பதிவு செய்த நாள்
19 நவ2011
00:30

புதுடில்லி:நாட்டின் பால் உற்பத்தி, வரும் 2015ம் ஆண்டிற்குள், 19 கோடி டன்னாக அதிகரிக்கும் என, அசோசெம் அமைப்பு தெரிவித்துள்ளது. இதன் மதிப்பு, ஐந்து லட்சம் கோடி ரூபாய் ஆகும்.நாட்டின் பால் உற்பத்தித் துறை ஆண்டுக்கு, 10 சதவீதம் என்றளவில் வளர்ச்சிக் கண்டு வருகிறது. தற்போது, உள்நாட்டில், பால் உற்பத்தி, 12.30 கோடி டன் என்றளவில் உள்ளது. இது, வரும் 2015ம் ஆண்டிற்குள், 19 கோடி டன்னாக உயரும்.ஐஸ்கிரீம்: உலகளவில், பால் உற்பத்தியில் இந்தியா மிகப் பெரிய நாடாக திகழ்கிறது. உலக பால் உற்பத்தியில், இந்தியாவின் பங்களிப்பு, 20 சதவீதம் என்றளவில் உள்ளது. பால் உற்பத்தியில், நம் நாடு முன்னணியில் உள்ளது என்றாலும் உற்பத்தியில் பெரும்பகுதி, உள்நாட்டிலேயே பயன்படுத்தப்படுகிறது என, அசோசெம் அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மொத்த பால் உற்பத்தியில், 60 சதவீதம் திரவ வடிவில் நுகரப்படுகிறது. மீதமுள்ள, 40 சதவீதம் வெண்ணெய், நெய், பாலாடை கட்டி, தயிர், பனீர், ஐஸ் கிரீம், இனிப்பு உள்ளிட்டவையாக பயன்படுத்தப்படுகிறது.கிராமங்கள்: இதுகுறித்து, அசோசம் அமைப்பின் தலைமைச் செயலர் டி.எஸ்.ராவத் கூறுகையில், "நம் நாட்டின் பால் உற்பத்தித் துறை, ஆண்டுக்கு, 10 சதவீதம் என்றளவில் வளர்ச்சிக்கண்டு வருகிறது. நாட்டின் மொத்த பால் உற்பத்தியில் அமைப்பு சாராத பிரிவு, அமைப்புகள் 85 சதவீத பங்களிப்பையும், அமைப்பு சார்ந்த நிறுவனங்கள், 15 சதவீத பங்களிப்பையும் கொண்டுள்ளன.
உள்நாட்டில், கிராமப்புறங்களில் உள்ள 8 கோடி குடும்பங்கள், பால் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன. மொத்த பால் உற்பத்தியில், கிராமப்புறங்களின் நுகர்வு, 50 சதவீத அளவிற்கு உள்ளது' என்று தெரிவித்தார்.பால் மற்றும் பால் பொருட்களை பதப்படுத்தி சேமித்து வைப்பதற்கு போதிய அளவிற்கு, குளிர் பதன வசதிகள் இல்லாததால், பாலின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால், பால் நுகர்வு குறைவதுடன், இதன் விலையும் தாறுமாறாக உயர்கிறது. மேலும், கால்நடைகளுக்கு, சத்தான தீவனங்கள் அளிக்கப்படுவதில்லை. இதனால், பால் உற்பத்தி குறைந்து போகிறது. இதுவும், இத்துறையின் பின்னடைவிற்குக் காரணமாக உள்ளது என, அசோசெம் அமைப்பின் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்பம்: நவ., 5ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், நாட்டின் உணவுப் பொருள் பணவீக்கம், 10.63 சதவீதமாக குறைந்துள்ளது. ஆனால் இதே வாரத்தில், பால் மற்றும் பால் பொருட்களின் விலை, 10.74 சதவீதம் என்றளவில் அதிகரித்துள்ளது.இந்தியாவில், தனியார் துறை பால் பண்ணைகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இந்நிறுவனங்கள், அதிநவீன தொழில்நுட்பத்தை கையாண்டு, பால் மற்றும் பால் பொருட்களை சிறந்த முறையில், பதப்படுத்தி வருகின்றன.
மேலும், தனியார் பால் பண்ணை நிறுவனங்கள், குளிரூட்டு கிடங்கு வசதிகளை கொண்டுள்ளதுடன் சிறப்பான அடிப்படை கட்டமைப்பு மற்றும் சந்தைப்படுத்தும் ஒருங்கிணைப்பு வசதிகளையும் கொண்டுள்ளன என, ராவத் மேலும் கூறினார்.உள்நாட்டில், ஆந்திரா, பீகார், அரியானா, குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்கள், பால் உற்பத்தியில் சிறந்து விளங்குகின்றன என, அசோசம் அமைப்பின் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|