பதிவு செய்த நாள்
07 பிப்2012
00:30

சேலம் : தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின் தடையால், நூற்பாலைகளின் இயக்கம் பாதிக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரம் பருத்தி நூலிழைகளின் தயாரிப்பில் ஈடுபட்டு வந்த ஆலைகள், தற்போது, பத்து மணி நேர மின் தடையை சந்தித்து வருகின்றன. இதனால், எட்டு மணி நேரம் (ஒரு "ஷிப்ட்') மட்டுமே இயங்குகின்றன.
இதன் காரணமாக, பருத்தி நூலிழை உற்பத்தி குறைந்து, அதன் விலை அதிகரித்துள்ளது. கடந்த 15 நாளில் பருத்தி நூலிழை விலை, 10 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால், ஜவுளி உற்பத்தியாளர்களின், உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளது. இத்துடன், தொழிலாளர்களின் ஊதியமும் உயர்ந்து உள்ளது. மின்பற்றாக்குறை, கூலி உயர்வு உள்ளிட்ட காரணங்களால், வேஷ்டி, சட்டை, துண்டு, லுங்கி என சகலவித ஆடைகளுக்கு ஏற்ற, பருத்தி நூலிழை ரகங்களின் விலை, கடந்த 15 நாட்களில், 10 சதவீதம் உயர்ந்துள்ளது.
இவ்வகை ஆடைகளை நெய்வதற்கு பயன்படும் 2க்கு 100 நூலிழை (4.5 கிலோ எடை கொண்ட பண்டல்), 2,000 ரூபாயில் இருந்து 2,150ஆக உயர்ந்துள்ளது. 2க்கு 80 நூலிழை பண்டல், 1,450 ரூபாயில் இருந்து 1,550 ஆக அதிகரித்துள்ளது. 2க்கு 60 நூலிழை பண்டல், 1,000த்தில் இருந்து, 1,150 ரூபாயாகவும், 2க்கு 40 நூலிழை பண்டல், 800 ரூபாயில் இருந்து, 900 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.
சேலம் மாவட்ட ஜவுளி ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் வேணுகோபால் கூறியதாவது: தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின் தடை காரணமாக, ஜவுளி தொழில், முடங்கும் அபாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. தினமும் பத்து மணி நேர மின் தடையால், நூற்பாலைகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பருத்தி நூலிழை விலை அதிகரித்துள்ள நிலையில், அதற்கேற்ப ஜவுளி விலையை உயர்த்த முடியாமல், வியாபாரிகள் உள்ளனர். புதிய "ஆர்டர்' எடுத்து ஜவுளி விற்பனை செய்ய முடியாத நிலையில், தொழில் முடங்கிப் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில், 2 ஆயிரத்துக்கும் அதிகமான நிறுவனங்கள் ஜவுளி உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன. இதில் 500க்கும் மேற்பட்டோர் ஜவுளி ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ளனர். ஜவுளி உற்பத்தி, விற்பனை, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில், ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் ஈடுபட்டுள்ளனர். பருத்தி நூலிழை விலை ஏற்றத்தை தடுத்து, தடையில்லா மின்சாரம் வழங்குவதன் மூலம் ஜவுளி தொழிலை காப்பாற்ற முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் ஜவுளி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|