பதிவு செய்த நாள்
16 அக்2011
00:22

நடப்பு வாரத்தில், உள்நாட்டில் பங்கு வர்த்தகம் முதலீட்டாளர்களுக்கு, ஆதாயம் அளிப்பதாக இருந்தது. இதற்கு முக்கிய காரணம், இதுவரை காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ள நிறுவனங்களின், வருவாய் மற்றும் லாபம் சிறப்பான அளவில் உயர்ந்துள்ளது தான்.இன்போசிஸ் டெக்னாலஜிஸ் நிறுவனம், நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், சிறப்பான செயல்பாட்டை கண்டுள்ளது. இக்காலாண்டில், இந்நிறுவனத்தின் லாபம், கடந்த ஆண்டின் இதே காலாண்டை விட, 10 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இந்நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கை வெளியானதை அடுத்து, இதன் பங்கின் விலை மட்டுமின்றி, ஒட்டுமொத்த தகவல் தொழில்நுட்ப நிறுவனப் பங்குகளின் விலையும் மிகவும் அதிகரித்தது. இதையடுத்து, அன்றைய தினம் (புதன் கிழமை) "சென்செக்ஸ்' 422 புள்ளிகள் உயர்ந்ததுஇன்போசிஸ் நிறுவனம், நடப்பு முழு நிதியாண்டிற்கான வருவாய் மற்றும் லாப இலக்கை குறைத்துக் கொண்டுள்ளது. ரூபாய்க்கு எதிரான அமெரிக்க டாலரின் மதிப்பில் ஏற்பட்டுள்ள ஏற்ற,இறக்கங்களால் தான், இலக்கை குறைத்து கொண்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. "சென்செக்ஸ்': ஒட்டுமொத்த அளவில், நடப்பு வாரத்தில் பங்கு வியாபாரம் நன்றாகவே இருந்தது. திங்கள் முதல் வெள்ளி வரையிலான, ஐந்து வர்த்தக தினங்களில், "சென்செக்ஸ்' 525 புள்ளிகள் அதிகரித்து, 17,083 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி' 153 புள்ளிகள் உயர்ந்து, 5,0132 புள்ளிகளிலும் நிலை பெற்றன. கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது, "சென்செக்ஸ்' 850 புள்ளிகள் அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆறு வார காலத்தில், மிகவும் அதிகபட்ச அளவாகும். காலாண்டு முடிவுகள்: டி.டி.கே. பிரஜ்டீஜ், ப்ராஜ் இண்டஸ்ட்ரீஸ், கோவா கார்பன் ஆகிய நிறுவனங்களும், சிறந்த காலாண்டு முடிவுகளை அறிவித்துள்ளன. இதர நிறுவனங்களின் செயல்பாடும் நன்கு இருக்கும் நிலையில், அது பங்கு வர்த்தகத்திற்கு வலு சேர்ப்பதாக இருக்கும். ரூபாயின் வெளி மதிப்பு குறைந்துள்ளதால், இறக்குமதி சார்ந்த நிறுவனங் களின் லாப வரம்பு, குறைய வாய்ப்புள்ளது. வங்கிகள்: தனலஷ்மி வங்கியின் வசூலாகாத கடன் அதிகரித்துள்ளது. வங்கியின், செயல்பாட்டில் குறைகள் உள்ளது என இவ்வங்கியின் சங்கம்,ரிசர்வ் வங்கிக்கு புகார் செய்தது. இதனால்,இதன் பங்கின் விலை சரிவடைந்து போனது. இந்நிலையில், வங்கித் தரப்பில், சங்கத்தின் புகாருக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டதை அடுத்து, இதன் பங்கின் விலை சற்று உயர்ந்தது.