பதிவு செய்த நாள்
08 பிப்2012
02:06

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இந்தாண்டு புளி விளைச்சல் நன்கு இருப்பதால், கடந்தாண்டை காட்டிலும், இந்தாண்டு புளி விலை குறைந்துள்ளது.வெப்பமண்டல பகுதியான கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உரிகம், பேரிகை, தீர்த்தம், வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி, மத்தூர், காவேரிப்பட்டணம், பர்கூர்,ராயக்கோட்டை, ஊத்தங்கரை ஆகிய சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக அளவில் புளி உற்பத்தியாகிறது.
இங்கிருந்து தமிழகத்தின் வெளி மாவட்டங்கள் மட்டுமன்றி, இந்தியாவில் உள்ள பல மாநிலங்களுக்கும் புளி அனுப்பி வைக்கப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் ஆண்டுக்கு சராசரியாக, 10 ஆயிரம் டன்னுக்கு மேல் புளி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவில், ராஞ்சியை அடுத்தது, இரண்டாவது மிகப் பெரிய புளி சந்தையாக, கிருஷ்ணகிரி பழையபேட்டை திகழ்கிறது. பொதுவாக தென் மாநிலங்களில், ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையிலும், வட மாநிலங்களில், மார்ச் முதல் ஏப்ரல் வரையிலும் புளி சீசன் இருக்கும்.
இக்காலத்தில், கிருஷ்ணகிரி பழையபேட்டையில் வாரந்தோறும் வியாழன் மற்றும் ஞாயிறு கிழமைகளில் புளி சந்தை கூடும். இந்த சந்தைக்கு, உள்ளுரில் இருந்தும், கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் புளியை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.கிருஷ்ணகிரி பழையபேட்டை புளி சந்தையின் விலையை வைத்துதான் இந்தியாவின் பெரிய புளி சந்தையான ராஞ்சி மற்றும் ஜபல்பூர் புளி சந்தைகளில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
கடந்தாண்டு வட மாநிலங்களில் புளி விளைச்சல் குறைந்த நிலையில் கிருஷ்ணகிரி சந்தையில் ஒரு கிலோ புளி, 30 ரூபாயில் இருந்து, 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. நடப்பாண்டு புளி விளைச்சல் சிறப்பாக உள்ளதால், ஒரு கிலோ 18 ரூபாயில் இருந்து, 25 ரூபாய் வரை விற்பனையாகிறது.
சந்தூரை சேர்ந்த புளி குத்தகை வியாபாரி மாதையன் கூறியதாவது:கடந்தாண்டு அறுவடை நேரத்தில் மழை பெய்ததால், 25 சதவீத புளி சேதமடைந்தது. இதனால், ஒரு கிலோ புளி, 40 ரூபாய் வரை விற்பனையானது.நடப்பாண்டு புளி விளைச்சல் அதிகம் உள்ளதால் கிருஷ்ணகிரி புளி சந்தையில் அதன் விலை குறைந்துள்ளது. கடந்தாண்டு, 50 ஆயிரம் ரூபாய் கொடுத்து ஏலம் எடுத்த மரங்கள், இந்தாண்டு ஒரு லட்ச ரூபாய் கொடுத்து ஏலம் எடுத்துள்ளோம். புளி விளைச்சலாக இருந்தாலும், கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு புளி விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|