பதிவு செய்த நாள்
13 பிப்2012
04:50

மும்பை : முன்பேர வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும், முன்னணி நிறுவனமான, மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் (எம்.சி.எக்ஸ்.) நிறுவனம், அதன் விரிவாக்க நடவடிக்கைகளுக்கு தேவையான பகுதி நிதியை திரட்டி கொள்வதற்காக, பொது மக்களுக்கு பங்குகளை வெளியிட்டு மூலதனச் சந்தையில் களமிறங்க திட்டமிட்டுள்ளது.
இந்நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, இம்மாதம், 22ம் தேதி துவங்கி, 24ம் தேதியுடன் நிறைவடையும் என்றும், இதன் வாயிலாக, 625 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
கடந்த ஓராண்டில், பங்கு வர்த்தகம் நன்கு இல்லாததால், பல நிறுவனங்கள் மூலதனச் சந்தையில் களமிறங்காமல் இருந்தன. இந்நிலையில், நடப்பாண்டு ஜனவரி மாதம் முதல் பங்கு வியாபாரம் நன்கு உள்ளதால், நிறுவனங்கள் பங்கு வெளியீட்டை மேற்கொள்ள ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளன.
எம்.சி.எக்ஸ். நிறுவனம், 60 லட்சம் பங்குகளை வெளியிட்டு, நிதி திரட்டிக் கொள்ள முடிவு செய்துள்ளது. இந்நிறுவனத்தில், பைனான்சியல் டெக்னாலஜீஸ் (இந்தியா) நிறுவனம், பெரும்பான்மையான பங்கு மூலதனத்தைக் கொண்டுள்ளது. இதுதவிர, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் பரோடா ஆகிய வங்கிகளும், பங்கு மூலதனத்தை கொண்டுள்ளன. மேற்கண்ட மூன்று நிறுவனங்களும் குறிப்பிடத்தக்க அளவிற்கு, பங்குகளை விற்பனை செய்ய உள்ளன.
கடந்த 2011ம் ஆண்டில், பங்கு வர்த்தகம் நன்கு இல்லாததால், அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தைகளிலிருந்து, 50 கோடி டாலர் மதிப்பிற்கு பங்குகளை விற்பனை செய்தன.
இவ்வாண்டில், இந்திய நிறுவனங்கள், பங்கு வெளியீட்டின் வாயிலாக, 1,000 கோடி டாலர் (50 ஆயிரம் கோடி ரூபாய்) அளவிற்கே, பங்கு வெளியீட்டின் வாயிலாக நிதி திரட்டிக் கொண்டன. இது, கடந்த 2010ம் ஆண்டில், 2,400 கோடி டாலராக (1 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய்) இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நடப்பு 2011-12ம் நிதியாண்டில், மத்திய அரசு, பொதுத் துறை நிறுவனங்களில் கொண்டுள்ள மொத்த பங்கு மூலதனத்தில், குறிப்பிட்ட சதவீத பங்குககளை விற்பனை செய்வதன் வாயிலாக, 40 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயித்திருந்தது.
ஆனால், பங்கு சந்தை சாதகமாக இல்லாததால், பொதுத் துறையில், ஒரு நிறுவனம் மட்டுமே பங்கு வெளியீட்டை மேற்கொண்டது. அதேமயம், ஓ.என். ஜி.சி., செயில், பீ.எச். இ.எல்., ஆகிய நிறுவனங்களின் இரண்டாவது பங்கு வெளியீடு, பல முறை ஒத்திபோடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், எம்.சி.எக்ஸ். நிறுவனம், முதன்முறையாக, பங்கு வெளியீட்டை மேற்கொண்டு மூலதனச் சந்தையில் களம் இறங்க உள்ளது. இந்நிறுவனத்தின் பங்கு வெளியீடு, வெற்றி பெறும் நிலையில், இதர நிறுவனங்களும், புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|