பதிவு செய்த நாள்
18 அக்2011
00:11

மும்பை : நடப்பு 2011 - 12ம் நிதியாண்டின் முதல் ஆறு மாத காலத்தில் (ஏப்ரல் - செப்டம்பர்), நாட்டின் நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி, 1 லட்சத்து 2 ஆயிரத்து 388 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, 15.53 சதவீதம் (88 ஆயிரத்து 623 கோடி ரூபாய்) அதிகம் என, நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் வெளியிட்டுள்ள, தற்காலிக புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டாலர் மதிப்பு: இது, டாலர் மதிப்பின் அடிப்படையில் 17.41 சதவீதம் வளர்ச்சி கண்டு, அதாவது, 1,923 கோடி டாலரிலிருந்து 2,258 கோடி டாலராக அதிகரித்துள்ளது. மேற்கொண்ட மொத்த ஏற்றுமதியில், பட்டை தீட்டப்பட்ட மற்றும் மெருக்கேற்றப்பட்ட வைர ஏற்றுமதி, 58 ஆயிரத்து 708 கோடி ரூபாயிலிருந்து, 60 ஆயிரத்து 259 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது. இது, டாலர் மதிப்பின் அடிப்படையில், 1, 274 கோடி டாலரிலிருந்து 1,329 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இதே காலத்தில், கச்சா வைர ஏற்றுமதி, 67 சதவீதம் அதிகரித்து, 2,306 கோடி ரூபாயிலிருந்து, 3,854 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது. இது, டாலர் மதிப்பில் 70 சதவீதம் உயர்ந்து, 50 கோடி டாலரிலிருந்து, 85 கோடி டாலராக அதிகரித்துள்ளது. ஒட்டு மொத்த தங்க ஆபரணங்கள் ஏற்றுமதி, 39 சதவீதம் அதிகரித்து, 25 ஆயிரத்து 778 கோடி ரூபாயிலிருந்து, 35 ஆயிரத்து 678 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதில், பொது சந்தையிலிருந்து மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதி, 17 சதவீதம் அதிகரித்து, 4,449 கோடியிலிருந்து, 5,190 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. அதே சமயம், சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மற்றும் பிரத்யேக ஏற்றுமதி மண்டலங்களில் இருந்து மேற்கொள்ளப்பட்ட, தங்க ஆபரணங்கள், தங்கக்காசுகள் போன்றவற்றின் ஏற்றுமதி, 43 சதவீதம் அதிகரித்து, 21 ஆயிரத்து 328 கோடி ரூபாயிலிருந்து, 30 ஆயிரத்து 487 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது. வண்ண நவரத்தினங்கள்: இதே காலத்தில், வண்ண நவரத்தினங்கள் ஏற்றுமதி, 21 சதவீதம் வளர்ச்சி கண்டு, 643 கோடி ரூபாயிலிருந்து, 781 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, டாலர் மதிப்பின் அடிப்படையில், 23 சதவீதம் உயர்ந்து, 13.93 கோடி வெளியிலிருந்து, 17.15 கோடி டாலராக அதிகரித்துள்ளது. வெள்ளி ஆபரணங்கள் ஏற்றுமதி, 51 சதவீதம் உயர்ந்து, 1,011 கோடி ரூபாயிலிருந்து, 1,528 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, டாலர் மதிப்பில் 53 சதவீதம் வளர்ச்சி கண்டு, 21.92 கோடி ரூபாயிலிருந்து, 33.54 கோடி டாலராக உயர்ந்துள்ளது. அமெரிக்கா: சென்ற செப்டம்பர் மாதத்தில் மட்டும், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி, 26 சதவீதம் வளர்ச்சி கண்டு, 20 ஆயிரத்து 741 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டு இதே மாதத்தில் 16 ஆயிரத்து 426 கோடி ரூபாயாக இருந்தது. இதே செப்டம்பர் மாதங்களில், இவற்றின் ஏற்றுமதி டாலர் மதிப்பில் 22 சதவீதம் அதிகரித்து 357 கோடி டாலரிலிருந்து, 435 கோடி டாலராக உயர்ந்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார சுணக்க நிலையால், நம் நாட்டின் ஒட்டு மொத்த ஏற்றுமதி வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் குறையக் கூடும் என, பல்வேறு அமைப்புகள் மதிப்பீடு செய்துள்ளன. ஆனால், இது வரையில், நாட்டின் மொத்த ஏற்றுமதி சிறப்பான அளவில் உயர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. புதிய நாடுகள்: நாட்டின் மொத்த ஏற்றுமதி தவிர, நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதியும் குறிப்பிடத்தக்க அளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளது. நம் நாட்டின் ஏற்றுமதியாளர்கள், பழைய சந்தைகளுடன், மேலும், பல புதிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும் வகையில், கடந்த ஒரு சில வருடங்களாக தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு நல்ல பயனும் கிடைத்துள்ளது என, மும்பையைச் சேர்ந்த ஆபரண ஏற்றுமதி நிறுவனத்தின் உரிமையாளர் ஒருவர் தெரிவித்தார். நடப்பு நிதி ஆண்டில், இது வரையிலுமாக மேற்கொள்ளப்பட்ட நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதியில், நவநாகரிக ஆடைகளில் பதிக்கப்படும் ஆபரணங்கள் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வாங்கிச் செல்லும் தங்க, வெள்ளி ஆபரணங்கள் போன்றவை சேர்க்கப்படவில்லை என, இந்த கவுன்சில் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|