பதிவு செய்த நாள்
01 ஏப்2012
00:27
மத்திய பட்ஜெட்டில், கலால் வரி 10 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தப்பட்டதை அடுத்து, ரெப்ரிஜிரேட்டர். "ஏசி' உள்ளிட்ட வீட்டு உபயோக சாதனங்களின் விலை உயர்ந்துள்ளது.கோத்ரெஜ்கோத்ரெஜ் நிறுவனத்தின் "ஏசி' சாதனங்களின் விலை, 500 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. வேர்ல்பூல் நிறுவனத்தின் "ஏசி', ரெப்ரிஜிரேட்டர் சாதனங்களின் விலை 200 - 300 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.எல்.ஜி., மற்றும் சாம்சங் நிறுவனங்களும் அவற்றின் சாதனங்களுக்கான விலையை உயர்த்தத் திட்டமிட்டுள்ளன. எல்.ஜி., நிறுவனம், அதன் பலதரப்பட்ட மின்னணு சாதனங்களின் விலையை உயர்த்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சாம்சங் நிறுவனம், சந்தை நிலவரத்தைப் பொறுத்து, விலையை உயர்த்த முடிவு செய்துள்ளது.வீடியோகான் நிறுவனம், வரும் 15ம் தேதிக்குப் பிறகு, அதன் சாதனங்களின் விலையை உயர்த்துவது குறித்து பரிசீலிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளது.
வீட்டு உபயோக சாதனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பெரும்பாலான நிறுவனங்கள், கலால் வரி உயர்வை, நுகர்வோர் தலையில் சுமத்தத் திட்டமிட்டுள்ளன.
லாப வரம்பு:இது குறித்து, கோத்ரெஜ் அப்ளையன்சஸ் நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி ஜார்ஜ் மெனசஸ் கூறும்போது,"கடந்த ஓராண்டில் மூலப்பொருள்களின் விலை 10 சதவீதம் உயர்ந்துள்ளது. சென்ற ஆண்டு ஆகஸ்ட் முதல் நடப்பாண்டு ஜனவரி வரை, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு 20 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. நடுவில் சற்று ஏற்றம் கண்டு, பின்னர் மீண்டும் சரிவடைந்துள்ளது. ஒட்டு மொத்தமாக, சென்ற ஆண்டு 7-8 சதவீதம் உற்பத்திச் செலவினம் அதிகரித்துள்ளது. இத்தகைய சூழலில், வரி உயர்வு சுமையும் சேர்ந்துள்ளதால், சாதனங்களின் விலையை உயர்த்துவதைத் தவிர வேறுவழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது' என்றார்.சென்ற 2011-12ம் நிதியாண்டின், இறுதி ஒன்பது மாதங்களில் நுகர்வோர் சாதனங்கள் தயாரிப்பு நிறுவனங்களின் லாபவரம்பு 1-2 சதவீதம் சரிவடைந்துள்ளது.
பிளாட் பேனல் "டிவி':தற்போது "ஏசி', ரெப்ரிஜிரேட்டர் உள்ளிட்ட சாதனங்களின் விலை உயர்ந்துள்ள போதிலும், "டிவி' விலை உயரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, பிளாட் பேனல் "டிவி' க்களின் விற்பனை சிறப்பாக இருப்பதால், அவற்றின் விலை உயரவில்லை. கடந்த சில ஆண்டுகளாக, இவ்வகை "டிவி' க்களின் விற்பனை, ஆண்டுக்கு 30-40 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. தற்போது, இவ்வகை "டிவி' க்களின் விற்பனை, ஆண்டுக்கு 40 லட்சமாக உள்ளது. இது, நடப்பாண்டு 50 லட்சத்தைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த இரண்டு ஆண்டுகளாக, தொழில்நுட்ப மேம்பாடு காரணமாக, பிளாட் பேனல்கள் விலை குறைந்திருந்தது. இதனால், இந்த பேனல்களைக் கொண்டு "டிவி' தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் லாபவரம்பு அதிகரித்துக் காணப்பட்டது. குறிப்பாக, சென்ற ஓராண்டில் பேனல்களின் விலை 10 -15 சதவீதம் வரை குறைந்துள்ளது. இதனால், பிளாட் "டிவி' க்களை குறைந்த விலைக்கு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.
சந்தையில், குறைந்தபட்ச வசதிகளைக் கொண்ட எல்.சி.டீ., "டிவி' 14 ஆயிரம் ரூபாயில் இருந்து 15 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கிறது. இதே வகையிலான எல்.இ.டீ., "டிவி' 16 ஆயிரத்தில் இருந்து 17 ஆயிரம் ரூபாய் வரை உள்ளது.இந்நிலையில், மத்திய பட்ஜெட்டில், எல்.சி.டீ., மற்றும் எல்.இ.டீ., பேனல்களுக்கான இறக்குமதி வரி முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. பிளாட் பேனல் "டிவி' தயாரிப்புச் செலவில் பெரும்பகுதி, பேனல்களுக்காக செலவிடப்படுகிறது. தற்போது இவற்றின் இறக்குமதிக்கான சுங்கவரி நீக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என வீடியோகான் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் இயக்குனர் அனிருத் தூத் தெரிவித்துள்ளார்.பல நிறுவனங்கள், சுங்க வரி விலக்கின் மூலம் பெறும் பலனை, நுகர்வோருக்கு அளிக்க உள்ளன. இதனால், பிளாட் பேனல் "டிவி' க்களின் விலை மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|