பதிவு செய்த நாள்
17 மார்2012
00:30

2012-13ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், மின்சாரத் துறையை வளப்படுத்துவதற்கும், மின்சார பிரச்னைகளை தீர்ப்பதற்கும் தேவையான, எந்த அறிவிப்புகளும் வெளியிடப்படவில்லை. அதனால், இந்தியாவில் மின்சார தட்டுப்பாடும், நெருக்கடியும் தொடர் கதையாகு@மா என்ற அச்சம் எழுந்துள்ளது.
வரி விதிப்பும், விலக்கும்:ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின், 2012-13ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நேற்று தாக்கலானது. இதில், பல்வேறு பிரிவுகளுக்கு வரி விலக்கும், பல்வேறு பிரிவுகளுக்கு வரி விதிப்பும் இருந்தது. ஆனால், குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும் அறிவிப்புகள் இல்லை.
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது, மின்சாரம், போக்குவரத்து ஆகியவற்றை சார்ந்து தான் அமையும். மின்சாரத்தில் தன்னிறைவு பெற்றால் மட்டுமே தொழிற் துறைகள் பெருகி, உள்நாட்டு பொருளாதார வளர்ச்சிக்கு வழி ஏற்படும்.இந்தியாவில், கடுமையான மின் தட்டுப்பாடு உள்ளது. குறிப்பாக இந்திய மின் நிலையங்கள் பெரும்பாலும், நிலக்கரியை நம்பியே உள்ளன. உள்நாட்டிலுள்ள நிலக்கரி, மின்சார உற்பத்திக்கு திறன் குறைந்ததாகவும், தேவைக்கு குறைவாகவும்தான் உள்ளன.
அதனால் தான், வெளிநாடுகளிலிருந்து அதிக திறனுடைய நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது.இந்நிலையில், பட்ஜெட்டில், 'வெளிநாட்டு நிலக்கரி இறக்குமதிக்கு, ஐந்து சதவீதமாக இருக்கும் சுங்கவரியை ரத்து செய்வதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது. இது யானைப்பசிக்கு சோளப்பொறியை தூவியது போன்றதாகும்.
இந்த சலுகையும், இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே வழங்கப்படும் எனவும், 2015ம் ஆண்டுக்குள் துவங்கப்படவுள்ள மின் திட்டங்களுக்கு மட்டுமே, இந்த சலுகை அடிப்படையில் ஒப்பந்தம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், இரண்டு ஆண்டுகளுக்கு பின், சலுகை இருக்குமா என்பது பெரும் கேள்விக்குறியை உள்ளடக்கியுள்ளது.
சூரிய மின் சக்தி:இந்த அறிவிப்பால், அனைத்து தனியார் மற்றும் மாநில அரசுகளின் மின் நிறுவனங்கள், உடனடியாக பலன் அடைந்தாலும், வருங்காலங்களில் வெளிநாட்டு நிலக்கரி இறக்குமதிக்கு கூட, மத்திய அரசை சார்ந்தே இருக்க வேண்டிய நிலை ஏற்படும்.இதேபோல், மின் நிறுவனங்களுக்கான இயற்கை எரிவாயு, யுரேனியம் எரிபொருள் போன்றவற்றை இறக்குமதி செய்யவும், வரி விலக்கு தரப்பட்டுள்ளது. அணு எரிபொருளை பொறுத்தவரை, மத்திய அரசு மட்டுமே இறக்குமதி செய்யும். எனவே, மாநில நிறுவனங்களுக்கு இதில் பலனில்லை.
சூரியசக்தியில் அனல்மின் திட்டங்கள் அமைக்க தேவையான தொழில்நுட்பக் கருவி களுக்கு வரி விலக்கு தருவதாக, அரசு அறிவித்துள்ளது. இதற்கு, சூரியசக்தி உற்பத்தி யாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு உள்ளது. சூரியசக்தியில் சீன நிறுவனங்களை, இந்தியாவுக்கு சந்தைப்படுத்த ஏற்படுத்திய மறைமுக வழி என்றே கருதப்படுகிறது. அதனால், உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவர்.
மேலும், சூரியசக்தி மின் உற்பத்தியே இந்தியாவில் இன்னும் வலுப்பெறாத நிலையில், அதற்கு விதி விலக்கு தந்திருப்பது யாருக்கும் எந்த பயனையும் தராது. பொதுமக்கள், மாநில அரசுகள், கல்வி நிறுவனங்கள், தனியார் தொழிற்சாலைகள் ஆகியவை, சூரியசக்திக்கு மாறும் வகையில், மத்திய அரசு கூடுதல் மானியமோ, சலுகையோ அளிக்கவில்லை. மாறாக போகாத ஊருக்கு வழி காட்டும் அறிவிப்பைதான் வெளியிட்டுள்ளது.
இதேபோல், மின்சாரத்துறையில் முன்னேற, வெளிநாட்டிலிருந்து வாங்கும் கடன்களுக்கு, 20 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக வரியை குறைத்து அறிவித்துள்ளது. இந்த முயற்சி, இந்திய மின்சார நிறுவனங்களை வளப்படுத்துகிறதா இல்லையா, என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க @வண்டும்.
தென்மாநில புறக்கணிப்பு:இதுதவிர, தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களை மின்சார நெருக்கடியில் தவிக்க வைக்கும் மின்தொடர் பிரச்னைக்கு, பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் இல்லை. வட மாநில மின்தொடர்களுடன், தென் மாநில மின்தொடரை சமமாக இணைத்து, இயக்குவதற்குரிய திட்டங்கள் இல்லை. ஆண்டுக்கணக்கில், எதிர்பார்க்கப்படும் தென் மாநில மின்தொடரை வலுவாக அமைப்பதற்கான, அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டிலும் கனவாகவே மாறி விட்டது. மாநிலங்களிலுள்ள மின் நிறுவனங்களின் கடன்களை குறைக்கவும், கூடுதல் மின்சாரம் வழங்குவது தொடர்பாகவும் தொலைநோக்கு திட்டங்கள் இல்லை.
இறக்குமதி:இதேபோல், மத்திய அரசின் மூலம் மாநில மின்துறைகளுக்கு எந்தவகையில் உதவிகள் செய்வது, மாநிலங்களின் மின் திட்டங்களுக்கு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விலக்கு, உள்நாட்டில் தயாராகும் மின் உற்பத்தி பொருட்களுக்கு விலையில் சலுகை, மத்திய அரசு மூலம் நிலக்கரியை குறைந்த விலைக்கு வாங்கித்தருவது போன்ற அறிவிப்புகள் இல்லை.
மாநிலங்களுக்கு இடையிலான பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ள மின் திட்டங்களை மீண்டும் துவங்குவது குறித்து தீர்வு காணப்படுமா என்பதையும் சொல்லவில்லை.இதேபோல், மத்திய பவர் பைனான்ஸ் நிறுவனம் மற்றும் பொதுத்துறை வங்கிகள் மூலம், நலிவடைந்துள்ள மாநில மின்சார நிறுவனங்களுக்கு, குறைந்த வட்டிக்கு கடன் அளித்து கை தூக்கி விடுவதற்கான அறிவிப்புகள் இல்லை. மொத்தத்தில் மின்துறையை இருளிலிருந்து வெளிச்சத்திற்கு கொண்டு வருவதற்கான திட்டங்கள் இல்லாத 'பவர்கட்' பட்ஜெட்டாகவே, மத்திய பட்ஜெட் கருதப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|