பதிவு செய்த நாள்
08 மார்2012
00:11

மும்பை: நாட்டின் பங்கு வர்த்தகம், புதன் கிழமையன்று அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் மத்திய அரசுக்கு சாதகமாக இல்லாதது, வரும் 16ம் தேதி சமர்ப்பிக்கப்பட உள்ள மத்திய பட்ஜெட் பற்றிய எதிர்பார்ப்பு மற்றும் ரிசர்வ் வங்கி வெளியிட உள்ள நிதிக் கொள்கை போன்றவற்றால் முதலீட்டாளர்கள், பங்குச் சந்தையில் முதலீடு செய்வதை குறைத்துள்ளனர்.சர்வதேச அளவில் பொருளாதார வளர்ச்சியில் சுணக்க நிலை மற்றும் கிரீஸ் நாட்டு கடன் பிரச்னைக்கு நிரந்த தீர்வு காணப்படாதது போன்றவற்றால், ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் மந்தமாகவே இருந்தது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், எண்ணெய், எரிவாயு, மோட்டார் வாகனம், உலோகம், வங்கி, மின்சாரம் உள்ளிட்ட பல துறைகளை சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்திருந்தது. இருப்பினும், விப்ரோ, பஜாஜ் ஆட்டோ, டீ.எல்.எப்., இன்போசிஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகளின் விலை அதிகரித்து காணப்பட்டது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 27.77 புள்ளிகள் சரிவடைந்து, 17,145.52 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 17,239.35 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 17,008.77 புள்ளிகள் வரையிலும் சென்றது. "சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 13 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 17 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் "நிப்டி' 1.95 புள்ளிகள் குறைந்து, 5,220.45 புள்ளிகளில் நிலைபெற்றது. இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 5,243.85 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,171.45 புள்ளிகள் வரையிலும் சென்றது.
பங்கு சந்தைகளுக்கு இன்று விடுமுறை
ஹோலி பண்டிகையை முன்னிட்டு, மும்பை மற்றும் தேசியப் பங்குச் சந்தைகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அன்னியச் செலாவணி, முன்பேர வர்த்தகம் உள்ளிட்ட சந்தைகளும் விடுமுறை அறிவித்துள்ளன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|