பதிவு செய்த நாள்
14 அக்2011
12:35

ஜப்பானிய மின்னணு நிறுவனமான சோனியின் முத்திரைத் தயாரிப்பான "பிராவியா' திரவ படிக காட்சி (எல்.சி.டி.,) "டிவி'க்கøளில், சிலவற்றில் தீப்பிடிக்கும் அபாயம் உள்ளது. இது கண்டுபிடிக்கப்பட்ட பின், உலகெங்கும் 16 லட்சம் தொலைக்காட்சி பெட்டிகளை, திரும்பப் பெற அந்த நிறுவனம் நேற்று முன்தினம் முடிவு செய்தது. ஆனால், இந்தியாவில் மட்டும் இவை திரும்பப் பெறப்படாது என அறிவித்துள்ளது.ஒரு சிலவை "தீ' பிடிக்கலாம் : கடந்த 2007-008ம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட 40 அங்குல, திரவ படிக தொலைக்காட்சி பெட்டிகளில், திடீரென அதிக சூடாகிவிடுவது, புகை கிளம்புவது, உதிரிபாகங்கள் உருகிவிடுவது என்பது போய், தீப்பிடிக்கும் அளவுக்குச் சென்றுவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.அதுவும், "கே.எல்.வி -40 டபிள்யூ 300ஏ' மற்றும் "கேஎல்வி -40 எக்ஸ் 350ஏ' என்ற இரண்டு வகைகளில் தான் புகார் கிளம்பியது. ஜப்பானில் மட்டுமே இதுபோன்ற பத்துக்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகியுள்ளன. உடனடியாக சுதாரித்துக்கொண்ட சோனி நிறுவனம், ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில், 2007-08ம் ஆண்டுகளில் விற்பனை செய்யப்பட்ட, 16 லட்சம் பிராவியா திரவ படிக தொலைக்காட்சிப் பெட்டிகளைத் திரும்பப் பெறுவது என முடிவெடுத்துள்ளது. இந்தியாவில் "தீ' பிடித்தால் பரவாயில்லை : அதேசமயம், இந்தியாவில் இந்தத் திரும்பப் பெறும் முடிவை எடுக்காமல், "இலவசமாகவே வந்து, "சர்வீஸ்' செய்து கொடுக்கிறோம்' என அறிவித்துள்ளது. இதற்கு காரணமாக அவர்கள் கூறுகையில், "2007-08ம் ஆண்டுகளில், மேற்குறிப்பிட்ட வகையைச் சேர்ந்த 3,200 தொலைக்காட்சிப் பெட்டிகள் தான் இந்தியாவில் விற்பனையாகியுள்ளன. அவை, உலகம் முழுவதும் நடந்த விற்பனையின் மொத்த அளவில் வெறும் 0.2 சதவீதம் தான். மேலும், இந்தியாவில் இத்தகைய புகார் எதுவும் பதிவாகவில்லை. எனவே, யாருக்கேனும் குறைபாடு இருக்குமானால், அதை அவர்களிடத்துக்கே சென்று, முற்றிலும் இலவசமாக நிவர்த்தி செய்து கொடுக்க உள்ளோம்; தேவைப்பட்டால், உதிரிபாகங்களை மாற்றித் தரவும் தயார்' என்கின்றனர்.மற்ற வகை "பிராவியா'விலும் பிரச்னை? : ஆனால், 40 அங்குல பிராவியா மட்டுமில்லை; மற்ற வகை தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கும் இதே நிலை தான் என்கிறார், சென்னையைச் சேர்ந்த மென்பொருள் வல்லுனர் பாரதி. அவர் மேலும் கூறுகையில், ""எங்கள் வீட்டில் 32 அங்குல "எஸ் பிராவியா' வாங்கினோம். அதிலிருந்து, திடீரென நெடியுடன் கூடிய புகை கிளம்பவே, சோனி நிறுவனத்திடம் புகார் தெரிவித்தோம். வந்து பார்த்தவர்கள்; சில்லு எரிந்துவிட்டது, பலகையும் பாழாகிவிட்டது, என்கின்றனர். முகப்பு பலகை வரை மாற்றுவதென்றால் 12 ஆயிரம் ரூபாய் செலவாகும், என்கின்றனர். அதற்கு, நான் புது தொலைக்காட்சியே வாங்கிவிடுவேன். மற்ற நாடுகளில், மொத்தமாக மாற்றிக் கொடுக்கும் சோனி நிறுவனம், இந்தியாவிலும், பழுது பார்ப்பதோடு நிறுத்திவிடாமல், தொலைக்காட்சிப் பெட்டியையே மாற்றிக் கொடுக்க வேண்டும்,'' என்றார். என்ன செய்யப்போகிறது சோனி?
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|