பதிவு செய்த நாள்
15 ஜன2012
13:02

புதுடில்லி: பைலட்களின் கோரிக்கையை ஏற்று, நிலுவையில் உள்ள சம்பளம் மற்றும் உதவித் தொகையை வரும் மார்ச் மாதத்திற்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, ஏர் இந்தியா நிர்வாகம் தரப்பில் நேற்று நள்ளிரவு உறுதியளிக்கப்பட்டதையடுத்து, பைலட்கள் தங்கள் ஸ்டிரைக்கை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.
கடந்த சில மாதங்களாக தங்களுக்கு சம்பளம் வழங்கப்படாததை கண்டித்து, ஏர் இந்தியா நிறுவனத்தின் சீனியர் பைலட்கள், நேற்று திடீர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். 40க்கும் மேற்பட்ட பைலட்கள், உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறி விடுமுறை எடுத்ததால், விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. 20க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் பணிபுரியும் பைலட்களுக்கு, கடந்த சில மாதங்களாக சம்பளம், உதவித்தொகை வழங்கப்படவில்லை. விமான நிறுவனம், கடும் நிதி நெருக்கடியில் சிக்கி இருப்பதால், சம்பளம் தாமதமாக வழங்கப்படும் என, விமான நிறுவன நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
திடீர் ஸ்டிரைக் : அதிருப்தி அடைந்த மூத்த பைலட்களில் 40க்கும் மேற்பட்டோர், நேற்று திடீரென ஸ்டிரைக்கில் குதித்தனர். தங்களுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, ஒரே நேரத்தில் இவர்கள் விடுப்பில் சென்றதை அடுத்து, திட்டமிட்டபடி விமானங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. டில்லில் இருந்து சென்னை, ஆதமதாபாத், பெங்களூரு, நாக்பூர் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லவிருந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ஒட்டு மொத்தமாக 20க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், அதில் பயணம் செய்யவிருந்த பயணிகள், அவதிக்குள்ளாயினர்.
விரைவில் சுமுக நிலை : இந்த விவகாரம் குறித்து, மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் அஜித் சிங் கூறியதாவது: ஸ்டிரைக் குறித்து, யாரும் முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவில்லை. சிலர், உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, விடுப்பில் சென்றுள்ளனர். இந்த விவகாரத்தால், டில்லியில் மட்டுமே, விமான போக்குவரத்தில் சிறிது பாதிப்பு ஏற்பட்டது. மற்ற இடங்களில் விமானங்கள் வழக்கம் போல் இயங்கின.
சில மாதங்களாக தொடர்ந்து சம்பளம் வழங்கப்படாமல் இருந்தால், எந்த ஒரு ஊழியருக்குமே அதிருப்தி ஏற்படும். அவர்களின் பிரச்னைகள் தீர்க்கப்படும். ஆனால், ஏர் இந்தியா நிறுவனம், மிகப் பெரிய நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது என்பதை பைலட்கள் உணர வேண்டும்.
நிதி அமைச்சருடன் சந்திப்பு : மத்திய நிதி அமைச்சரை அடுத்த வாரம் சந்தித்து, பிரச்னை குறித்து விளக்குவேன். இதன் முடிவில், பைலட்களுக்கான சம்பளம் மற்றும் உதவித் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். நிலுவைத் தொகை முழுவதையும் வழங்க முடியாவிட்டாலும், அதில் பெரும்பகுதி வழங்கப்படும்.
இவ்வாறு அஜித் சிங் கூறினார்.
அவசர ஆலோசனை : இதற்கிடையே, டில்லி, மும்பை, கோல்கட்டா, சென்னை ஆகிய இடங்களில் சீனியர் பைலட்கள், நேற்று அவசர ஆலோசனை நடத்தினர். போராட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து, இதில் அவர்கள் ஆலோசித்ததாக தகவல் வெளியானது.
"போராட்டம் வேண்டாம்' : இந்திய வர்த்தக விமான பைலட்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பைலட்கள், உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும். போராட்டத்தால் பயணிகள் பாதிக்கப்படக் கூடாது. அதேநேரத்தில், நிலுவையில் உள்ள சம்பளத் தொகையை உடனடியாக வழங்க, ஏர் இந்தியா நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|