பதிவு செய்த நாள்
24 அக்2011
09:23

உள்ளாட்சித் தேர்தலுக்கு முன் நடந்த அபரிமிதமான மது விற்பனையை தொடர்ந்து, தீபாவளி விற்பனைக்காக, 1,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சரக்கு, "டாஸ்மாக்' கடைகளுக்கு சப்ளை செய்யப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகை நாளில் மட்டும், 100 கோடி ரூபாய்க்கு சரக்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும், உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, கடந்த 15ம் தேதி மாலை முதல் அக்டோபர் 19ம் தேதி மாலை வரையிலும், 21ம் தேதியும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. விடுமுறை காரணமாக, தேர்தலுக்கு முன், டாஸ்மாக் கடைகளில் சரக்கு விற்பனை மூன்று மடங்கு உயர்ந்தது. அக்டோபர் 13 முதல் 15ம் தேதி மாலை 5 மணி வரை, மூன்று நாட்களில் மட்டும், தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளின் விற்பனை, 500 கோடி ரூபாயைக் கடந்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நாளை (அக்.,25) முதல் மூன்று நாட்களுக்கு மது விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மூன்று நாட்களிலும் தட்டுப்பாடு இன்றி கடைகளில் சரக்கு கிடைக்க, சப்ளை அதிகரிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை விற்பனைக்காக, 1,000 கோடி ரூபாய் மதிப்புள்ள ஐ.எம்.எப்.எல்., பீர், ஒயின் மதுபானங்கள், டாஸ்மாக் குடோன்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நேற்று வரை தமிழக டாஸ்மாக் கடைகளுக்கு, 17 லட்சம் கேஸ் ஐ.எம்.எப்.எல்., மதுபானங்களும், 8.50 லட்சம் கேஸ் பீரும் சப்ளை செய்யப்பட்டுள்ளன. தீபாவளி பண்டிகை நாளில் மட்டும், 100 கோடி ரூபாய்க்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பண்டிகைக்கு முந்தைய நாள் (25ம் தேதி) 75 கோடி ரூபாய்க்கும், 27ம் தேதி, 75 கோடி ரூபாய்க்கும் ஆக மொத்தம், 250 கோடி ரூபாய்க்கு இச்சமயத்தில் விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, "டாஸ்மாக்' அதிகாரி ஒருவர் கூறியதாவது: உள்ளாட்சித் தேர்தலுக்கு முன், சரக்கு விற்பனை மூன்று மடங்கு அதிகரித்தது. பல கடைகளில் இருப்பு சரக்கு உட்பட அனைத்து சரக்குகளும் விற்றுத் தீர்ந்து விட்டன. தற்போது, அனைத்து கடைகளுக்கும், மூன்று நாளுக்குத் தேவையான சரக்குகள் சப்ளை செய்யப்பட்டு விட்டன. மேலும், தீபாவளி நாளில் தட்டுப்பாட்டை போக்கும் வகையில், சரக்குகளை சப்ளை செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|