பதிவு செய்த நாள்
14 பிப்2012
01:47

புதுடில்லி:இந்தியாவில், அடுத்த ஐந்தாண்டுகளில், பெட்ரோகெமிக்கல் தொழில் துறை மூலம் பல லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக வாய்ப்புள்ளதாக, "அசோசெம்' அமைப்பு மதிப்பிட்டுள்ளது.இந்தியாவில், பெட்ரோலிய பொருட்களோடு தொடர்புடைய, பெட்ரோகெமிக்கல் தொழில் துறை, ஆண்டுதோறும், 12-15 சதவீதம் என்றளவில் வளர்ச்சியடைந்து வருகிறது. இத்துறையில், அடுத்த ஐந்தாண்டுகளில், 4,000 கோடி டாலர் (2 லட்சம் கோடி ரூபாய்) முதலீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், பல லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக உள்ளன.
பெட்ரோகெமிக்கல் தொழில் துறையில் முதலீடு செய்வதற்கு, அதிக நிதி தேவைப்பட்டாலும், பல முதலீட்டாளர்கள் இதில் முதலீடு செய்வதற்கு தயார் நிலையில் உள்ளனர். இத்துறையில், இந்தியாவிற்கு கடும் போட்டியாக, சீனா, சிங்கப்பூர், மத்திய கிழக்கு நாடுகள் உள்ளன.
இதை கருத்தில் கொண்டு, மத்திய அரசு நாடு முழுவதும் பெட்ரோலியம், ரசாயனம் மற்றும் பெட்ரோகெமிக்கல் முதலீட்டு மண்டலங்களை அமைக்க முடிவு செய்தது. இதன்படி, குஜராத்தில் தாஹேஜ், மேற்குவங்கத்தில் ஹால்டியா, ஒடிசாவில் பரதீப், ஆந்திர பிரதேசத்தில் விசாகப்பட்டினம் ஆகிய நான்கு இடங்களில், இவ்வகை மண்டலங்களை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், கடலூரில் இது போன்ற மண்டலத்தை அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படுகிறது. மேலும், கர்நாடகாவின் மங்களூரிலும், இதுபோன்ற மண்டலத்தை அமைப்பதற்கான திட்டம் துவக்கத்தில் உள்ளது.
ஆந்திர முதலீட்டு மண்டலத்தில், இது போன்ற தொழிற்சாலைகளை அமைக்க இந்துஸ்தான் பெட்ரோலியம், எல்.ஜி.பாலிமர், கோரமண்டல் பெர்டிலைசர், ஆந்திரா பெட்ரோகெமிக்கல்ஸ்,கோதாவரி பெர்டிலைசர் அண்டு கெமிக்கல்ஸ், நாகார்ஜூனா பெர்டிலைசர் அண்டு கெமிக்கல்ஸ் போன்ற முன்னணி நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.கடந்த 2010ல், சர்வதேச அளவில், 2.50 லட்சம் கோடி டாலர் மதிப்பிற்கு, பெட்ரோ ரசாயனப் பொருட்கள் விற்பனையாகியுள்ளன. வரும் 2020ல், ரசாயனத் துறையில் மூன்றில் ஒரு பங்கு வர்த்தகத்தை, ஆசிய நாடுகள் கொண்டிருக்கும் என, அந்த ஆய்வு நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|