பதிவு செய்த நாள்
15 ஜன2012
16:34

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் கடந்தாண்டை விட மஞ்சள் இரட்டிப்பாக பயிர் செய்த நிலையில், விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
பொங்கல் பண்டிகை உள்ளூர் விற்பனையை குறி வைத்த விவசாயிகளுக்கு ஏமாற்றம் மிஞ்சியது.விவசாயத்தை பிரதானமாக கொண்ட தர்மபுரி மாவட்டத்தில் நெல், கரும்பு, வாழை, மஞ்சள் உள்ளிட்ட பயிர்கள் பிரதானமாக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் பருவ மழை, சந்தையில் விளை பொருட்களுக்கு உள்ள விலை நிலவரங்கள் அடிப்படையில் விவசாயிகள் பயிர் சாகுபடி செய்து வருகின்றனர்.கடந்தாண்டில் மஞ்சளுக்கு நல்ல விலை கிடைத்ததோடு, பொங்கல் பண்டிகையின் போது, மஞ்சள் கொத்துக்கு நல்ல வரவேற்பு இருந்தது. மேலும் கடந்தாண்டு விரளி மஞ்சள் குவிண்டாலுக்கு குறைந்தபட்ச விலை, 15 ஆயிரத்து 268 ரூபாயும், கிழங்கு மஞ்சள், 15 ஆயிரத்து 631 ரூபாய்க்கும் விற்பனையானது.கடந்தாண்டில் மஞ்சளுக்கு நல்ல வரவேற்பும், விலையும் ஏற்றத்தில் இருந்ததால், இந்தாண்டு தர்மபுரி மாவட்டத்தில் வழக்கத்தை விட விவசாயிகள், 10 ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் மஞ்சள் பயிர் செய்தனர். தற்போது அறுவடை பருவத்தில் வயல்களில் மஞ்சள் பயிர் உள்ளது.
ஆண்டுதோறும் டிசம்பர் இறுதி வாரத்தில் மஞ்சள் அறுவடை செய்யப்பட்டு ஈரோடு சந்தைக்கு விற்பனைக்கு செல்லும். இந்தாண்டும் விலை உயர்வை எதிர்பார்த்து காத்திருந்த விவசாயிகளுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஈரோடு சந்தையில் கடந்த வார நிலவரப்படி விரளி மஞ்சள் குவிண்டால் அதிகபட்சம், 4,671, குறைந்த பட்சம் 3,900 ரூபாய்க்கும், கிழங்கு அதிகபட்சம், 4,479, குறைந்த பட்சம் 3,670 ரூபாய்க்கும் விற்பனை விலை இருந்தது.கடந்தாண்டை விட இந்தாண்டு, 60 முதல், 80 சதவீதம் வரை விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால், விவசாயிகள் பெரும் கலக்கம் அடைந்துள்ளனர்.
விலை ஏற்றத்தை குறி வைத்து பல விவசாயிகள் தங்கள் நிலங்களில் இருந்து மஞ்சள் அறுவடை செய்யாமல் வைத்துள்ளனர்.பொங்கல் பண்டிகை மஞ்சள் கொத்து, உள்ளூர் விற்பனையை எதிர்பார்த்த போதும், டிசம்பரில் அறுவடை செய்யும்படி சாகுபடி செய்ய மஞ்சள் வயல்களில் இலைகள் சருகாகி காய்ந்த நிலையில் இருப்பதால், உள்ளூர் சந்தை விற்பனையிலும் விவசாயிகள் பெரும் ஏமாற்றத்தை சந்தித்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் சிறு விவசாயிகள் இடைத்தரகர்கள் மூலம் ஈரோடு சந்தையில் மஞ்சள் விற்பனைக்கு எடுத்து செல்வர். இடைத்தரகர்களுக்கு, 10 முதல், 15 சதவீதம் கமிஷன் கொடுக்க வேண்டும் என்பதால், சிறு விவசாயிகள் மஞ்சள் அறுவடை செய்ய முடியாமல் திணறி வருகின்றனர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|