பதிவு செய்த நாள்
10 நவ2011
10:12

மதுரை:மதுரை ஆவினில் இருந்து பால் எடுத்துச் செல்ல, கடந்த ஆட்சியில் அரசியல்வாதிகள் "சிண்டிகேட்' அமைத்து, டெண்டர் எடுத்ததால், நிர்வாகத்திற்கு ரூ.ஒரு கோடி இழப்பு ஏற்பட்டது. இம்முறையும் இழப்பை ஏற்படுத்த அரசியல்வாதிகள் முயன்றதால், மறுடெண்டர் விடப்படவுள்ளது.மதுரை ஆவினில் இருந்து தினமும் 42 வழித்தடங்களுக்கு, பால் வினியோகம் செய்யப்படுகிறது. இதற்காக இரண்டரை மெட்ரிக் டன் மற்றும் ஐந்தரை மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட லாரிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்காக இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, டெண்டர் விடப்படும்.
இதற்கான அறிவிப்பு வெளியானவுடன் சுறுசுறுப்பு அடையும் அரசியல்வாதிகள், வெளியாட்களை உள்ளே அனுமதிக்காமல், பினாமி பெயரில் கூடுதல் விலைக்கு விண்ணப்பித்து டெண்டர் எடுக்கின்றனர். கடந்த ஆட்சியில், தி.மு.க., நிர்வாகிகளுக்கு நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் "சிண்டிகேட்' அமைத்து கூடுதல் விலைக்கு டெண்டர் எடுத்தனர். இதற்காக கட்சி நிர்வாகிகளுக்கு லாரி ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் கமிஷனும் தந்தனர்.
குறைந்த விலையில் டெண்டர் எடுக்க ஆள் இருந்தும், கூடுதல் விலையில் எடுக்க "சிண்டிகேட்' அமைத்த அரசியல்வாதிகளால் ஆவின் நிர்வாகத்திற்கு ரூ.ஒரு கோடி இழப்பு ஏற்பட்டது.இந்நிலையில், 2011-13ம் ஆண்டிற்கான டெண்டர் நேற்று விடப்பட்டது. இதை முன்கூட்டியே அறிந்த அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் இருவர், தங்களுக்கு சில வழித்தடங்களை ஒதுக்குமாறு அதிகாரிகளை மிரட்டினர். இவர்களை தொடர்ந்து, பகுதி, வட்ட செயலாளர்களும் மிரட்டினர். ஆனால் அதிகாரிகள் வழித்தடம் ஒதுக்க மறுத்து விட்டனர்.இதன்காரணமாக, நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் டெண்டர் விடப்பட்டது. ஒவ்வொரு வழித்தடத்திற்கும் குறைந்தது மூன்று பேராவது விண்ணப்பித்திருக்க வேண்டும். ஆனால் ஆளுங்கட்சியினரின் மிரட்டலாலும், "சிண்டிகேட்' அமைக்க போவதாலும் ஒவ்வொரு வழித்தடத்திற்கும் ஒருவர், இருவர் என மொத்தமே 57 பேர் மட்டுமே விண்ணப்பித்திருந்தனர். இதில் இரு வழித்தடங்களுக்கு மட்டும் மூன்றுக்கும் மேற்பட்டோர் விண்ணப்பத்திருந்தனர். இதனால் அதற்கு மட்டும் டெண்டர் விடப்பட்டது. மற்ற வழித்தடங்களுக்கு மறுடெண்டர் விட ஆவின் நிர்வாகம் முடிவு செய்து உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|