பதிவு செய்த நாள்
16 அக்2011
10:26

புதுடில்லி: நிலக்கரி பற்றாக்குறையால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரி சப்ளை செய்யும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டில் உள்ள பெருநகரங்கள் உட்பட அனைத்து பகுதிகளிலும், தற்போது மின் வெட்டு அதிகரித்துள்ளது. தேசிய அனல் மின் கழகத்துக்குச் சொந்தமான ஐந்து அனல் மின் நிலையங்களில், நிலக்கரி பற்றாக்குறையாக இருப்பதால், இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதுகுறித்து மத்திய நிலக்கரித் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கை: நிலக்கரி பற்றாக்குறையால் மின் உற்பத்தி பாதிக்கப்படுவதைத் தவிர்க்க, அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அனல் மின் நிலையங்களுக்குத் தேவையான நிலக்கரியை சப்ளை செய்யும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. 180 "ரேக்'குகளில் நிலக்கரி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவற்றில், 169 "ரேக்' நிலக்கரி, மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களில், இந்த அளவு, கணிசமாக அதிகரிக்கப்படும். கடந்த மூன்று நாட்களில், வடக்கு பகுதிகளில் உள்ள மின் நிலையங்களுக்கு, 140 "ரேக்' நிலக்கரி அனுப்பப்பட்டுள்ளது. அனல் மின் நிலையங்களில் தற்போது இருப்பு வைக்கப்பட்டுள்ள நிலக்கரியின் அளவு குறித்து, மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. எந்த மின் நிலையத்திலாவது, குறைவாக நிலக்கரி இருப்பது தெரியவந்தால், அங்கு கூடுதலாக நிலக்கரி அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மின் நிலையங்களுக்கு நிலக்கரி சப்ளை செய்வதற்கு முன்னுரிமை அளிக்கும்படி, நிலக்கரி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|