பதிவு செய்த நாள்
24 பிப்2012
02:52

புதுடில்லி:நடப்பு 2011-12ம் நிதியாண்டிற்கு, நிர்ணயிக்கப்பட்டுள்ள நேரடி வரி வசூல் இலக்கு எட்டப்படாது என தெரியவந்துள்ளது.நடப்பு நிதியாண்டில், நேரடி வரி வசூல் வாயிலாக, 5 லட்சத்து 32 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டப்படும் என, மத்திய பட்ஜெட்டில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், நடப்பு மாதம் 20ம் தேதி வரையிலுமாக, நிகர நேரடி வரி வசூல், 3 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கே உள்ளது.
எனவே, நடப்பு முழு நிதியாண்டிற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நேரடி வரி வசூல் இலக்கில், 40 ஆயிரம் கோடி ரூபாய் குறையும் என தெரியவந்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, மத்திய நேரடி வரி வாரியம் கூடுதலாக செலுத்தப்பட்ட வரியை திரும்ப அளிப்பதை தாமதப்படுத்தி வருவதாக தெரியவந்துள்ளது.
நடப்பு நிதியாண்டிற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நேரடி வரி வசூல் இலக்கு எட்டப்பட வேண்டுமானால், 20 சதவீதம் என்ற அளவில், வரி வசூல் வளர்ச்சி இருக்க வேண்டும். ஆனால், இதுவரையிலுமாக, செலுத்தப்பட்ட வரி வசூல், 10 சதவீதம் என்ற அளவில் தான் உயர்ந்துள்ளது. இத்துறையின் மதிப்பீட்டின்படி, மொத்த நேரடி வரி வசூலில், 35 ஆயிரம் கோடி ரூபாய் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் செலவினங்கள் மற்றும் மானியச் செலவு அதிகரிப்பால், ஒட்டுமொத்த அளவில், மத்திய அரசுக்கு, அதிக செலவு ஏற்பட்டுள்ளது. ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு, நேரடி வரி வசூல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.இதைக் கருத்தில் கொண்டு, நேரடி வரி வசூல் வாரியம், நடப்பு நிதியாண்டிற்கு செலுத்த வேண்டிய வரியில், 50 சதவீத தொகையை டெபாசிட் செய்யும்படி கேட்டுக் கொண்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
நடப்பு நிதியாண்டில், மத்திய அரசு, பொதுத் துறை நிறுவனங்களில் கொண்டுள்ள மொத்த பங்கு மூலதனத்தில், குறிப்பிட்ட சதவீத பங்குகளை விற்பனை செய்வதன் வாயிலாக, 40 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டிருந்தது. ஆனால், பங்குச் சந்தை நிலவரம் சாதகமாக இல்லாததால், இத்தொகையை மத்திய அரசால் திரட்ட முடியாமல் உள்ளது.
அதேசமயம், மத்திய அரசின் மறைமுக வரி வசூல், சிறப்பான அளவில் உள்ளது. இதற்கு எடுத்துக்காட்டாக, நடப்பு நிதியாண்டில், மறைமுக வரி வசூல் வாயிலாக, 3 லட்சத்து 92 ஆயிரம் கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஜனவரி மாதம் வரையிலுமாக, இவ்வரி வசூல் வாயிலாக, 3 லட்சத்து 17 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டப்பட்டுள்ளது. இது, மொத்த இலக்கில், 81 சதவீதம். பிப்ரவரி மற்றும் மார்ச் ஆகிய இரண்டு மாதங்களில் வசூலாகும் தொகையை சேர்த்தால், இதற்கான இலக்கை தாண்டிவிடும் என கூறப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|