பதிவு செய்த நாள்
13 ஜன2012
00:33

புதுடில்லி:வெங்காயத்திற்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலை, (ஒரு டன்) 150 டாலராக (7,500 ரூபாய்) குறைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இதன் ஏற்றுமதி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.வெங்காய உற்பத்தி குறைந்து போனதையடுத்து, மத்திய அரசு, இதன் ஏற்றுமதியை கட்டுப்படுத்தும் வகையில், ஏற்றுமதிக்கான ஒரு டன் வெங்காயத்தின் குறைந்தபட்ச விலையை முதலில், 300 டாலராக உயர்த்தியது. பின்பு, இது, 250 டாலராக குறைக்கப்பட்டது.இந்நிலையில், தற்போது, உள்நாட்டில் வெங்காயம் உற்பத்தி மிகவும் அதிகரித்துள்ளது.
மேலும், உணவு பணவீக்கமும் மிகவும் குறைந்துள்ளது. எனவே, விவசாயிகள் மற்றும் ஏற்றுமதியாளர்களின் நலன் கருதி, இதன் ஏற்றுமதி விலையை மத்திய அரசு குறைத்துள்ளது.இதுகுறித்து வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:உள்நாட்டு விவசாயிகளும், வர்த்தகர்களும் ஏற்றுமதிக்கான வெங்காயத்தின் விலையை குறைக்கும்படி, மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்திய வெங்காய ஏற்றுமதியாளர்களால்,சர்வதேச போட்டியை எதிர்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது உள்நாட்டில் வெங்காய உற்பத்தியும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, வெங்காயத்தின் ஏற்றுமதி விலை குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.ஏற்றுமதிக்கான வெங்காயத்தின் விலை உயர்ந்திருந்ததால், நடப்பு 2011-12ம் நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில், இதன் ஏற்றுமதி, கடந்த நிதியாண்டின் இதே காலத்தை விட, 23 சதவீதம் குறைந்துள்ளது.
இந்தியாவில், ஏற்றுமதிக்கான ஒரு டன் வெங்காயத்தின் விலை, 250 டாலராக இருந்த நிலையில், போட்டி நாடுகளான சீனா, எகிப்து, ஆகிய நாடுகள் சர்வதேச சந்தையில், ஒரு டன் வெங்காயத்தை 200 டாலருக்கு விற்பனை செய்து வருகின்றன.
இது இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.தற்போது, ஏற்றுமதிக்கான ஒரு டன் வெங்காயத்தின் விலை, 150 டாலராக குறைக்கப்பட்டுள்ளது என்பது, 'பெங்களூர் ரோஸ்' மற்றும் 'கிருஷ்ணாபுரம்' ஆகிய இரண்டு வகைகள் தவிர, ஏனைய அனைத்து வகை வெங்காயத்திற்கும் பொருந்தும் என, வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|