பதிவு செய்த நாள்
09 அக்2011
01:21

புதுடில்லி:நடப்பு 2011-12ம் நிதியாண்டின், சென்ற ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான அரையாண்டு காலத்தில், நாட்டின் மொத்த நேரடி வரி வசூல் 23 சதவீதம் அதிகரித்து 2 லட்சத்து 57 ஆயிரத்து 42 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, சென்ற நிதியாண்டின், இதே காலத்தில் 2 லட்சத்து 8 ஆயிரத்து 971 கோடி ரூபாயாக இருந்தது. நிறுவனங்கள் செலுத்தும் கார்ப்பரேட் வரி, தனி நபர் செலுத்தும் வருமான வரி ஆகியவை நேரடி வரிகள் பிரிவின் கீழ் வருகின்றன. சுங்க வரி, உற்பத்தி வரி, சேவை வரி ஆகியவை மறைமுக வரிகள் பிரிவில் இடம் பெற்றுள்ளன.நடப்பு நிதி யாண்டின், முதல் காலாண்டில், நிறுவனங்கள் அதிக அளவில் வரி செலுத்தியுள்ளன. அதே சமயம், இரண்டாவது காலாண்டில், செலுத்தப்பட்ட வரி, முந்தைய காலாண்டைவிட சற்று குறைந்துள்ளது. இருந்த போதிலும், செப்டம்பர் வரையிலான, அரையாண்டு காலத்தில், நாட்டின் மொத்த நேரடி வரி வசூல் அதிகரித்துள்ளது. எனினும், இதே காலத்தில், கூடுதலாக செலுத்தப்பட்ட வரி, திரும்ப அளிக்கப்பட்டதால், நிகர நேரடி வரி வசூல் 7 சதவீதம் உயர்ந்து, 1 லட்சத்து 98 ஆயிரத்து 812 கோடி ரூபாய் என்றளவில் உள்ளது. இது, சென்ற நிதியாண்டின், இதே காலத்தில் 1 லட்சத்து 81 ஆயிரத்து 758 கோடி ரூபாயாக இருந்தது.நடப்பு நிதியாண்டின், செப்டம்பருடன் முடிவடைந்த அரையாண்டில், நாட்டின் மொத்த நேரடி வரி வசூலில், நிறுவனங்கள் செலுத்திய வரி, 1 லட்சத்து 75 ஆயிரத்து 360 கோடி ரூபாயாக உள்ளது. இது, சென்ற நிதியாண்டின் இதே காலத்தை விட 23.17 சதவீதம் (1 லட்சத்து 42 ஆயிரத்து 368 கோடி ரூபாய்) அதிகமாகும். இதே காலத்தில், தனி நபர் செலுத்திய வருமான வரி 22.65 சதவீதம் உயர்ந்து 66 ஆயிரத்து 330 கோடியில் இருந்து, 81 ஆயிரத்து 353 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. மதிப்பீட்டு காலத்தில், நாட்டின் மறைமுக வரி வ‹ல் அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டில், செப்டம்பருடன் முடிவடைந்த ஆறுமாத காலத்தில், நாட்டின் மொத்த மறைமுக வரி வசூல், 1 லட்சத்து 69 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, சென்ற நிதியாண்டின், இதே காலத்தை விட 20.8 சதவீதம் அதிகமாகும். இதே காலத்தில், சுங்க வரி வருவாய் 20 சதவீதம் அதிகரித்து, 73 ஆயிரத்து 247 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. உற்பத்தி வரி வசூல் 14 சதவீதம் உயர்ந்து, 58 ஆயிரத்து 964 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே காலத்தில், நாட்டின் சேவை வரி வசூல் குறிப்பிடத்தக்க அளவிற்கு உயர்ந்துள்ளது. சென்ற நிதியாண்டின், முதல் அரையாண்டு காலத்தை விட, நடப்பு நிதியாண்டின், இரண்டாவது அரையாண்டு காலத்தில், சேவை வரி வசூல் 35.6 சதவீதம் உயர்ந்து, 36 ஆயிரத்து 459 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.எனினும் சென்ற செப்டம்பர் மாதத்தில், சுங்கம், உற்பத்தி மற்றும் சேவை வரி வசூல் குறைந்துள்ளது. மத்திய அரசுமற்றும் இதர பெட்ரோலியப் பொருள்களுக்கான சுங்க வரி மற்றும் உற்பத்தி வரியை குறைத்தது. இத்தகைய நடவடிக்கையால், மத்திய அரசுக்கு மறைமுக வரி வருவாயில் ஆண்டுக்கு 49 ஆயிரம் கோடி ரூபாய் குறையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சென்ற ஜூலை மாதம் நாட்டின் தொழில் உற்பத்தி 3.3 சதவீதமாக குறைந்துள்ளது. இதன் தாக்கம் காரணமாகவும், பெட்ரோலியப் பொருட்களின் மீதான வரிகள் குறைக்கப் பட்டதாலும், சென்ற செப்டம்பர் மாதம், மறைமுக வரி வசூலில் சரிவு ஏற்பட்டுள்ளது. எனினும், சென்ற செப்டம்பர் மாதம் மொத்த மறைமுக வரி வசூல், சென்ற ஆண்டின் இதே மாதத்தை விட 1.2 சதவீதம் அதிகரித்து, 28 ஆயிரத்து 510 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.அதே சமயம் இதே மாதங்களில், சுங்க வரி வசூல் 10.9 சதவீதம் சரிவடைந்து, 10 ஆயிரத்து 126 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதே மாதங்களில், உற்பத்தி வரி 0.3 சதவீதம் என்ற அளவில் சற்றே குறைந்து, 11 ஆயிரத்து 417 கோடி ரூபாயாக இருந்தது. எனினும், சேவைகள் வரி 29.6 சதவீதம் உயர்ந்து 5,374 கோடி ரூபாயில் இருந்து 6,967 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|