பதிவு செய்த நாள்
07 பிப்2012
00:33

சேலம் : கடந்த ஆண்டு, டிசம்பர் மாதம் தமிழகத்தை தாக்கிய "தானே' புயலால், உயர் ரக நெல், அரிசி உற்பத்தி குறைந்து, அவற்றின் விலை உயர்ந்துள்ளது.
விளைச்சல் பாதிப்பு : தமிழகத்தில் தற்போது நெல் அறுவடை தீவிரமாக நடந்து வருகிறது. "தானே' புயலால் தஞ்சாவூர், நாகப்பட்டினம் மட்டுமின்றி செஞ்சி, செங்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் உயர்ரக நெல் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே விளைவிக்கப்படும், வெள்ளைப் பொன்னி, பாபத்லால் பொன்னி, கர்நாடகா டீலக்ஸ் பொன்னி ஆகிய நெல் ரகங்களில் எதிர்பார்த்த விளைச்சல் இல்லை.
மேலும், செஞ்சி, ஆரணி, கள்ளக்குறிச்சி, செங்கம், குடியாத்தம், திருவாரூர், செங்கல்பட்டு, சேத்துப்பட்டு, வந்தவாசி ஆகிய இடங்களில் அதிசய பொன்னி, வெள்ளைப் பொன்னி, பாபத்லால் பொன்னி ஆகிய நெல் ரகங்களின் விளைச்சல், எதிர்பார்த்த அளவை விட குறைவாக உள்ளது. கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில், இருந்து தமிழகத்துக்கு கொண்டு வரப்படும் நெல், பாதியாக குறைந்து விட்டது. இதனால், உயர்ரக வெள்ளைப் பொன்னி, கர்நாடகா டீலக்ஸ் பொன்னி, பி.பி.டி., (பாபத்லால்) பொன்னி ஆகிய நெல் ரகங்களின் விலை உயர்ந்துள்ளது.
அறுவடை : கடந்த ஆண்டு, 1,050 ரூபாய்க்கு விற்ற 75 கிலோ மூட்டை வெள்ளைப் பொன்னி முதல் ரக நெல், தற்போது, 1,250 - 1,350 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதே அளவிலான, கர்நாடகா டீலக்ஸ் பொன்னி நெல், 1,300 ரூபாயில் இருந்து 1,550 ரூபாயாக அதிகரித்துள்ளது. பி.பி.டி., (பாபத்லால் பொன்னி) 900 ரூபாயில் இருந்து 1,100 ரூபாயாக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் தற்போது, 2ம் போக நெல் அறுவடை, 90 சதவீதம் நிறைவடைந்து விட்ட நிலையில், உயர்ரக நெல்லுக்கான தட்டுப்பாடு தொடர்கிறது. இந்த தட்டுப்பாடு முற்றிலும் நீங்க, குறைந்தது ஐந்து மாதம் ஆகும் என தெரிகிறது. நெல்லுக்கு ஏற்பட்டு வரும் தட்டுப்பாட்டால், அரிசி விலையில் உயர்வு ஏற்பட்டுள்ளது.
வரத்து குறைவு : தற்போது நெல் வரத்து குறைந்துள்ளதால், பழைய, புதிய அரிசி வகைகள் கிலோவுக்கு, ஒரு ரூபாய் முதல், இரண்டு ரூபாய் வரை உயர்ந்துள்ளன. உயர்தர வெள்ளைப் பொன்னி முதல் ரகம் (பழையது) கிலோ 42 ரூபாய், இரண்டாம் ரகம், 41 ரூபாய், புதிய அரிசி 35 ரூபாய், உயர்தர கர்நாடகா டீலக்ஸ் பொன்னி கிலோ 34 ரூபாய் என விற்கப்படுகிறது. உயர்ரக அரிசி விலை, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. நெல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அரிசி விலை மேலும் உயரும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
தட்டுப்பாடு : சேலம் அரிசி மொத்த வியாபாரி சின்ராஜ் கூறுகையில், ""தமிழகத்தில் பொன்னி ரக நெல்லுக்கு, கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், நடப்பு வாரத்தில் குவிண்டாலுக்கு ரகம் வாரியாக, 100 ரூபாய் முதல் அதிகபட்சம், 350 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. இதனால், பழைய ரக அரிசி மட்டுமின்றி, புதிய ரக அரிசி விலையிலும் கிலோவுக்கு ஒரு ரூபாய் வரை உயர்ந்துள்ளது,'' என்றார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|