பதிவு செய்த நாள்
19 பிப்2012
02:07

புதுடில்லி:சென்ற ஜனவரியில், உள்நாட்டிற்குள் விமான பயணம் மேற்கொண்டோர் எண்ணிக்கை, 53 லட்சத்து 33 ஆயிரமாக அதிகரித்துள்ளது. கடந்தாண்டு இதே மாதத்தில் இந்த எண்ணிக்கை, 49 லட்சத்து 36 ஆயிரமாக இருந்தது. ஆக, கடந்தாண்டு ஜனவரி விட, நடப்பாண்டு ஜனவரியில், விமான பயணம் மேற்கொண்டோர் எண்ணிக்கை, 8.04 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.
பொருளாதார நெருக்கடி:இருப்பினும், நடப்பாண்டு ஜனவரியில், விமான பயணம் மேற்கொண்டோர் எண்ணிக்கை வளர்ச்சி, ஒற்றை இலக்க அளவிற்கு தான் உயர்ந்துள்ளது. இது, 2008ல், சர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி நிலைக்கு பிறகு ஏற்பட்டுள்ள சரிவு நிலையாகும்.கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம், விமானங்களின் எண்ணிக்கையை குறைத்துக் கொண்டதையடுத்து, விமான சேவை துறையில் சற்று பின்னடைவு ஏற்பட்டது. பொதுவாக, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரியில், விமான பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்.இருப்பினும், கடந்தாண்டு ஜனவரியில், விமான பயணம் மேற்கொண்டவர்களின் எண்ணிக்கை வளர்ச்சி, இரட்டை இலக்க அளவிற்கு இருந்தது. கிங்பிஷர் மற்றும் கோஏர் தவிர்த்த, அனைத்து விமான சேவை நிறுவனங்களும், அதிகளவில் பயணிகளை கையாண்டுள்ளன.
சந்தை பங்களிப்பு:குறிப்பாக, ஜெட் மற்றும் ஜெட் லைட் விமான சேவை நிறுவனங்கள், அதிகளவில் பயணிகளை கையாண்டுள்ளன. இதையடுத்து, ஒட்டுமொத்த அளவில் இந்நிறுவனங்கள், பயணிகளை ஏற்றிச் சென்றதில், 25 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளன. மேலும், இவ்விரு நிறுவனங்களும், உள்நாட்டு விமானச் சேவை துறையில், 28.8 சதவீத சந்தை பங்களிப்பை கொண்டு முதலிடத்தை பெற்றுள்ளன.
நடப்பாண்டு ஜனவரி மாதத்தில், விமானங்களில் பயணித்தோர் எண்ணிக்கை, கடந்த டிசம்பரை விட அதிகரித்துள்ளது. இருப்பினும், டிசம்பர் மற்றும் ஜனவரியில், இத்துறை ஒற்றை இலக்க அளவிற்கே வளர்ச்சியை பெற்றுள்ளது.
விமானங்களில், பயணிப்போர் எண்ணிக்கை மற்றும் தேவை அதிகரித்துள்ள அதே நிலையில், பல விமான சேவை நிறுவனங்கள், கூடுதல் இருக்கை வசதிகளுடன் சேவையில் ஈடுபட்டன.இண்டிகோ நிறுவனம், சென்ற ஜனவரியில், 86 சதவீத அளவிற்கு பயணிகளை கையாண்டுள்ளது. அதேசமயம், கடந்த டிசம்பரில், இந்நிறுவனம் 90.4 சதவீத அளவிற்கு பயணிகளை கையாண்டிருந்தது. இதே மாதங்களில், கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின், விமானங்களில் பயணித்தோர் எண்ணிக்கை, 78.3 சதவீதத்திலிருந்து, 70.2 சதவீதமாக குறைந்திருந்தது. இதே மாதங்களில், இதர விமானச் சேவை நிறுவனங்கள் கையாண்ட பயணிகளின் எண்ணிக்கை, 71.2 - 82.5 சதவீதம் என்றளவில் இருந்தது.
பனிப்பொழிவு:நாட்டின் வட மாநிலங்களில், கடும் பனிப்பொழிவு இருந்ததால், சென்ற ஜனவரியில், ஒட்டுமொத்த அளவில், பல நிறுவனங்கள் விமானச் சேவையை ரத்து செய்துள்ளன. இந்த எண்ணிக்கை, 2 சதவீதம் என்றளவில் இருந்தது. இவ்வகையில், ஏர் இந்தியா நிறுவனம், 4.7 சதவீத அளவிற்கு விமான சேவையை ரத்து செய்து, முதலிடத்தில் உள்ளது.
இதைத் தொடர்ந்து, இண்டிகோ நிறுவனம், 0.7 சதவீத அளவிற்கு விமான சேவையை ரத்து செய்திருந்தது. அதிக இடர்பாட்டிற்கு, உள்ளாகியுள்ள கிங்பிஷர் நிறுவனம், 90 சதவீத அளவிற்கு, சரியான நேரத்திற்கு விமானங்களை இயக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இவ்வகையில், ஏர் இந்தியா நிறுவனம், 63.8 சதவீத அளவிற்கு,சரியான நேரத்தில் விமானங்களை இயக்கியுள்ளது. விமானச் சேவை நிறுவனங்கள், புறப்பாட்டிற்கான நேர அறிவிப்பிலிருந்து, 15 நிமிடத்திற்குள் விமானங்களை இயக்குமேயானால், அது சரியான நேரத்தில் இயக்கப்பட்டதாக கருதப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|