பதிவு செய்த நாள்
04 ஜன2012
01:39

கொச்சி:நடப்பு நிதியாண்டில், கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி, 400 கோடி டாலரை (20 ஆயிரம் கோடி ரூபாய்) எட்டும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் இறால் ஏற்றுமதி அதிகரித்து வருவதே இதற்கு முக்கிய காரணம். குறிப்பாக, வண்ணமே மற்றும் வெள்ளை இறால் ஏற்றமதி நடப்பு நிதியாண்டில் 30 ஆயிரம் டன்னாக உயரும் என, இந்திய கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு (எஸ்.ஈ.ஏ.ஐ) தெரிவித்துள்ளது.
கறுப்பு வகை இறால்:சர்வதேச சந்தையில், தாய்லாந்து மற்றும் சீனா ஆகிய நாடுகளின் போட்டியால், 2010ம் ஆண்டு முதல் வண்ணமே வகை இறால் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் கறுப்பு வகை இறால்கள் உற்பத்தி அதிகமாக உள்ளது. மொத்த இறால் உற்பத்தியில், 30 சதவீத அளவிற்கே பதப்படுத்தும் வசதி உள்ளது.
ஆசிய நாடுகளான தாய்லாந்து, இந்தோனேஷியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள், இவ்வகை இறால் உற்பத்தியில் முன்னதாகவே ஈடுபட்டு தற்போது, இதன் உற்பத்தியை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. வண்ணமே இறால்களுடன் ஒப்பிடுகையில், கருப்பு வகை இறால்களுக்கான உற்பத்தி செலவு அதிகம். மேலும், இதன் உற்பத்தியும் குறைவு.
உற்பத்தி செலவு:எஸ்.ஈ.ஏ.ஐ யின் கூற்றுப்படி, ஒரு கிலோ வண்ணமே இறால்களுக்கான உற்பத்தி செலவு 2.29 டாலராக உள்ளது. இது, ஏனைய இந்திய இறால்களின் உற்பத்தி செலவில் பாதி என்பது குறிப்பிடத்தக்கது.ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஏழு மாத காலத்தில், வண்ணமே இறால்களின் ஏற்றுமதி, கடந்தாண்டு இதே காலத்துடன் ஒப்பிடுகையில், அளவின் அடிப்படையில் 495 சதவீதமும், ரூபாய் மதிப்பின் அடிப்படையில் 692 சதவீதமும் அதிகரித்துள்ளது.
குறிப்பாக, டாலர் மதிப்பு அடிப்படையில் இதன் ஏற்றுமதி மிக அதிகளவாக 721 சதவீதம் அதிகரித்துள்ளது.முக்கிய இறால் உற்பத்தி நாடுகளான தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளின் அளிப்பு குறைந்துள்ளதையடுத்து, இந்திய இறால்களுக்கு சர்வதேச அளவில் தேவை அதிகமாகியுள்ளது என, கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (எம்.பி. ஈ.டி.ஏ) வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா:மேலும், நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில், அமெரிக்காவிற்கான பதப்படுத்தப்பட்ட இறால்கள் ஏற்றுமதி, அளவின் அடிப்படையில், 47.19 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இதன் ஏற்றுமதி ரூபாய் மதிப்பு அடிப்படையில், 53.55 சதவீதமும், டாலர் மதிப்பு அடிப்படையில் 58.74 சதவீதமும் அதிகரித்துள்ளது. அதேபோல், ஜப்பான் நாட்டிற்கான பதப்படுத்தப்பட்ட இறால் ஏற்றுமதி அளவின் அடிப்படையில், 2.5 சதவீதமும், ரூபாய் மதிப்பு அடிப்படையில் 7.73 சதவீதமும் மற்றும் டாலர் மதிப்பு அடிப்படையில், 10.30 சதவீதமும் வளர்ச்சி கண்டுள்ளது.
எம்.பி.ஈ.டி.ஏ. வெளியிட்டுள்ள தற்காலிக புள்ளிவிவரத்தில், நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில், 6,679.57 கோடி ரூபாய் மதிப்பிலான , 3 லட்சத்து 12 ஆயிரத்து 904 டன் கடல் உணவுப் பொருட்களை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது, டாலர் மதிப்பு அடிப்படையில், 149.63 கோடி டாலராகும்.கடந்த 2010-11ம் முழு நிதியாண்டில், இந்தியாவின் கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி, 8 லட்சத்து 13 ஆயிரத்து 91 டன்னாக இருந்தது. இது, ரூபாய் மதிப்பு அடிப்படையில், 12 ஆயிரத்து 901 கோடி ரூபாயாகவும், டாலர் மதிப்பு அடிப்படையில் 286 கோடி டாலராகும். இதில், பதப்படுத்தப்பட்ட இறால்களின் பங்களிப்பு 44 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.
இரண்டாவது இடம்:உலகளவில், மீன் உற்பத்தியில், சீனாவிற்கு அடுத்தபடியாக, 6 சதவீத பங்களிப்புடன் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவின் மீன் உற்பத்தி ஒட்டு மொத்த அளவில் ஆண்டுக்கு 7 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது.வரும் 2015ம் ஆண்டில், இந்திய கடல் உணவுப் பொருட்கள் துறை வர்த்தகம் 67 ஆயிரத்து 800 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது தற்போது 53 ஆயிரம் கோடி ரூபாய் என்ற அளவில் உள்ளது என, அசோசெம் அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|