பதிவு செய்த நாள்
03 டிச2011
01:19

கொச்சி:வரும் 2012ம் ஆண்டில், இந்தியாவின் இயற்கை ரப்பர் உற்பத்தி, 9.44 லட்சம் டன்னாக இருக்கும் என, மத்திய அரசின் மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, நடப்பு 2011ம் ஆண்டில், 9.01 லட்சம் டன்னாக இருக்கும் என தெரிகிறது.அதேசமயம், இயற்கை ரப்பர் உற்பத்தி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பின் மதிப்பீட்டின் படி, நடப்பு 2011ம் ஆண்டை விட, வரும் 2012ம் ஆண்டில் ரப்பர் உற்பத்தி குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, நடப்பாண்டில், ரப்பர் உற்பத்தி வளர்ச்சி, 5.8 சதவீதமாகவும், இது வரும் ஆண்டில், 4.8 சதவீதமாகவும் இருக்கும் என, இந்த கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவிலும், வரும் 2012ம் ஆண்டில், இயற்கை ரப்பர் உற்பத்தி வளர்ச்சி குறையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. வரும் 2012ம் ஆண்டில், உலகளவில், ரப்பர் உற்பத்தி, 1.04 கோடி டன்னாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இது, 3.6 சதவீத வளர்ச்சியாகும். அதேசமயம், நடப்பாண்டில், சர்வதேச அளவில் ரப்பர் உற்பத்தி, 1 கோடி டன்னாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இது, சென்ற ஆண்டு உற்பத்தி வளர்ச்சியுடன் ஒப்பிடும் போது, 5.6 சதவீத உயர்வாகும். இதே ஆண்டுகளில், உலகளவில், ரப்பர் பயன்பாடு, தற்போதைய, 60.90 லட்சம் டன்னிலிருந்து, 62.80 லட்சம் டன்னாக அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. ஆக, ரப்பர் பயன்பாடு, 0.8 சதவீதம் என்ற அளவிலிருந்து, 3.1 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.
ஏற்றுமதி:நடப்பு 2011ம் ஆண்டில், இந்தியாவின் ரப்பர் ஏற்றுமதி, 57 ஆயிரம் டன்னாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டு 21 ஆயிரத்து, 700 டன்னாக இருந்தது. வரும் 2012ம் ஆண்டில், நாட்டின் ரப்பர் ஏற்றுமதி, 40 ஆயிரம் டன் என்ற அளவில் தான் இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.அதேசமயம், சர்வதேச அளவில் இயற்கை ரப்பர் ஏற்றுமதி, 74.70 லட்சம் டன்னிலிருந்து, 75.70 லட்சம் டன்னாக உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இது, வரும் 2012ம் ஆண்டில், 78.10 லட்சம் டன்னாக இருக்கும்.
இறக்குமதி: சர்வதேச அளவில் இயற்கை ரப்பர் இறக்குமதி, நடப்பாண்டில், 37.60 லட்சம் டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டின் இறக்குமதியை விட, 1 சதவீதம் (38 லட்சம் டன்) குறைவாகும்.இருப்பினும், 2012ம் ஆண்டில் சர்வதேச அளவில் இயற்கை ரப்பர் இறக்குமதி, 1.5 சதவீதம் அதிகரித்து, 38.20 லட்சம் டன்னாக இருக்கும் என தெரிகிறது.வரும் 2012ம் ஆண்டின் தொடக்கத்தில், உள்நாட்டில் ரப்பர் கையிருப்பு, 3.55 லட்சம் டன்னாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இது, நடப்பாண்டின் தொடக்கத்தில், 3.36 லட்சம் டன்னாக இருந்தது.கடந்த ஆண்டின் தொடக்கத்தில், நாட்டின் ரப்பர் கையிருப்பு, 3.15 லட்சம் டன்னாக இருந்தது. இந்தியாவின், மொத்த ரப்பர் உற்பத்தியில், 90 சதவீத உற்பத்தி சிறிய விவசாயிகளால் மேற்கொள்ளப்படுகிறது. உள்நாட்டில் மாதம் ஒன்றிற்கு சாரசரியாக, 80 ஆயிரம் டன் என்ற அளவில் ரப்பர் பயன்பாடு உள்ளது.
சர்வதேச நிலவரம்:சர்வதேச அளவில், வளர்ச்சியடைந்த நாடுகளில் பொருளாதார சுணக்க நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், ரப்பர் பயன்பாடும், இதன் விலையும் அதிகரிக்க வாய்ப்பில்லை. இந்நிலையில், சீனாவில், ரப்பர் கையிருப்பு அதிகமாக உள்ளது.எனவே, அதிகளவில் ரப்பர் உற்பத்தி செய்து வரும், மலேசியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளின் ரப்பர் ஏற்றுமதி குறைய வாய்ப்புள்ளதாக ரப்பர் உற்பத்தி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.சர்வதேச அளவில்,பொருளாதார சுணக்க நிலை ஏற்பட்டுள்ளது. இதனால்,ரப்பர் பயன்பாடும், இதன்விலையும் அதிகரிக்கவாய்ப்பில்லை.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|