பதிவு செய்த நாள்
17 டிச2011
01:13

மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், வெள்ளியன்று மிகவும் மோசமாக இருந்தது. ரிசர்வ் வங்கி, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு, வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தவில்லை. இது, எதிர்பார்த்த ஒன்று தான் என்றாலும், வங்கிகள், ரிசர்வ் வங்கியில் வைத்திருக்கும் ரொக்க இருப்பு விகிதம் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இது குறைக்கப்படவில்லை. இதன் காரணமாக, மதியத்திற்கு பிறகு, பங்கு வர்த்தகம் மிகவும் சரிவடைந்து போனது.
நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், பொறியியல் துறை நிறுவனப் பங்குகளின் விலை, 4 சதவீதத்திற்கும் அதிகமாகவும், வங்கி மற்றும் ரியல் எஸ்டேட் துறை நிறுவனப் பங்குகள், 3 சதவீதத்திற்கு அதிகமாகவும் வீழ்ச்சி கண்டன. இவைதவிர, உலோகம், எரிசக்தி, மின்சாரம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின. இருப்பினும், மோட்டார் வாகனம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் மருந்து போன்ற துறைகளில் ஒரு சில நிறுவனப் பங்குகளுக்கு தேவை இருந்தது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 345.12 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 15,491.35 புள்ளிகளில் நிலைபெற்றது.
வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 16,068.90 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 15,425.20 புள்ளிகள் வரையிலும் சென்றது. "சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 3 நிறுவனப் பங்குகள் தவிர, ஏனைய 27 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்திருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி' 94.75 புள்ளிகள் குறைந்து, 4,651.60 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 4,818.85 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 4,628.20 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|