பதிவு செய்த நாள்
03 ஜன2012
09:13

புதுடில்லி: பெட்ரோல் விலையை உயர்த்தும் எண்ணெய் நிறுவனங்களின் திட்டத்துக்கு, மத்திய அரசிடமிருந்து அரசியல் ரீதியான ஒப்புதல் கிடைக்காததால், இன்னும் இரண்டு வாரங்களுக்கு பெட்ரோல் விலை உயர்த்தப்படாது என, தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப, உள்நாட்டில் பெட்ரோல் விலையில் மாற்றம் செய்யும் அதிகாரம், எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதன்படி, ஒவ்வொரு மாதமும், இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை பெட்ரோல் விலையை, எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைக்கின்றன. தற்போது கச்சா எண்ணெயின் விலை அதிகரித்திருப்பதால், இந்த மாதம் 1ம் தேதியில் பெட்ரோல் விலை, லிட்டருக்கு இரண்டு ரூபாய் வரை அதிகரிக்கப்படும் என, தகவல்கள் வெளியாயின. ஆனாலும், இரண்டு நாட்கள் கடந்த பின்னும் அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
இதுகுறித்து, டில்லி அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது: உ.பி., உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்கள் நடப்பதால், விலை உயர்வை அறிவிப்பதில் பிரச்னை ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், கடந்த முறை விலை உயர்வு அறிவிக்கப்பட்டபோது, பார்லிமென்டில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
காங்கிரசின் கூட்டணி கட்சியான திரிணமுல் காங்கிரசும் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. சமீபத்தில் ராஜ்யசபாவில் லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது, அதில் திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என, திரிணமுல் காங்., கூறியது. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் மீது, திரிணமுல் கடும் அதிருப்தியில் உள்ளது. இந்த சூழ்நிலையில், பெட்ரோல் விலை உயர்வை அறிவித்தால், திரிணமுல் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் கடும் எதிர்ப்பை சந்திக்க வேண்டும் என, அரசு கருதுகிறது. மேலும், விலை உயர்வால், தேர்தலில் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் காங்கிரஸ் அச்சப்படுகிறது. இதனால், எண்ணெய் நிறுவனங்களின் விலை உயர்வுக்கு, அரசியல் ரீதியான ஒப்புதல் கிடைக்கவில்லை. எனவே, இன்னும் இரண்டு வாரங்களுக்கு பெட்ரோல் விலையில் மாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை. இவ்வாறு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|