வசூல், எதிர்பார்த்ததை விட குறைவாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய அரசின் கடன் அதிகரிப்பு அறிவிப்பால், கடன் பத்திரங்களின் சந்தை மதிப்பு சரிவடைந்துள்ளது. கருவூல ஆவணங்கள் வாயிலாக, குறைந்த அளவிற்கே கடன் பெறப்படும் எனவும் பிப்ரவரி மாதத்திற்குள் ஏலம் முடிவு பெறும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால், கடன் பத்திரங்களின் சந்தை மதிப்பு உயரவில்லை. எனினும், 10 ஆண்டுகள் முதிர்ச்சி காலத்தைக் கொண்ட கில்ட் பத்திரங்களின் வருவாய், கடந்த இரண்டு மாதங்களில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. மத்திய அரசு, கூடுதலாக கடன் வாங்குவதால் நிதிச்சந்தையில் பாதிப்பு ஏதும் இருக்காது என, இத்துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். வங்கிகளின் கடன் அளிப்பு குறைந்துள்ளநிலையில், அவை மத்திய அரசின் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் என்று தெரிகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|