பதிவு செய்த நாள்
18 பிப்2012
01:44

நடப்பு 2011-12ம் நிதியாண்டில், ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின், புதிய பிரிமிய வருவாய், கடந்த நிதியாண்டை விட, 15-20 சதவீதம் சரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த 2010-11ம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில், ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் புதிய பிரிமிய வருவாய், 15 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1 லட்சத்து 26 ஆயிரத்து 381 கோடி ரூபாயாக உயர்ந்து காணப்பட்டது.
இதில், பொதுத் துறையைச் சேர்ந்த எல்.ஐ.சி.நிறுவனத்தின் புதிய பிரிமிய வருவாய், 87 ஆயிரத்து 12 கோடி ரூபாயாக (21.65 சதவீதம் வளர்ச்சி) இருந்தது. தனியார் துறையைச் சேர்ந்த காப்பீட்டு நிறுவனங்களின் பிரிமிய வருவாய், 39 ஆயிரத்து 369 கோடி ரூபாயாக (2.59 சதவீதம் வளர்ச்சி) இருந்தது. நாடு முழுவதும், எல்.ஐ.சி., உட்பட 24 ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
பணவீக்கம், வட்டி உயர்வு, பங்கு வர்த்தகத்தில் ஏற்ற, இறக்கம் போன்ற காரணங்களால், இந்நிறுவனங்களின் புதிய பிரிமிய வருவாய் வளர்ச்சி, 15-20 சதவீதம் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.நடப்பு 2011-12ம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான ஒன்பது மாத காலத்தில், ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் புதிய பிரிமிய வருவாய், 17 சதவீத எதிர்மறை வளர்ச்சி கண்டு, 71 ஆயிரத்து 953 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதில், எல்.ஐ.சி. நிறுவனத்தின் புதிய பிரிமிய வருவாய், 15.66 சதவீதம் எதிர்மறை வளர்ச்சி கண்டு, 52 ஆயிரத்து 53 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
இதே காலத்தில், தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் பிரிமிய வருவாயும், 20.34 சதவீத எதிர்மறை வளர்ச்சி கண்டு, 19,900 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது.இதுகுறித்து இத்துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:நடப்பு நிதியாண்டு முடிய, இன்னும் ஒரு மாதமே உள்ளது. இதே நிலை நீடித்தால், இந்நிறுவனங்களின் வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில், 20-25 சதவீதம் வரை குறையக்கூடும். இதில், ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் ஓய்வூதியத் திட்டங்களை குறைந்த அளவிலேயே அறிமுகம் செய்துள்ளன.
இதனால், வரிச் சலுகை பெற விரும்புவோர், மற்ற திட்டங்களில் முதலீடு செய்கின்றனர். மேலும், வரும் 2012-13ம் நிதியாண்டின் முதல் ஆறு மாத காலத்திற்கு பின் தான் இத்துறை இயல்பு நிலைக்குத் திரும்ப வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|