பதிவு செய்த நாள்
17 டிச2011
01:10

புதுடில்லி:ரிசர்வ் வங்கி, நேற்று வெளியிட்ட அதன் காலாண்டு நிதி ஆய்வு அறிக்கையில், வங்கிகளுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தவில்லை. நாட்டின் பொருளாதார வளர்ச்சியை நிலைநிறுத்திடும் வகையில், ஏற்கனவே எடுக்கப்பட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தளர்த்துவது குறித்தும் முடிவு செய்யப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதாவது, வங்கிகளுக்கான வட்டி விகிதங்கள் விரைவில் குறைக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
பணவீக்கம்:நாட்டின் பணவீக்கம் மிகவும் அதிகரித்தையடுத்து ரிசர்வ் வங்கி அதனை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், கடந்தாண்டு மார்ச் முதல், நடப்பாண்டு அக்டோபர் வரை, வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை 13 முறை உயர்த்தியது.
இதையடுத்து, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கான, "ரெப்போ வட்டி', வங்கிகள் ரிசர்வ் வங்கிக்கு வழங்கும் கடனுக்கான, "ரிவர்ஸ் ரெப்போ' வட்டி விகிதங்கள், தலா 3.50 சதவீதம் உயர்ந்தன.அதேசமயம், பணவீக்கத்தை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கையால், நாட்டில் தொழில் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்ற அக்டோபர் மாதத்தில் நாட்டின் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி 5.1 சதவீதம் என்ற அளவில் எதிர்மறை வளர்ச்சியை கண்டது.
மேலும், நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதமாக குறையும் என, மத்திய அரசு அண்மையில் அறிவித்திருந்தது. சுணக்க நிலை:அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார சுணக்க நிலையால் இந்திய பொருளாதார வளர்ச்சியும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில், வங்கிகளுக்கான வட்டி விகிதம் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வந்ததால், தொழில்துறை நிறுவனங்கள் வங்கிகளிலிருந்து கடன் வாங்குவதை வெகுவாக குறைந்துக் கொண்டன. இதுவும் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி பின்னடைவை கண்டதற்கு காரணமாகும். இதுபோன்ற பல்வேறு இடர்பாடுகளை கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்ட ஆய்வறிக்கையில் வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தவில்லை.கடந்த அக்டோபர் மாதம் 25ம் தேதி ரிசர்வ் வங்கி வெளியிட்ட காலாண்டு ஆய்வறிக்கையிலும், இனி வங்கிகளுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்பட மாட்டாது என தெரிவிக்கப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ரொக்க இருப்பு விகிதம் :ரிசர்வ் வங்கியின் அறிக்கையில், வங்கிகள், ரிசர்வ் வங்கியில் வைத்திருக்கும் ரொக்க இருப்பு விகிதம் (சி.ஆர்.ஆர்), 6 சதவீதம் என்ற அளவிலேயே தொடர்ந்து இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பணப்புழக்கத்தை அதிகரிக்கவும், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்தவும், சி.ஆர்.ஆர். விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், ரிசர்வ் வங்கி சி.ஆர்.ஆர். விகிதத்தை குறைக்காததால், தொழில்துறையினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ரிசர்வ் வங்கியின் அறிக்கையில், ரெப்போ ரேட் சார்ந்த எல்.ஏ.எப் வட்டி 8.5 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ ரேட் அடிப்படையிலான எம்.எஸ்.எப் வட்டி 7.5 சதவீதமாகவும், எம்.எஸ்.எப் வட்டி 9.5 சதவீதம் என்ற அளவிலும், தற்போதுள்ளபடி தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.நடப்பு நிதியாண்டின் இறுதியில் நாட்டின் பொது பணவீக்கம் 7 சதவீதமாக குறையும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் நடவடிக்கை குறித்து அவ்வங்கி யின் கவர்னர் டீ.சுப்பாராவ் கூறும்போது, "பணவீக்கத்தையும், பொருளாதார வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு, வங்கி அதன் கொள்கை முடிவுகளை அவ்வப்போது எடுத்து வருகிறது.
ஊக அடிப்படையில், வட்டி விகிதங்கள் எப்போது குறைக்கப்படும் என்று கூற முடியாது. எனினும், நிதிச் சந்தையில் போதுமான பணப்புழக்கத்திற்கு தேவையான நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி எடுத்து வருகிறது' என்று தெரிவித்தார்.
வரவேற்பு :ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைக்கு, மத்திய நிதியமைச்சர் பிரணாப்முகர்ஜி, பிரதமரின் தலைமை பொருளாதார ஆலோசகர் சி.ரங்கராஜன் மற்றும் பொருளாதார வல்லுனர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை தற்போது உயர்த்தவில்லை என்றாலும் நாட்டின் பணவீக்கம் தொடர்ந்து 9 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. எனவே அடுத்து வரும் ஆய்வுக்கூட்டத்தில் ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தக்கூடும் என்ற கருத்தும் சந்தை வட்டாரத்தில் நிலவுகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|