பதிவு செய்த நாள்
01 ஏப்2012
14:18

பொங்கலூர்: புகையிலை உற்பத்தியில் சரிவு ஏற்பட்டுள்ளதால், விலை குறைந்துள்ளது. இதனால் வியாபாரிகள் கவலையில் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன், பொங்கலூர் வட்டார பகுதிகளில், புகையிலை விவசாயம் அமோகமாக நடந்தது. இப்பகுதியில் விளையும் புகையிலை, கொடுவாய் சுற்றுவட்டார பகுதியில் உள்ள குடோன்களுக்கு அனுப்பப்பட்டு, அங்கு பதப்படுத்தப்பட்டன. அவை அங்கிருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பப்பட்டன. புகையிலை பதப்படுத்தும் தொழிலில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டனர்; தற்போது, புகையிலை சார்ந்த தொழில்களுக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், புகையிலை தொழில் நலிவடைந்துள்ளது. புகையிலை கசப்புத் தன்மையுடன் இருப்பதால், தோட்ட வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை; சரியான விலையும் கிடைப்பதில்லை; புகையிலை சாகுபடி செய்வதை பெரும்பாலான விவசாயிகள், கைவிட்டு வருகின்றனர்.
உள்ளூரில் புகையிலை விவசாயம் நின்று விட்டதால், வியாபாரிகள் தென் மாவட்டங்களுக்குச் சென்று பச்சை புகையிலையை வாங்கி வருகின்றனர். வியாபாரிகள் ஓராண்டு தேவைக்கான புகையிலையை அறுவடை சீசனில் மொத்தமாக வாங்கி இருப்பு வைத்து பதப்படுத்தி விற்பனை செய்கின்றனர். பச்சை புகையிலை கொள்முதல் விலை, ஒரு டன் 5,500 ரூபாயாக உள்ளது. பதப்படுத்தப்பட்ட புகையிலை தண்டுப்பகுதி கிலோ 150 ரூபாய்க்கும், இலை ஒரு கிலோ 35 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. தற்போது, புகையிலை சார்ந்த பொருட்களை பயன்படுத்த எதிர்ப்பு வலுத்து வருவதாலும், மக்களிடம் ஏற்பட்ட விழிப்புணர்வாலும் புகையிலை விற்பனை மந்தமாக உள்ளது; புகையிலை பொருட்கள் விலையும் சரிவடைந்து வருகிறது. தொழில் பாதிக்கப்பட்டு தொழிலாளர்களும், தொழில் முனைவோரும் பாதிக்கப்படுகின்றனர்.
வியாபாரிகள் கூறுகையில், "கொடுவாய் பகுதியில் ஐம்பதுக்கும் மேற்பட்ட குடோன்கள் இருந்தன. தொழிலில் ஏற்பட்ட நெருக்கடியால், தொழில் செய்ய முடியாமல், பலரும் கைவிட்டு விட்டனர்; குடோன்களை பலரும், லீசுக்கு விட்டுள்ளனர். தற்போது, சில குடோன்கள் மட்டுமே செயல்படுகிறது. முன்பு கேரளாவில் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் புகையிலை சார்ந்த பொருட்களை அதிகமாக உபயோகித்ததால், கேரளாவில் விற்பனை வாய்ப்பு நன்றாக இருந்தது. தற்போது, இளைஞர்களிடம் புகையிலை சார்ந்த பொருட்களை வாங்கும் ஆர்வம் குறைந்து வருவதால் விற்பனை சரிந்துள்ளது. இதனால், சரியான விலையும் கிடைப்பதில்லை,' என்றனர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|