பதிவு செய்த நாள்
09 அக்2011
01:16

நடப்பு வாரத்தில் நாட்டின் பங்கு வர்த்தகம், கடந்த 20 மாதங்களில் இல்லாத அளவிற்கு கீழே சென்றது. இருப்பினும், வெள்ளியன்று, சர்வதேச நிலவரங்களால்,பங்கு வர்த்தகம் ஓரளவிற்கு மீண்டது.வெள்ளியன்று ஏன் கூடியது? இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான, பாரத ஸ்டேட் பேங்கின் பங்கு மூலதனம் சார்ந்த நிதி வலிமைக்கான தரக் குறியீட்டை, சர்வதேச தரக் குறியீட்டு நிறுவனமான, மூடிஸ் இன்வெஸ்டர்ஸ் சர்வீசஸ் குறைத்தது. இதனால், அன்றைய தினம், இவ்வங்கியின் பங்குகள் மட்டுமின்றி, ஒட்டு மொத்த வங்கி துறை பங்குகளும் மிகவும் சரிவடைந்து போனது.பெரிய வங்கிக்கே இந்த நிலை என்றால், இதர வங்கிகளின் நிலை எப்படியோ என்ற அச்சப்பாட்டால் வங்கி பங்குகளின் விலை மிகவும் குறைந்து போனது. ஆனால், வெள்ளியன்று வந்த செய்திகளின்படி, ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க் மற்றும் ஆக்சிஸ் பேங்க் போன்றவற்றின் குறியீடுகள் குறைக்கப்படவில்லை. இதனால், அன்றைய தினம், வங்கி, உலோகம், பொறியியல், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின.வெள்ளியன்று மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் "சென்செக்ஸ்' 440 புள்ளிகள் அதிகரித்து, 16,232 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் "நிப்டி' 137 புள்ளிகள் உயர்ந்து, 4,888 புள்ளிகளிலும் நிலைபெற்றன. இருப்பினும், ஒட்டு மொத்த அளவில், நடப்பு வாரத்தில், "சென்செக்ஸ்' 81 புள்ளிகள் உயர்ந்திருந்தது. சந்தையை உன்னிப்பாக கவனித்து வருபவர்களுக்கு, தெளிவாக தெரிவது என்னவென்றால், "சென்செக்ஸ்' 15,000 புள்ளிகளிலிருந்து 17,000 புள்ளிகளுக்குள்ளேயே சுற்றி வருகிறது என்பதுதான். 16,000 புள்ளிகளுக்கும் கீழ் வரும் போது அதிகளவில் பங்குகளை வாங்குவதும், 17,000 புள்ளிகளுக்கு அருகில் செல்லும்போது பங்குகளை விற்பதும் என்ற நிலைப்பாட்டில் பல முதலீட்டாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதை நல்ல அளவில், புரிந்து கொண்டு, சிறந்த நிறுவனப் பங்குகளை வாங்கி முதலீடு செய்தால் அது லாபம் அளிப்பதாக இருக்கும். தற்போது இருக்கும் பிரச்னைகள்: நாட்டின் உணவுப் பொருள் பணவீக்கம் தற்போது 9.41 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் பொருளாதார நெருக்கடி, இந்திய வங்கிகளின் வசூலாகாத கடன் அதிகரிக்க கூடும் என்ற மதிப்பீடு மற்றும் செப்டம்பர் காலாண்டு முடிவுகள் எப்படி இருக்குமோ என்ற ஐயப்பாடு போன்றவை பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான வட்டி விகிதங்களை மீண்டும் உயர்த்தாமல் இருக்க வேண்டும். தற்போது, கடன்களுக் கான வட்டி விகிதம் கூடியிருந்தாலும், டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் உயராமல் ஒரு நிலைப்பாட்டில் உள்ளது. இது, ஆறுதல் அளிப்பதாக உள்ளது. புதிய வெளியீடுகள்: இந்த வாரத்தில் முடிவடைந்த புதிய பங்கு வெளியீடுகளுக்கு, ஓரளவிற்கு ஆதரவு கிடைத்துள் ளது. குறிப்பாக, ஒரு மடங்கில் இருந்து, மூன்று மடங்கிற்குள் பங்குகள் வேண்டி விண்ணப்பங்கள் வந்துள்ளன. அதே சமயம், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் புதிய பங்கு வெளியீடுகளில் ஆர்வம் காட்டவில்லை. இவர்களுக்காக ஒதுக்கப் பட்ட பங்குகளுக்கு, விண்ணப்பங்கள் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நடப்பு வருடத்தில், அதிகளவில் புதிய பங்கு வெளியீடுகள் வந்துள்ளது என்றாலும், அது முதலீட்டாளர்களுக்கு ஆதா யம் அளிக்கவில்லை. இதற்கு எடுத்துக் காட்டாக ஆர்.டீ.பி. ரசாயன்ஸ் நிறுவனம், பங்கு ஒன்றை 79 ரூபாய்க்கு வெளி யிட்டது. ஆனால், அது பட்டியலிடப்பட்ட தினத்தன்று 27 ரூபாய்க்கும் கீழ் சென்றது. தங்கம், வெள்ளி: தீபாவளி மற்றும் கல்யாண சீசன் நெருங்கிக் கொண்டிருக்கிறது. தங்கம், வெள்ளியில் தற்போது முத லீடு செய்யலாமா அல்லது காத்திருப்பதா என்பதுதான் பலருடைய கேள்வியாக உள்ளது. தங்கம், வெள்ளி ஆகியவற் றின் விற்பனை கூடி வந்தாலும், அமெரிக்க டாலரின் மதிப்பு வலுப்பெறுவதால் இவற்றின் விலை மேலும், சிறிது குறைய வாய்ப்புள்ளது. அப்படி குறையும் பட்சத்தில், வாங்குவதற்கு மக்கள் முன்வரும் போது மீண்டும் விலைகூடும் அல்லது நிலைபெறும். காலாண்டு முடிவுகள்: பணவீக்கம் அதிகரித்து வருவதால், மக்கள், முதலில் நுகர் பொருள்கள் வாங்குவதை குறைத்துக் கொள்வர். இதனால், இத்துறை நிறுவனங்களின் விற்பனை வளர்ச்சி குறையக்கூடும். பல மாநிலங்களில் நல்லளவில் மழை பெய்துள்ளதால், நீர் மின் திட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களின் செயல்பாடு நன்கு இருக்கும். கட்டுமான துறையும் வளர்ச்சி கண்டு வருகிறது. இதனால், சிமென்ட் நிறுவன பங்குகளின் விலை சிறிது உயரக்கூடும். வரும் வாரம் எப்படி இருக்கும்? வரும் வாரம் முதல் பல நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் வரத் தொடங்கி விடும். அது, சந்தைகளின் போக்கை மாற்றியமைக்கும். இக்காலாண்டில், பெரிய அளவில் எதிர்பார்ப்புகள் இருக்கக் கூடாது. ஏனெனில், வங்கி கடன்களுக்கான வட்டி விகிதம் மிகவும் உயர்ந்துள்ளதால்,நிறுவனங்களின் லாப வரம்பு பாதிப்புக் குள்ளாகும். அதேசமயம், கடன் வாங்காத நிறுவனங்களின், விற்பனை நன்கு இருக்கும்பட்சத்தில் அவற்றின் லாபம் அதிகரிக்கும். - சேதுராமன் சாத்தப்பன் -
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|