பதிவு செய்த நாள்
07 பிப்2012
10:20

சேலம்: தைப்பூசம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு, சேலம் வ.உ.சி., பூ மார்க்கெட்டில் அனைத்து பூக்கள் விலையும் உச்சத்தில் இருந்தது. சேலம் மாவட்டத்தில் பூலாவரி, வீரபாண்டி, நெய்க்காரப்பட்டி, மகுடஞ்சாவடி, அரியானூர், பனமரத்துப்பட்டி, வீராணம், செட்டிசாவடி, தர்மபுரி மாவட்டம் தொப்பூர், பொம்மிடி, கடத்தூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் சாமந்தி பூக்கள் விளைச்சல் அதிகரித்துள்ளது. சேலம் பூ மார்க்கெட்டில் பொங்கலுக்கு முன்பு வரை சாமந்தி உட்பட பல்வேறு பூக்களின் விலை குறைவாகவே இருந்தது. பொங்கலுக்கு பின், பூக்களின் விலையில் ஏற்றம் காணப்பட்டது. தொடர்ந்து முகூர்த்த நாட்கள் வந்ததால், பூக்களின் விலை ஏறுமுகமாகவே இருக்கிறது.
சேலம் பூ மார்க்கெட் என்.எஸ்.கே., பூ கமிஷன் மண்டியை சேர்ந்த சந்தான கிருஷ்ணன் கூறியதாவது: சேலம் மாவட்டத்தை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் இருந்து மார்க்கெட்டுக்கு தினமும் பூக்கள் வரத்தாகின்றன. கடந்த டிசம்பர் மாதம் சாமந்தி பூக்கள் வரத்து அபரிமிதமாக இருந்தது. இதனால், ஒரு கிலோ, 10 ரூபாய்க்கு விற்பனையானது. தினமும் சேலம் மார்க்கெட்டுக்கு, 20 டன் சாமந்தி பூக்கள் வரத்தாகின்றன. இங்கிருந்து சென்னை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ஆத்தூர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கும், புதுச்சேரி மாநிலத்துக்கும் சாமந்தி பூக்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. பொங்கல் முதல் பூக்களின் விலையில் உயர்வு ஏற்பட்டது. பொங்கலன்று ஒரு கிலோ வெள்ளை சாமந்தி பூ, 160 ரூபாய்க்கு விற்பனையானது. தற்போது, ஒரு கிலோ சாமந்தி பூ விலை, 100 ரூபாயாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
பூ வியாபாரிகள் கூறியதாவது: தைப்பொங்கலை முன்னிட்டு முகூர்த்த தினம் தொடர்ந்து வந்ததால், அனைத்து பூக்களுக்கும் நல்ல விலை கிடைத்து வருகிறது. நாளை (இன்று) தைப்பூசம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு பூக்கள் வாங்க பூ மார்க்கெட்டில் காலையில் இருந்தே வியாபாரிகளும், பொதுமக்களும் குவிந்துள்ளனர். ஒரு கிலோ சம்பங்கி பூ, 80 ரூபாய், பொம்மிடியில் இருந்து வந்துள்ள பட்டன் ரோஸ், 200 ரூபாய், பல வண்ணங்களில் வந்துள்ள ஒசூர் ரோஜா பூக்கள், 120 ரூபாய், குண்டுமல்லி, 250 ரூபாய், ஜாதிமல்லி, 240 ரூபாய், கனகாம்பரம் 350 ரூபாய், அரளி 160 ரூபாய்க்கு விற்பனையானது. பூ மாலைகளின் விற்பனையும் அதிகம் காணப்படுகிறது. 60 முதல் 200 ரூபாய் வரை மாலைகள் விற்பனை செய்யப்படுகின்றன. பொங்கலுக்கு பின், பூக்களுக்கு தொடர்ந்து விலை கிடைத்து வருவது விவசாயிகள் மட்டுமின்றி, வியாபாரிகளுக்கும் மகிழ்ச்சியாக உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|