பதிவு செய்த நாள்
07 பிப்2012
00:32

புதுடில்லி : தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம், நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் பிப்ரவரி 3ம் தேதி வரையிலான காலத்தில், சாதனை அளவாக, 2.36 கோடி டன் சரக்குகளை கையாண்டுள்ளது. இது, சென்ற 2010-11ம் நிதியாண்டின் இதே காலத்தில் கையாளப்பட்ட சரக்குகளை விட, 13.87 சதவீதம் (2.02கோடி டன்) அதிகமாகும்.
நடப்பு நிதியாண்டின், பிப்ரவரி 4ம் தேதி வரையிலான காலத்தில் இந்த துறைமுகம், 4 லட்சத்து 723 சரக்கு பெட்டகங்களை கையாண்டுள்ளது. மதிப்பீட்டு காலத்தில், இத்துறைமுகம் அதிக அளவில் இறக்குமதியை மேற்கொண்டுள்ளது.
குறிப்பாக, உரங்கள், உர மூலப்பொருள்கள், தமிழ்நாடு மின் வாரியத்திற்கான நிலக்கரி , முந்திரிக் கொட்டைகள், இயந்திரங்கள், சுண்ணாம்புக் கல், இரும்பு மற்றும் உருக்குப் பொருட்கள், ஜிப்சம், திரவ அமோனியா மற்றும் நாப்தா, சமையல் எரிவாயு, டீசல், பாமாயில் உள்ளிட்டவை அதிக அளவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
இதே காலத்தில் மக்காச்சோளம், அரிசி, கிரானைட் கற்கள், சர்க்கரை, கட்டுமான பொருட்கள், இயந்திரங்கள் மற்றும் ஏராளமான இலகு ரகப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. கப்பல் போக்குவரத்து அமைச்சகம், நடப்பு நிதியாண்டில், வ.உ.சி. துறைமுகம், 2.6 கோடி டன் சரக்குகளை கையாள இலக்கு நிர்ணயித்துள்ளது. இத்துறைமுகம், இந்த இலக்கைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் முக்கிய துறைமுகங்களில், 10ம் இடத்தில் உள்ள வ.உ.சி துறைமுகம், அதிக அளவில் சரக்குகளை கையாண்டு வருகிறது. இதனையடுத்து, இத்துறைமுகத்தின் எட்டாவது கப்பல் தளத்தை, சரக்கு பெட்டக முனையமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம், இத்துறைமுகத்தின் இரண்டாவது சரக்கு பெட்டக முனையமாக இது உருவெடுக்கும். 335 கோடி ரூபாய் திட்டச் செலவில் மேற்கொள்ளப்பட உள்ள இப்பணிகள், விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|