பதிவு செய்த நாள்
19 நவ2011
00:34

மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம், வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக் கிழமையன்றும் மிகவும் மோசமாக இருந்தது. அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இதர ஆசிய பங்குச் சந்தைகளிலும், பங்கு வியாபாரம் மிகவும் மந்தமாகவே இருந்தது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. இருப்பினும் மதியம் வரை, அதிக இறக்கத்துடன் காணப்பட்ட வர்த்தகம், மதியத்திற்கு பிறகு, ஓரளவிற்கு மீண்டு எழுந்தது.
நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், பொறியியல், உலோகம், ரியல் எஸ்டேட், வங்கி, மின்சாரம், மோட்டார் வாகனம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.ஐரோப்பிய நாடுகளின் நிதி நெருக்கடியால் உலகப் பொருளாதாரத்தில் தொடர்ந்து மந்த நிலை நிலவி வருகிறது. அமெரிக்க டாலருக்கு தேவைப்பாடு உயர்ந்துள்ளதால் வெள்ளியன்று, டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு, வர்த்தகத்தின் இடையே 51.32 ரூபாய் வரை சரிவடைந்திருந்தது.
இதுவும் பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் வர்த்தகம் முடியும் போது, 90.20 புள்ளிகள் குறைந்து, 16,371.51 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 16,396.69 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 16,164.99 புள்ளிகள் வரையிலும் சென்றது.
"சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 18 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், 12 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி' 28.95 புள்ளிகள் குறைந்து, 4,905.80 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 4,915.90 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 4,837.95 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|