பதிவு செய்த நாள்
13 ஜன2012
00:31

புதுடில்லி:நாட்டின் உணவுப் பொருள் பணவீக்கம், டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 2.90 சதவீதம் என்ற அளவில் எதிர்மறை வளர்ச்சியைக் கண்டுள்ளது. இது, இதற்கு முந்தைய வாரத்தில், 3.36 சதவீதம் என்ற அளவில் எதிர்மறை வளர்ச்சியைக் கண்டிருந்தது. ஆக, உணவுப் பொருள் பணவீக்கம் தொடர்ந்து இரண்டு வாரங்களாக எதிர்மறை வளர்ச்சியைக் கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.கணக்கீட்டு வாரத்தில், வெங்காயத்தின் விலை, 74.77 சதவீதம் குறைந்து காணப்பட்டது.
இது தவிர, உருளைக்கிழங்கு (31.97 சதவீதம்), கோதுமை (3.35 சதவீதம்), காய்கறிகள் (49.03 சதவீதம்) ஆகியவற்றின் விலையும் குறைந்திருந்தது.அதேசமயம், புரதச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களின் விலை ஆண்டுக் கணக்கின் அடிப்படையில் உயர்ந்திருந்தது. குறிப்பாக, பருப்பு வகைகளின் விலை 14.72 சதவீதம் அதிகரித்திருந்தது. மேலும், பால் (10.79 சதவீதம்), மீன், முட்டை, இறைச்சி (15.22 சதவீதம்), பழங்கள் (9 சதவீதம்), உணவு தானியங்கள் (2.03 சதவீதம்) ஆகியவற்றின் விலை அதிகரித்து காணப்பட்டது.முக்கிய பொருட்களுக்கான பணவீக்கம் 0.51 சதவீதம் என்ற அளவில் உயர்ந்துள்ளது. இது, இதற்கு முந்தைய வாரத்தில் 0.10 சதவீதம் என்ற அளவில் குறைந்து காணப்பட்டது. மொத்த விலை குறியீட்டு எண் கணக்கீடு செய்வதில், முக்கிய பொருட்களின் பங்களிப்பு 20 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.உணவு சாராத பொருட்கள் பிரிவின் கீழ், நூலிழை மற்றும் எண்ணெய் வித்துக்கள் விலை 1.29 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது, இதற்கு முந்தைய வாரத்தில், 0.85 சதவீதம் என்ற அளவில் குறைந்து காணப்பட்டது.எரிபொருள் மற்றும் மின்சாரத்திற்கான பணவீக்கம், 14.45 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது, இதற்கு முந்தைய வாரத்தில், 14.60 சதவீதமாக உயர்ந்து காணப்பட்டது.இது குறித்து, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறுகையில், "உணவுப் பொருள் பணவீக்கம் தொடர்ந்து எதிர்மறை வளர்ச்சியை கண்டு வருகிறது. இது, வரும் வாரங்களிலும் தொடரும் நிலையில், நாட்டின் ஒட்டு மொத்த பணவீக்கமும் கட்டுக்குள் வரும்' என்று தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|