பதிவு செய்த நாள்
10 பிப்2012
00:12

புதுடில்லி: விதிமுறைகளை மீறி, பொதுமக்களிடம் முதலீடுகளை வசூலித்து வரும், 500க்கும் அதிகமான நிதி நிறுவனங்கள் குறித்த விவரங்களை, மத்திய கம்பெனிகள் விவகார அமைச்சகத்திடம் வழங்க,"செபி' முடிவு செய்துள்ளது.
"சி.ஐ.எஸ்-கலெக்டிவ் இன்வெஸ்ட்மென்ட் ஸ்கீம்' என்ற திட்டம், குறிப்பிட்ட நிதியினங்களில் முதலீடு செய்து, அதில் கிடைக்கும் லாபத்தை முதலீட்டாளர்களுக்கு வழங்க வகை செய்கிறது. பரஸ்பர நிதி திட்டம் போன்ற இத்திட்டத்தை செயல்படுத்த, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான 'செபி'யிடம் அனுமதி பெற வேண்டும்.
ஆனால், நாட்டில் இது போல், 500க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இருந்தும், ஒரே ஒரு நிறுவனம் மட்டுமே 'செபி' யிடம் முறையாக பதிவு செய்து கொண்டு செயல்பட்டு வருகிறது.
பதிவு செய்யாமல் இயங்கி வரும் ஏராளமான நிறுவனங்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதாக முதலீட்டாளர்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, பெரும்பாலான நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவற்றின் செயல்பாடுகள் முடக்கப்பட்டன.
எனினும், இத்தகைய நிறுவனங்கள், வேறு பெயரில் மீண்டும் அதே தொழிலைத் தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. நடவடிக்கைக்கு ஆளான நிறுவனங்களை சேர்ந்த சில இயக்குனர்களும், தற்போது புதிய நிறுவனங்களின் பின்னணியில் உள்ளது தெரியவந்துள்ளது.
இத்தகையவர்களின் முகமூடியை கிழித்து, அவர்களை அடையாளம் காட்டும் நோக்கத்தில் 'செபி' அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, விதிமுறைகளை மீறி, "சி.ஐ.எஸ்' திட்டங்களை நடத்திய நிறுவனங்கள், அவற்றின் இயக்குனர்கள் குறித்த விவரங்களை மத்திய கம்பெனிகள் விவகாரத் துறை அமைச்சகத்திடம் 'செபி' வழங்க உள்ளது.
மேலும், நாட்டில் உள்ள அனைத்து கம்பெனி பதிவாளர் அலுவலகங்களுக்கும் இந்த விவரங்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ள உள்ளது. இதன் மூலம், புதிய நிறுவனப் பெயரில் மறைந்துள்ள மோசடி இயக்குனர்களை எளிதாக கண்டறிந்து, அவர்கள் தொழில் செய்வதை தடுக்க முடியும்.மேலும், 'சி.ஐ.எஸ்' திட்டத்தின் விதிமுறைகளில் உள்ள குறைபாடுகளை களைந்து, கடுமையான விதிகளை சேர்ப்பதன் மூலம் அப்பாவி முதலீட்டாளர்களை காக்கவும் "செபி' திட்டமிட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|