பதிவு செய்த நாள்
13 டிச2011
00:30

மும்பை: நாட்டின் பங்கு வியாபாரம், வாரத்தின் தொடக்க தினமான திங்கள்கிழமையன்று, மிகவும் மோசமாக இருந்தது. ஐரோப்பாவில், ஒரு சில நாடுகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை, இதர நாடுகளிலும் பரவக்கூடும் என்ற அச்சப்பாட்டால், ஐரோப்பிய பங்குச் சந்தைகளில், வர்த்தகம் மிகவும் சுணக்கமாக இருந்தது.கடந்த வெள்ளியன்று, அமெரிக்க பங்குச் சந்தைகளில், வர்த்தகம் ஓரளவிற்கு நன்கு இருந்ததால், இதர ஒரு சில ஆசியப் பங்குச் சந்தைகளில், பங்கு வியாபாரம் சூடு பிடித்திருந்தது.இந்நிலையில், சென்ற அக்டோபர் மாதத்தில், நாட்டின் தொழில் துறை உற்பத்தி, 5.1 சதவீதம் என்ற அளவில், எதிர்மறை வளர்ச்சியை கண்டுள்ளது என்ற செய்தி வெளியான போது, 'சென்செக்ஸ்' 300 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது. இந்த நிலை, வர்த்தகம் முடியும் வரை நீடித்தது.நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், உலோகம், வங்கி, எண்ணெய், எரிவாயு, பொறியியல் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை, மிகவும் சரிவடைந்து போனது. இருப்பினும், தகவல் தொழில்நுட்ப நிறுவனப் பங்குகளுக்கு, ஓரளவிற்கு தேவை இருந்தது.பங்கு வர்த்தகத்தில் ஏற்பட்ட சுணக்க நிலை மற்றும் அன்னிய நிதி நிறுவனங்களின் பங்கு முதலீடு குறைந்து போனது போன்றவற்றால், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு, 52.84 ரூபாயாக, மேலும் சரிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 343.11 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 15,870.35 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 16,360.32 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 15,839.96 புள்ளிகள் வரையிலும் சென்றது.'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், விப்ரோ, இன்போசிஸ் மற்றும் டி.சி.எஸ்., ஆகிய மூன்று நிறுவனங்கள் தவிர, ஏனைய 27 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்திருந்தது.தேசியப் பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'நிப்டி' 102.10 புள்ளிகள் சரிவடைந்து, 4,764.60 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே, அதிகபட்சமாக, 4,910.25 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 4,755.55 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|