பதிவு செய்த நாள்
28 டிச2011
02:00

புதுடில்லி:நடப்பாண்டில், நுகர்வோர் சாதனங்கள் விற்பனை மந்தமடைந்துள்ளதாக நுகர்வோர் சாதனங்கள் தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இந்தியாவில், வாஷிங் மெஷின்,"ஏசி, டிவி'உள்ளிட்ட நுகர்வோர் சாதனங்களின் சந்தை மதிப்பு, 35 ஆயிரம் கோடி ரூபாய் என்றளவில் உள்ளது. எல்.ஜி., சோனி, வீடியோகான், சாம்சங் மற்றும் பானோசோனிக் உள்ளிட்ட பல்வேறு முன்னணி நிறுவனங்கள், நுகர்வோர் சாதனங்களின் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன.
"டிவி'நுகர்வோர் சாதனங்கள் சந்தையில்,"ஏசி' சாதனங்களின் பங்களிப்பு 21.5 சதவீதம் (7,500 கோடி ரூபாய்) என்ற அளவில் உள்ளது. இது, அளவின் அடிப்படையில், 34 லட்சமாக மதிப்பிடப்பட்டுள்ளது. "டிவி' சாதனங்களின் சந்தை மதிப்பு, அளவின் அடிப்படையில், 1 கோடியே 75 லட்சமாக உள்ளது. இதில், எல்.சி.டி. வகை "டிவி'யின் பங்களிப்பு, 45 லட்சம் என்ற அளவில் உள்ளது.
மூலப்பொருட்கள் விலை உயர்வு, டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களால், எல்.ஜி., சாம்சங் மற்றும் வீடியோகான் போன்ற முன்னணி நிறுவனங்கள், அவற்றின் தயாரிப்புகளின் விலையை, 6 சதவீதம் வரை உயர்த்தியுள்ளன. வெளிநாடுகளில் இருந்து, ஏராளமான நுகர்வோர் சாதனங்கள், இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. நுகர்வோர் சாதனங்களின் மொத்த இறக்குமதியில் சீனா, கொரியா, மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் பங்களிப்பு, 40 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.கடந்த ஜூலை முதல், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 15 சதவீதத்திற்கும் மேலாக சரிவடைந்துள்ளதால், நுகர்வோர் சாதனங்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்களின் செலவினம் பன்மடங்கு அதிகரித்துள்ளது.
சுனாமி: மேலும், இவ்வாண்டு தொடக்கத்தில் ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமியால் அந்நாட்டின் நுகர்வோர் சாதனங்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தாய்லாந்தும் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நாடுகளில் தொழிற்சாலைகளைக் கொண்டுள்ள சோனி, பேனாசோனிக், கேனன், நிகான் போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் உற்பத்தி சரிவடைந்து, விற்பனை வீழ்ச்சி கண்டுள்ளது.
முப்பரிமாண தொழில் நுட்பம்: இந்தியாவில் நுகர்வோர் சாதனங்கள் விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ள போதிலும், பல நிறுவனங்கள், 3டி தொழில்நுட்பம் கொண்ட," டிவி' தயாரிப்பு மற்றும் விற்பனையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. நடப்பாண்டில், எல்.ஜி. எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், பல்வேறு நுகர்பொருள் சாதனங்களை தயாரிப்பதற்காக, 700 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு மேற்கொண்டுள்ளது. இவற்றில், 3டி தொழில்நுட்ப வசதி கொண்ட, "டிவி' தயாரிப்பிற்கு மட்டும் 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
அது போன்று, வரும் 2012-13ம் நிதியாண்டில் சோனி, எல்.ஜி., சாம்சங் ஆகிய நிறுவனங்கள், இணையதளம் வசதி கொண்ட, "ஸ்மார்ட் டிவி' விற்பனையை அதிகரிக்க திட்ட மிட்டுள்ளன. மேலும், எல்.சி.டி., எல்.இ.டி., வகை "டிவி.' விற்பனையை அதிகரிக்கவும், இந் நிறுவனங்கள் தீவிரமாக களமிறங்கியுள்ளன.நாட்டில், நடப்பாண்டு எல்.சி.டி. "டிவி'க் களுக்கான சந்தை, அளவின் அடிப்படையில், 40 லட்சமாக உள்ளது. இது, வரும் ஆண்டில், 55 லட்சமாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில், தற்போது, 42-55 அங்குலம் கொண்ட "டிவி'களுக்கு அதிக வரவேற்பு காணப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு, பல நிறுவனங்கள், இவ்வகை "டி.வி'க்களை தயாரிக்க தீவிரம் காட்டி வருகின்றன.
பண்டிகை காலத்தில்இதுகுறித்து நுகர்வோர் மின்னணு மற்றும் சாதனங்கள் தயாரிப்போர் கூட்டமைப்பின் தலைவர் அனிரூத் தூத் கூறியதாவது:நடப்பாண்டில், நுகர்வோர் சாதனங்கள் சந்தை, 15 சதவீதம் வளர்ச்சி காணும் என மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், 8-9 சதவீதம் மட்டுமே வளர்ச்சியடைந்துள்ளது. சர்வதேச நெருக்கடி, பொரு ளாதார மந்த நிலை, வட்டி உயர்வு, டாலர் மதிப்பு அதிகரிப்பு போன்ற காரணங்களால், பண்டிகை காலத்தி லும் நுகர்வோர் சாதனங்களின் விற்பனை சரிவடைந்துள்ளது.
வரும் நிதியாண்டில், நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றம் காணும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. எனினும், நுகர்வோர் சாதனங்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு, முதல் அரையாண்டு காலம், சவால் நிறைந்தாகவே இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு அனிரூத் கூறினார்.
மேலும் விலைவாசி நிலவரம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|