பதிவு செய்த நாள்
18 பிப்2012
01:52

புதுடில்லி:ஒரு டன் வெங்காயத்திற்கான ஏற்றுமதி விலை, 125 டாலராக குறைக்கப்பட்டுள்ளது. எனினும், மேலும் விலையைக் குறைத்தால் மட்டுமே வெங்காய ஏற்றுமதி சூடு பிடிக்கும் என ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.உலக அளவில், வெங்காயம் உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இலங்கை, வங்கதேசம், மலேசியா ஆகிய நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து அதிக அளவில் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
விலை உயர்வு:கடந்த 2010ம் ஆண்டு, வெங்காய உற்பத்தி குறைந்து, சில்லறை விற்பனையில் அதன் விலை, வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்தது. ஒரு கிலோ வெங்காயம் 110 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனையானது. இதையடுத்து, வெங்காயம் ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், சென்ற 2011ம் ஆண்டு, வெங்காயம் உற்பத்தி இயல்பு நிலைக்குத் திரும்பியதையடுத்து, அதன் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது. அதேசமயம், வெங்காயத்திற்கு குறைந்தபட்ச ஏற்றுமதி விலை நிர்ணயிக்கப்பட்டது.
எனினும், விலை அதிகரிப்பு காரணமாக, சர்வதேச சந்தையில், இந்திய வெங்காயத்திற்கான தேவை குறைந்தது. இதையடுத்து, உலக நாடுகளுடன் போட்டியிடும் வகையில், வெங்காயத்திற்கான ஏற்றுமதி விலை, பல கட்டங்களாக குறைக்கப்பட்டது. இருந்தபோதிலும், இந்தியாவின் வெங்காய ஏற்றுமதி, வளர்ச்சி காணவில்லை. கடந்த 2007-08ம் நிதியாண்டில் 1,035 கோடி ரூபாய் மதிப்பிற்கு வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டது.
இது, 2008-09ம் நிதியாண்டில், 1,827 கோடி ரூபாய்(16.70 லட்சம் டன்) என்ற அளவில் வளர்ச்சி கண்டது. அதற்கடுத்த 2009-10ம் நிதியாண்டில் வெங்காய ஏற்றுமதி, அளவின் அடிப்படையில் 16.64 லட்சம் டன்னாக குறைந்தும், மதிப்பின் அடிப்படையில் 1,827 கோடி ரூபாயாக அதிகரித்தும் காணப்பட்டது. சென்ற 2010-11ம் நிதியாண்டில், நாட்டின் வெங்காய ஏற்றுமதி, அளவின் அடிப்படையில் 11.63 லட்சம் டன்னாகவும், மதிப்பின் அடிப்படையில் 1,741 கோடி ரூபாயாகவும் குறைந்துள்ளது.
ஏற்றுமதி விலை:வெங்காய ஏற்றுமதியை அதிகரிக்கவும், விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டும், மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி, கடந்த சில வாரங்களுக்கு முன்பு, ஒரு டன் வெங்காயத்திற்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலை 250 டாலரில் இருந்து 150 டாலராக குறைக்கப்பட்டது.
இது, தற்போது மேலும் 25 டாலர் குறைக்கப்பட்டு 125 டாலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும், பெங்களுர் ரோஸ் மற்றும் கிருஷ்ணாபுரம் வெங்காய வகைகளுக்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலை, டன்னுக்கு 250 டாலர் என்ற அளவிலேயே தொடரும் என அயல்நாட்டு வர்த்தக தலைமை இயக்குனரகம் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெங்காயத்திற்கான ஏற்றுமதி விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும், அதனால் பெரிய அளவில் பயன்பெற முடியாது என ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். நடப்பு பருவம் முடிவடைய உள்ள நிலையில், ஏற்றுமதி விலை குறைக்கப்பட்டுள்ளது. பருவம் தொடங்கியபோது, விலையை குறைத்திருந்தால், நல்ல பலன் கிடைத்திருக்கும் என ஏற்றுமதியாளர் ஒருவர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறும்போது, தற்போது பருவம் முடிய உள்ளதால், சந்தைக்கு வரும் வெங்காயத்தின் ஆயுள் மிக குறைவாகவே உள்ளது. மார்ச் மாதம், புதிய பருவம் தொடங்கிய பிறகே நிலைமை சீராகும் என்று தெரிவித்தார்.மத்திய அரசு, வெங்காயம் உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருள்களை நீண்டகாலம் பாதுகாக்கும் பொருட்டு, நாடு முழுவதும் குளிர்பதன கிடங்குகளை அமைக்குமாறு, மாநில அரசுகளை வலியுறுத்தி வருகிறது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|