பதிவு செய்த நாள்
21 ஜன2012
00:26

புதுடில்லி,நடப்பு 2012ம் காலண்டர் ஆண்டில், நிறுவனங்களிடையிலான இணைத்தல் மற்றும் கையகப்படுத்துதல் நடவடிக்கை சூடு பிடிக்கும் என, ஆசியா பசிபிக் ஆலோசனை நிறுவனம் கருத்து தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதார சுணக்க நிலை, உள்நாட்டில் பணவீக்கம் உயர்வு, வட்டி செலவினம் அதிகரிப்பு போன்றவற்றால் கடந்த 2011ம் ஆண்டில் இணைத்தல் மற்றும் கையகப்படுத்துதல் நடவடிக்கைகள் வெகுவாக குறைந்து போனது.
47 சதவீதம் உயர்வு
கடந்த ஆண்டில், 244 இணைத்தல் மற்றும் கையகப்படுத்துதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் மதிப்பு, 2,920 கோடி டாலராகும். இது, கடந்த 2010ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டதை விட, எண்ணிக்கையின் அடிப்படையில் 17 சதவீதமும், மதிப்பின் அடிப்படையில் 47.7 சதவீதமும் குறைவாகும்.அதே சமயம், சென்ற 2011ம் ஆண்டில், நிறுவனங்களின் இணைத்தல், கையகப்படுத்துதல் மற்றும் தனியார் பங்கு முதலீட்டு நடவடிக்கைகள், 2010ம் ஆண்டை விட, எண்ணிக்கையில் அதிகரித்துள்ளன.
ஆனால், அவை மதிப்பின் அடிப்படையில் குறைந்துள்ளன.சென்ற ஆண்டு, இணைத்தல்,கையகப்படுத்துதல் மற்றும் தனியார் பங்கு முதலீடு தொடர்பாக, நிறுவனங்களிடையே 5,400 கோடி டாலர் மதிப்பிற்கு 1,026 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இது, 2010ம் ஆண்டில், 6,200 கோடி டாலர் மதிப்பிலான, 971 ஒப்பந்தங்கள் என்ற அளவில் இருந்தது.
இந்திய நிறுவனங்கள், அவற்றின் சர்வதேச விரிவாக்கத்திற்காக, அயல்நாட்டு நிறுவனங்களை கையகப்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றன.
உதாரணமாக, முந்த்ரா துறைமுகம், அபாட் பாயிண்ட் துறைமுகத்தையும், ஜி.வி.கே பவர் நிறுவனம், ஹான்காக் நிலக்கரி சுரங்க நிறுவனத்தையும், ஜென்பேக்ட், ஹெட்ஸ்ட்ராங் நிறுவனத்தையும் கையகப்படுத்தியுள்ளதை குறிப்பிடலாம்.
முதன் முறையாக, இந்திய நிறுவனமொன்று, சீன பொதுத்துறை நிறுவனமொன்றில், 15 கோடி டாலர் முதலீடு செய்து, குறிப்பிடத்தக்க அளவிற்கு பங்குகளை வாங்கியுள்ளது.
எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் 1,600 கோடி டாலர் அளவிற்கும், உள்நாட்டில் தொலை தொடர்பு துறையில் 500 கோடி டாலருக்கும், இணைத்தல் மற்றும் கையகப்படுத்துதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வேதாந்தா குழுமம் கெய்ர்ன் இந்தியாவில் 800 கோடி டாலரும், பீ.பி. நிறுவனம், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் 700 கோடி டாலர் முதலீடு மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கவை.
தனியார் பங்கு முதலீடு
கடந்த 2009ம் ஆண்டும், 2010ம் ஆண்டின் முதல் ஆறு மாத காலத்திலும் மந்தகதியில் இருந்த தனியார் பங்கு முதலீட்டு நடவடிக்கைகள், அதன் பின்னர் சுறுசுறுப்பு பெற்றன. குறிப்பாக, சென்ற ஆண்டு, ரியல் எஸ்டேட் துறையில் 200 கோடி டாலர் அளவிற்கு தனியார் பங்கு முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2010ம் ஆண்டு, வர்த்தகம் மற்றும் குடியிருப்பு சார்ந்த கட்டுமான பணிகளில் அதிக அளவில் தனியார் பங்கு முதலீட்டு ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டுள்ளன.
ஆனால், 2011ம் ஆண்டில், விமான நிலையங்கள், சாலைகள், நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட துறைகளில் அதிக அளவில் தனியார் பங்கு முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சென்ற ஆண்டு, மின்னணு வர்த்தக நிறுவனங்கள், 30 கோடி டாலர் அளவிற்கு தனியார் பங்கு முதலீடுகளை ஈர்த்துள்ளன.
சென்ற ஆண்டு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த சேவைகள் துறையில், இணைத்தல், கையகப்படுத்துதல் மற்றும் தனியார் பங்கு முதலீடுகள் தொடர்பாக 131 கோடி டாலர் மதிப்பிலான 61 ஒப்பந்தங்கள் கையொப்பமாகியுள்ளன.
மின்சாரம் மற்றும் மின்னணு துறையில் 9.4 கோடி டாலர் மதிப்பிலான 10 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பணவீக்கம்
இந்நிலையில், தற்போது, உள்நாட்டில் பணவீக்கம் குறைந்து வருவதால், வட்டி செலவினம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, நடப்பு ஆண்டில், இணைத்தல் மற்றும் கையகப்படுத்துதல் நடவடிக்கைகள் அதிகரிக்கும் என, ஆசியா பசிபிக் நிறுவனத்தின் உயரதிகாரி (இணைத்தல் நடவடிக்கைகள்) அஞ்சலி நாயக் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|