பதிவு செய்த நாள்
08 மார்2012
10:46

மதுரை : மதுரை மாவட்டத்தில் நேற்று அமல்படுத்தப்பட்ட ஒருநாள் மின் விடுமுறையால், ரூ.300 கோடி மதிப்பில் வர்த்தகம் பாதித்தது. மின் விடுமுறையிலும், வீடுகளுக்கான வழக்கமான மின்வெட்டு தொடர்ந்தது.
தமிழகத்தில் நிலவும் சுமார் 4,500 மெகா வாட் மின்சார பற்றாக்குறையை சரி செய்ய, நகர் மற்றும் கிராமப்புறங்களில் பல்வேறு கட்டங்களாக மின் வெட்டு அறிவிக்கப்பட்டது. இதற்கு மாற்றாக மண்டலங்கள் வாரியாக தொழிற்சாலைகளுக்கு வார மின் விடுமுறை அறிவிக்கப்பட்டது. மதுரை மாவட்டத்தில் நேற்று இந்த மின் விடுமுறை அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் வீடுகளுக்கான, வழக்கமான மின் வெட்டும் பல்வேறு கட்டங்களாக அமல்படுத்தப்பட்டன.
இதுகுறித்து தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன் கூறியதாவது: நாள் ஒன்றுக்கு 10 மணி நேரம் வரை மின் வெட்டு செய்யப்படுவதால் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்றன. இதை சரிசெய்ய இன்னும் பல ஆண்டுகள் ஆகும். தொழிற்சாலைகளுக்கு மின் விடுமுறை அறிவிக்கப்பட்டும், மின்தடை செய்யப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மின்வெட்டால் பிளாஸ்டிக், ரப்பர் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கிறது. மின்விடுமுறை அமல்படுத்தினால், மற்றவர்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை கண்டிப்பாக மின் தடை இருக்க கூடாது. மின்சாரத்தின் தேவை ஆண்டுக்கு 10 சதம் அதிகரிக்கிறது. மின் பகிர்மானத்தின் போது தமிழகத்தில் 18.7 சதம் மின் இழப்பு ஏற்படுகிறது. இதற்கு நவீன உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டால் இந்த இழப்பை குறைக்கலாம். நேற்று அமல்படுத்திய மின் விடுமுறையால் மட்டும் மதுரை மாவட்டத்தில் ரூ.300 கோடி வரை வர்த்தகம் பாதித்துள்ளது. இதற்கு கூடங்குளம் அணுமின் திட்டம் தான் ஒரே தீர்வு என்றார்.
"மடீட்சியா' தலைவர் மணிமாறன்: மின்வெட்டு பிரச்னையால் சிறு, குறுந்தொழில்கள் முடங்கியுள்ளன. "வாட்' மற்றும் கலால் வரிகள் விதிப்பால் மேலும் தொழில்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மூலப் பொருள்கள் வாங்கும்போதும், தயாரித்த பொருள்களை விற்பனை செய்யும்போதும் இருமுறை வரி செலுத்த வேண்டியுள்ளது. இதே நிலை டீசலுக்கும் பொருந்தும். எனவேதான் 1,200 மெகா வாட் மின்சாரம் அளவுக்கு ஜெனரேட்டர்களை இயக்க வசதி இருந்தும் அவைகள் இயக்கப்படாமல் உள்ளன. மின் விடுமுறை அமல்படுத்தினால் வழக்கமான மின் வெட்டு கூடாது என வலியுறுத்தினோம். ஆனால் இப்போது "இரட்டை சுமை'யாகிவிட்டது.
"டான்சியா' தலைவர் ஞானசம்பந்தன்: அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் தொழில் பாதிக்கிறது என்பதற்கு பதில்தான் வார மின் விடுமுறை கொண்டுவரலாம் என தெரிவிக்கப்பட்டது. இப்போது மின் விடுமுறையும் வழக்கமான மின்வெட்டும் அமல்படுத்தப்படுவதால் அனைத்து தொழில்களிலும் கூடுதல் நஷ்டம் ஏற்படும். வாடகை, வங்கி கடனுக்கான வட்டி, தொழிலாளர்களுக்கு சம்பளம் போன்றவை கொடுக்க முடியாமல் தொழில் அதிபர்கள், தொழில்முனைவோர்கள் திண்டாடி வருகின்றனர்.
எனவே, ரிசர்வ் வங்கியை அணுகி வட்டியை தள்ளுபடி செய்யவும், வங்கிக்கு திருப்பி செலுத்த வேண்டிய தவணையை 6 மாதங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும் (ரீ பேமெண்ட் ஹாலிடே), மின் தட்டுப்பாடு நீங்கும் வரை டீசலுக்கு மானியம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளோம்.
தமிழ்நாடு உணவுபொருள் வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்.பி.,ஜெயப்பிரகாசம்: தொழில் நிறுவனங்களுக்கு 24 மணி நேர மின்விடுமுறையால், உற்பத்தி இழப்பு தவிர்க்க முடியாதது. ஒரு நாளைக்கு ஒரு மாவட்டத்தில் ரூ.25 கோடி மதிப்பில் உற்பத்தி இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளன. தமிழகம் முழுவதும் 6 நாட்கள் மின்விடுமுறையால், 20 சதவீத உற்பத்தி இழப்பு ஏற்படும். விலைவாசி உயரும். குஜராத், மகாராஷ்ட்ரா மாநிலங்களில் இருந்து உற்பத்தி பொருள்கள் தமிழகத்திற்கு வர வாய்ப்புகள் உள்ளன. தொழில் நசியும்.
இந்திய தொழிற்கூட்டமைப்பு கிளை தலைவர் ஷியாம் பிரகாஷ் குப்தா: தொழிற்சாலைகளுக்கு ஒரு நாள் மின்விடுமுறை விடப்படுவதால், மற்ற பகுதிகளுக்கு தடையில்லா மின்வசதி கிடைக்கும் என எதிர்பார்த்தது நிறைவேறவில்லை. தொழிற்சாலைகளுக்கு 71.5 சதவீத மின்சாரம் தடைபடுவதால், உற்பத்தி பாதிப்பு தவிர்க்க முடியாது. தொழிலாளர்களுக்கு வேலை வழங்க முடியாது. சிறு தொழில்கள் பாதிக்கப்படும். இருப்பினும் ஒரு வாரத்திற்கு பிறகு, மின்விடுமுறையால் ஏற்படும் பாதிப்பு தெரிய வரும். இவ்வாறு கூறினர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|