பதிவு செய்த நாள்
10 அக்2011
02:42

தங்கம் விலை உச்சத்திற்கு போய்க் கொண்டிருக்கும் நிலையிலும், அதில் மேற்கொள்ளப்படும் முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், நடப்பு 2011-12ம் நிதியாண்டில், இந்தியா 1,000 டன்னிற்கும் அதிகமாக தங்கத்தை இறக்குமதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மக்களின் பாரம்பரிய, கலாசார விழாக்களில் தங்க ஆபரணங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதனால், உலகளவில் நம்நாட்டில் தங்கத்திற்கான தேவை, மிகவும் அதிகமாக உள்ளது. இத்துடன், சர்வதேச நிலவரங்களால், தற்போது தங்கம், மிகச் சிறந்த முதலீட்டு பொருளாகவும் மாறி உள்ளது. இதன் காரணமாகவும், நாட்டில் தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. கடந்த 2008ம் ஆண்டு பொருளாதார மந்த நிலையை சந்தித்த அமெரிக்கா, தற்போது நிதி நெருக்கடியை சந்தித்துள்ளது. கிரீஸ் உள்ளிட்ட ஒரு சில ஐரோப்பிய நாடுகளும், இத்தகைய பிரச்னையை சந்தித்து வருகின்றன. இந்த நெருக்கடிகளுக்கு அவ்வப்போது தற்காலிக தீர்வு காணப்பட்டாலும், ஒரு கட்டத்தில் நிலைமை கைமீறும் அபாயம் உள்ளதாக, பொருளா தார வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். உலக அரசியலில் நிகழும் மாற்றங்களால் பங்குகள், ரியல் எஸ்டேட், அன்னியச் செலாவணி சார்ந்த வர்த்தகம், பாதிப் பிற்கு ஆளாகிறது. ஆனால், தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களின் பயன்பாடு உலகளவில் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அவற்றின் மீதான முதலீட்டின் மீது இடையூறற்ற வருவாய் கிடைக்கிறது.இதனால், உலகளவில் தங்கத்தில் முதலீடு செய்வது பெருகி வருகிறது. தங்கத்திற்கான தேவை உயர்ந்து வருவதால், அதன் விலையும் விண்ணை முட்டும் அளவிற்கு அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன், 10 கிராம் தங்கம் 26 ஆயிரம் ரூபாய் என்ற அளவிற்கு விலை போனது. இருந்தபோதிலும், தங்கத்தின் விற்பனை பெரிய அளவிற்கு குறையவில்லை என்கின்றனர், தங்க நகை வியாபாரிகள். உள்நாட்டில் தங்கத்திற்கு தேவை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, அதன் இறக்குமதியும் ஆண்டுக்கு, ஆண்டு உயர்ந்து வருகிறது. எனினும், நடப்பு 2011-12ம் நிதியாண்டின், ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டில், நாட்டின் தங்கம் இறக்குமதி, முந்தைய காலாண்டை விட 6.6 சதவீதம் குறைந்து, 286 டன் என்ற அளவில் இருந்து, 267 டன்னாக குறைந்துள்ளது. ஆனால், கடந்த நிதியாண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும் போது, இது 68 சதவீதம் அதிகமாகும். நடப்பு நிதியாண்டின், செப்டம்பருடன் முடிவடைந்த அரையாண்டில், நாட்டின் தங்கம் இறக்குமதி,563 டன் என்ற அள வில் இருந்தது. இதில், தங்கம் இறக்குமதி முதல் காலாண்டை விட, இரண்டாவது காலாண்டில் குறைந்திருந்தது. அதாவது ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில், தங்கம் இறக்குமதி மந்தமடைந்தது. இதனால், ஒரு கட்டத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை, 28 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக விலை போனது."தற்போது பண்டிகை காலம் என்பதாலும், கரீப் பருவ சாகுபடி சிறப்பாக உள்ளதாலும், நகர்புறங்களில்மட்டுமின்றி, கிராமப்புறங்களிலும் தங்கத்திற்கான தேவை பெருகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது' என, ஆய்வாளர் சஞ்சீவ் அரேல் தெரிவித்தார். கடந்த 2009-10ம் நிதியாண்டில், இந்தியா 958 டன் தங்கத்தை இறக்குமதி செய்திருந்தது. இது,நடப்பு நிதியாண்டில் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இது குறித்து, உலக தங்க கவுன்சில் இயக்குனர் கெயூர் ஷா கூறுகை யில்,"நடப்பு நிதியாண்டின், முதல் அரையாண்டில் இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்துடன் ஒப்பிடும் போது,இரண்டா வது அரையாண்டிலும் அதே அளவிற்கு தங்கம் இறக்குமதியாக வாய்ப்புள்ளது.மேலும்,இனி பண்டிகை காலம் என்ப தால், நடப்பு நிதியாண்டில் நாட்டின் தங்கம் இறக்குமதி 1,000 டன்னை தாண்டும்' என்று தெரிவித்தார். தங்கம் விலை உயரும் போது, பழைய தங்க நகைகள் அதிகளவில் சந்தையில் விற்பனைக்கு வருவது வழக்கம். ஆனால், தங்கம் விலை மேலும் உயரும் என்ற எதிர்பார்ப்பில், மக்கள் பழைய தங்க நகைகளை, விற்பனை செய்யாமல் இருப்பில் வைத்துள்ளனர். இதன் காரணமாகவும், தங்கம் இறக்குமதி மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என, தங்க வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளோர் தெரிவித்தனர். கடந்த சில நாட்களாக தங்கம் விலை சரிவடைந்துள்ளதால், அதில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது. தங்கம் விலை யில் ஏற்பட்டுள்ள சரிவு, தற்காலிகமானது என்ற நோக்கத்தில், முதலீடு அதிகரித்து வருவதாக இத்துறையினர் தெரிவித் தனர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|