பதிவு செய்த நாள்
01 பிப்2012
14:29

ஓசூர்:வரும் பிப்., 14 காதலர் தினத்தையொட்டி, ஓசூரில் இருந்து ஒரு கோடி ரோஜா மலர்கள் ஏற்றுமதி செய்ய, மலர் விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், தளி, தேன்கனிக்கோட்டை, பேரிகை, பாகலூர், பைரமங்கலம், கெலமங்கலம் பகுதியில், விவசாயிகள் ஆண்டு முழுவதும் ரோஜா மலர் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.இங்கு உற்பத்தியாகும் ரோஜா மலர்கள், மலேசியா, சிங்கப்பூர், கனடா, ஜப்பான், துபாய், ஹாலந்து, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட, பல்வேறு வெளிநாடுகளுக்கும், தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும் ஏற்றுமதியாகின்றன.
ஓசூர், தேன்கனிக்கோட்டை தாலுகாவில் மட்டும், 300க்கும் மேற்பட்ட ஏற்றுமதி ரக மலர் உற்பத்தி பண்ணைகள் உள்ளன. ஓசூர் அடுத்த அமுதகொண்டப்பள்ளியில், அரசு சார்பு நிறுவனமான, 'டான்ப்ளோரா' மலர் ஏற்றுமதி மையம் செயல்படுகிறது. பசுமைக்குடிலில் (கிரீன் ஹவுஸ்) வளர்க்கப்படும் ரோஜா செடிகளில், 45 நாட்களுக்கு ஒரு முறை அறுவடை செய்யப்படும். நடப்பாண்டு காதலர் தின ஏற்றுமதியை குறிவைத்து, ஓசூர் பகுதியில், 5,000 ஏக்கரில், தாஜ்மஹால், கார்வெட்டா, ரெட் ரோஸ், ஹரிசம், ஜெயன்ட், ரெட் பர்ஸ்ட், ரெட், ஒயிட், எல்லோ உள்ளிட்ட, 45 வகை ரோஜா மலர்களை, விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.
குந்துமாரனப்பள்ளியைச் சேர்ந்த விவசாயி நாகேந்திரன் கூறியதாவது:நடப்பாண்டு சிறு, குறு விவசாயிகள், 2 லட்சம் ரோஜா மலர்களும், பெரிய மலர் பண்ணை விவசாயிகள், 10 லட்சம் முதல், 25 லட்சம் மலர்கள் வரையும் மொத்தம், ஒரு கோடி மலர்கள் ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளனர். நடப்பாண்டு கடும் குளிர், மூடுபனியால் சூரிய வெளிச்சம் செடிகளுக்கு போதுமான வகையில் கிடைக்கவில்லை. அதனால், 45 நாளில் பூக்க வேண்டிய பூக்கள், 55 நாள் தாமதமாக பூத்தது. இதனால், உற்பத்தி குறைந்து பூக்கள் விலை உயர்ந்துள்ளது. சாதாரணமாக காதலர் தினம், கிறிஸ்துமஸ் விழாக்களையொட்டி மட்டும், 20 பூக்கள் கொண்ட பஞ்ச், 150 ரூபாய் முதல், 300 ரூபாய் வரை விற்பனையாகும்.
இவ்வாறு நாகேந்திரன் தெரிவித்தார்.
காதலர் தின ஏற்றுமதியில்ஆண்டுதோறும் கடும் வீழ்ச்சி:காதலர் தினத்தையொட்டி, டான்ப்ளோரா மூலம், ஆண்டுக்கு, 7 கோடி மலர்கள், உலகம் முழுவதும் ஏற்றுமதியாகும். கடந்த சில ஆண்டாக, அங்கு நிலவும் நிர்வாக குளறுபடியால் சாகுபடி குறைந்து, கடந்த ஆண்டு வெறும், ஏழு லட்சம் மலர்கள் மட்டுமே ஏற்றுமதியானது. இதே நிலை நீடித்தால், ஓசூர் பகுதியில் ரோஜா சாகுபடி அழியும் அபாயம் உள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|