பதிவு செய்த நாள்
21 ஏப்2012
06:54

சென்னை: நடப்பு 2012-13ம் நிதியாண்டில், தமிழகத்தின், உணவு தானிய உற்பத்தி 120 லட்சம் டன்னாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, சென்ற நிதியாண்டில் 106 லட்சம் டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.பயிரிடும் பரப்பளவு:வேளாண் உற்பத்தியை அதிகரிக்க தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளால் உணவு தானிய உற்பத்தி பெருகும் என கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பயிரிடும் பரப்பளவை அதிகரித்தல், உற்பத்தியைப் பெருக்குதல், மண்ணை வளப்படுத்துதல், பாசன வசதி, வீரிய விதைகள் மற்றும் இடுபொருள்களின் வினியோகத்தைச் சீரமைத்தல் போன்ற செயல்பாடுகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால், வேளாண் விளைச்சல் அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பாசன வசதிகளை ஏற்படுத்துவதன் மூலம், தரிசு நிலங்களில் ஓரளவு பகுதியையாவது விளைநிலமாக மாற்றவும், நிலங்களை ஆய்வு செய்து, அவற்றுக்கேற்ற பயிர் வகைகளை விளைவிக்கவும், உரமிடவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.அந்தந்த பயிர்களுக்கு தகுந்தாற் போல், திட்டங்கள் வகுக்கப்பட்டு உற்பத்தியை அதிகரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உதாரணமாக, நவீன தொழில்நுட்பத்தின் மூலம், இடுபொருள் செலவினத்தைக் குறைத்து, அதிக அளவில் தண்ணீர் தேவைப்படும் நெல் விளைச்சலை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. முளைப்பயிறு வகைகளின் பயிரிடும் பரப்பளவை அதிகரிப்பதன் வாயிலாக, அவற்றின் உற்பத்தி அதிகரிக்கப்பட உள்ளது. அதுபோன்று, பருப்பு வகைகளின் விளைச்சலை அதிகரிக்கவும்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதே போன்று, கரும்பு, பருத்தி, எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியை உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.ஆள் பற்றாக்குறையைச் சமாளிக்க, வேளாண்மை சாகுபடிக்கு இயந்திரமயமாக்கும் நடவடிக்கைகளுக்கும் அரசு ஊக்கமளித்து வருகிறது. இதன்படி, விவசாயிகள், சுயஉதவிக் குழுவினருக்கு வேளாண் இயந்திரங்கள், சாதனங்கள் ஆகியவற்றை வாங்க அரசு மானியம் வழங்குகிறது. மேலும், இவ்வகை இயந்திரங்களை அரசே வாங்கி, விவசாயிகளுக்கு குறைந்த வாடகைக்கு வழங்குகிறது.
உற்பத்தி அதிகரிக்கும்:இத்தகைய நடவடிக்கைகளால், நடப்பு நிதியாண்டில் தமிழகத்தின் உணவு தானிய உற்பத்தி கடந்த நிதியாண்டை விட அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, நடப்பு நிதியாண்டில், நெல் பயிரிடும் பரப்பளவு 22 லட்சம் ஹெக்டேராகவும், நெல் உற்பத்தி கடந்த நிதியாண்டை விட 9 சதவீதம் உயர்ந்து 86.5 லட்சம் டன்னாகவும் உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.முளைப்பயிறு வகைகளின் பயிரிடும் பரப்பளவு 11 லட்சம் ஹெக்டேராகவும், உற்பத்தி 17 சதவீதம் உயர்ந்து 26.95 லட்சம் டன்னாகவும் இருக்கும்.பருப்பு வகைகளின் பயிரிடும் பரப்பளவு 10.4 லட்சம் ஹெக்டேராகவும், உற்பத்தி 50 சதவீதம் உயர்ந்து 6.55 லட்சம் டன்னாகவும் உயரும்.
இந்த மூன்று முக்கிய விளைபொருட்களை உள்ளடக்கிய உணவு தானியங்களின் மொத்த பயிரிடும் பரப்பளவு 43.4 லட்சம் ஹெக்டேராகவும், உணவு தானிய உற்பத்தி 13 சதவீதம் உயர்ந்து 120 லட்சம் டன்னாகவும் உயரும்.எண்ணெய் வித்துக்கள் இதே காலத்தில், எண்ணெய் வித்துக்கள் பயிரிடும் பரப்பளவு 6.6 லட்சம் ஹெக்டேராகவும், உற்பத்தி 23 சதவீதம் உயர்ந்து 15 லட்சம் டன்னாகவும் இருக்கும். பருத்தி பயிரிடும் பரப்பளவு 1.55 லட்சம் ஹெக்டேராகவும், பருத்தி உற்பத்தி 36 சதவீதம் உயர்ந்து 4.2 லட்சம் பொதிகளாகவும் இருக்கும். கரும்பு சாகுபடி பரப்பளவு 3.6 லட்சம் ஹெக்டேராகவும், உற்பத்தி 21 சதவீதம் அதிகரித்து 494 லட்சம் டன்னாகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|