இதற்கு முன்பாக, டெவலப்மென்ட் கிரடிட் வங்கி குறித்து புகார் எழுந்தது என்றாலும், அதன் செயல்பாடு தற்போது நன்கு உள்ளது. தனியார் துறை வங்கிகள், சென்ற காலாண்டிற்கு சிறப்பான நிதிநிலை அறிக்கை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. வங்கிப் பங்குகளை வாங்கலாமா? வங்கித் துறையில், பல வங்கிகளின் செயல்பாடு நன்கு இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. இருப்பினும், பணவீக்க அதிகரிப்பால், வங்கிகளுக்கான வட்டி விகிதம் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. இதனால், கடன் வாங்குவது குறைந்து போகும் என்பதுடன், வங்கிகளின் வசூலாகாத கடன் உயரக்கூடும். இது, வங்கி களின் லாபத்தை பாதிக்கும். வங்கிகளின் பங்குகள் குறையும் போது, நீண்ட கால அடிப்படையில் வாங்கி வைத்தால் அது லாபம் அளிக்கும். புதிய வெளியீடுகள்: புதிய பங்கு வெளியீடுகள் முதலீட்டாளர்களுக்கு தொடர்ந்து இழப்பை ஏற்படுத்தி வருகின்றன. அண்மையில், பங்கு வெளியீட்டை மேற்கொண்ட, டிஜாரியா பாலிபைப்ஸ் நிறுவனத்தின் பங்குகள் பட்டியலிடப்பட்ட தினத்தன்று, 70 சதவீதம் குறைந்து போனது. அதாவது, 60 ரூபாய்க்கு வெளியிடப்பட்ட இதன் பங்கு ஒன்று 18 ரூபாய்க்கு சரிவடைந்து போனது. வேலை நிறுத்தம்: மாருதி சுசூகி மற்றும் கோல் இந்தியா ஆகிய நிறுவனங்களின் உற்பத்தி, வேலை நிறுத்தப் போராட்டத்தால் பாதிப்புக் குள்ளாகி உள்ளது. இது, மற்ற நிறுவனங்களுக்கும் பரவாமல் இருக்க வேண்டும்.கடந்த 10-20 ஆண்டு கால முன்னேற்றத்திற்கு முக்கிய காரணம், இந்திய நிறுவனங்களில் அதிகளவில் வேலை நிறுத்தம் இல்லாமல் இருந்தது தான். இதனால், நாட்டின் தொழில்துறை உற்பத்தி, பாதிக்கப்படா மல் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சந்தையின் இந்த ஏற்றம் நிலைக்குமா? இது கேள்விக்குறிதான். ஏனெனில், நாட்டின் தொழிற் துறை உற்பத்தி 4.1 சதவீத மாக குறைந்துள்ளது. அக்டோபர் 1ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், உணவுப் பொருள் பணவீக்கம் 9.32 சதவீத மாகவும், செப்டம்பர் மாதத்தில், பொதுப் பணவீக்கம் 9.72 சதவீதமாகவும் உயர்ந்தே காணப்படுகிறது. ரிசர்வ் வங்கியின், நிதிக் கொள்கை குறித்த கூட்டம், 25ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் வங்கிகளுக்கான வட்டி விகிதம் மீண்டும் உயர்த்தப்படாமல் இருக்க வேண்டும். உள்நாட்டில், பல மாநிலங்களில் மின் தட்டுப்பாடு, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், ஒட்டுமொத்த தொழில் துறைகளின் உற்பத்தி, பாதிப்புக்குள்ளாகும். இது, நிறுவனங்களின் வருவாய் மற்றும் லாபத்தை நிச்சயம் பாதிக்கும். வரும் வாரம் எப்படி இருக்கும்? வரும் வாரத்தையும், நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் தான் நிர்ணயிக்கும். குறிப்பாக, திங்களன்று வரவிருக்கும் டி.சி.எஸ்., நிறுவனத்தின் காலாண்டு முடிவும், சனிக்கிழமையன்று வெளி வரவிருக்கும் ரிலையன்சின் காலாண்டு முடிவும், பங்குச் சந்தையின் போக்கை நிர்ணயிக்கும். - சேதுராமன் சாத்தப்பன் -
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|